Tamil News
Home செய்திகள் சுயாதீன உள்ளகப்பொறிமுறையின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்க உறுதி

சுயாதீன உள்ளகப்பொறிமுறையின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்க உறுதி

சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றது.

அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது என்று ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் இன்று (08) புதன்கிழமை இலங்கை நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே ஹிமாலி அருணதிலக மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை அரசாங்கமானது நாட்டுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது.

அண்மையகாலங்களில் நாடு முகங்கொடுத்திருக்கும் சமூக – பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உபகட்டமைப்புக்களுடன் இலங்கை அரசாங்கம் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது.

குறிப்பாக கடந்த பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட 4 ஆவது உலகளாவிய காலாந்தர மீளாய்விலும் இலங்கை முனைப்புடன் பங்கெடுத்துக்கொண்டது.

அதேபோன்று சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்துக்கான அறிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்கள் கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வருடத்தை சமூக – பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான ஆண்டாகவே இலங்கை கருதுகின்றது. கடந்த ஆண்டு மிகமோசமான பொருளாதார நெருக்கடியினால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி இந்த நெருக்கடியிலிருந்து வெகுவிரைவில் நிரந்தரமாக மீள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமூக – பொருளாதாhர உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதிலும், மீட்சியை நோக்கிப் பயணிப்பதிலுமே அரசாங்கம் விசேட கவனம்செலுத்தியது. அதனை சர்வதேச நாணய நிதியத்துடனும் ஏனைய சர்வதேசப்பங்காளிகளுடனும் இணைந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை வலுப்படுத்தப்பட்டது.

அதேபோன்று இவ்வாண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் ஊடாக தேர்தலின்போதான அநாவசிய செலவினங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன், அச்செலவினங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022 மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக சுயாதீன உள்ளகப்பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமைகளையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதில் இலங்கை முன்னின்று செயலாற்றிவருகின்றது. அதற்கமைய அரசியலமைப்பின் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பது குறித்தும், இலங்கைக்குப் பொருந்தக்கூடிய முறை எதுவென்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.

அந்த ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இணங்கியிருப்பதுடன், அதற்குரிய சட்டவரைபைத் தயாரிப்பதற்கான அமைச்சரை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு அதன் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் விசாரணை செயன்முறைகள், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நிதி ஒதுக்கீடு, வட-கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணிவிடுவிப்பு, நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்ட சர்வகட்சிக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஹிமாலி அருணதிலக மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version