உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்- ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்  பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை நிலைநாட்டவேண்டும் நீதியை நிலைநாட்டவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையான இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அவர்களின் குடும்பத்தவர்களின் துயரத்தினை  எவ்வளவு பெரிய இழப்பீட்டினாலும் ஈடுசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு  பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி இழப்பீட்டிற்கான உரிமைகளை அங்கீகரிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் முன்னோக்கிய ஒரு படியை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடின்மை மற்றும் கண்காணிப்பின்மை குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள லோரன்ஸ் தாக்குதல் எவ்வேளையும் தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு பிரிவினர்  தகவல் வழங்கியபோதிலும் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டினை பெறுவதை இலங்கை அரசாங்கம்  உறுதி செய்யவேண்டும் நிதிகளை வழங்கும்போது பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசனை செய்யவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அதிகாரிகளிற்கான மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள லோரன்ஸ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளின் முடிவுகளை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.