இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இலங்கை பேச்சு

சுமார் 4 வருடங்களுக்கு பின்னர், இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை  தெரிவித்துள்ளது.

22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை தற்போது, மோசமான நிதி நெருக்கடியின் மத்தியில் உள்ளது. கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் இது ஏற்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தாய்லாந்தின் அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர்.

இதனை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கான இலங்கையின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி தரவுகளின்படி தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2021 இல் சுமார் 460 மில்லியன் டொலர்களாகும்.

இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தில் தலா 5 பில்லியன் டொலர்களைக் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நாடுகளுடனான ஒப்பந்தங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முடிக்கப்பட வேண்டும் என்பதே தமது முக்கிய குறிக்கோள் என்று கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார்.