ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு வலுவான முன்னேற்றம் அவசியம் -இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம் குறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கண்காணிப்புப்பொறிமுறை மற்றும் அதில் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருப்பதுடன் அவ்வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை பூர்த்திசெய்யவேண்டிய கடப்பாட்டில் வலுவான முன்னேற்றம் அடையப்படவேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய மற்றும் இலங்கை செயற்பாட்டுக்குழுவின் 6 ஆவது கூட்டம் கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறும் வழமையான இருதரப்புக் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பினதும் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

மேலும் இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மையகால நிலைவரம் குறித்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருத்தமானதும் சட்டரீதியானதுமான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் நல்லிணக்க செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருதரப்பினரும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது குறித்துப் பேசப்பட்டதுடன் மனித உரிமைகள் பேரவையுடனும், அதன் பொறிமுறையுடனும் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியது.

அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கண்காணிப்புப்பொறிமுறை மற்றும் அதற்கு அவசியமான காரணிகள் குறித்துத் தெளிவுபடுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அவ்வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை பூர்த்திசெய்யவேண்டிய கடப்பாட்டில் வலுவான முன்னேற்றம் அடையப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.