இலங்கை :ரம்புக்கனையில் நடந்தது என்ன?

ரம்புக்கனையில் நடந்தது என்ன?

ரம்புக்கனையில் நடந்தது என்ன?

கோட்டா அரசுக்கு எதிராக பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டகாரர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ரம்புக்கனை பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூடுவரை சென்றிருந்து.

முச்சக்கர வண்டி ஒன்று எரிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது சிலர் தீவைக்க முற்பட்டதனாலேயே காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் குறித்த முச்சக்கர வண்டிக்கு காவல்துறையை சேர்ந்தவர்களே தீவைத்து ஆர்ப்பாட்டத்தை வன்முறையாக மாற்ற முற்பட்டிருந்ததாக இன்றைய தினம் பாராளமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான தெளிவான காணொளி ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வன்முறை சம்பவத்தை கட்டுப்படுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் செய்வதானால் முதலில் வானத்தை நோக்கி சுடப்பட வேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லையெனில் முழங்காலுக்கு கீழாகவே சூடு நடத்தப்பட வேண்டும். இருப்பினும் ஒருவரது உயிரை பறிக்கும் வகையிலும் பலர் காயமடையும் வகையிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளமை காவல்துறையினரது அராஜகத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிக்கிய 13 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர்கள் 15 பேரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சாமிந்த லக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ரம்புக்கனையில் நடந்தது என்ன?

ரம்புக்கனையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள கடந்த சில தினங்களாகவே நீண்ட வரிசை காணப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரிக்கும் வரை இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை வழங்காமல் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தி நேற்று முன்தினம் அதிகாலை மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

விலை அதிகரிக்கப்படும் வரையில் எரிபொருள் பௌசரை குறித்த நிரப்பு நிலையத்திற்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.

எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்திற்கு ரம்புக்கனை மற்றும் அதனை அண்மித்த பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்ததுடன், நேற்று (19) காலை 7 மணியளவில் ரயில் வீதியையும் மறித்தனர்.

காவல்துறையினர் தலையிட்டதையடுத்து காலை 11.30 அளவில் எரிபொருள் பௌசரொன்று ரம்புக்கனை நகரை அண்மித்தது.

அதிகரித்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய விரும்பவில்லை எனவும் பௌசரை மீண்டும் திரும்பி செல்லுமாறும் மக்கள் வலியுறுத்தினர்.

ரயில் வீதியில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த பௌசரின் சாரதியை அங்கிருந்து வௌியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் ரயில் வீதியையும் பிரதான வீதியையும் மறித்த மக்கள் சில மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், மற்றுமொரு எரிபொருளை ஏற்றிய பௌசர் ரம்புக்கனை நகரை அண்மித்திருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியின் பின்னர் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இரண்டு எரிபொருள் பௌசர்களும் நிரப்பு நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களும் அதனை சூழ்ந்துகொண்டனர். இதனையடுத்து, காவல்துறையினரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்டது.

கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, காவல்துறையினர் பிரதான வீதிக்கு வந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கினர்.

இந்த சம்பவங்களின் பின்னர் எரிபொருள் பௌசர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் பின்னர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நேற்றிரவு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதைணடுத்து ரம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊரடங்கு பிறிப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News