Home செய்திகள் IMF இன் நிபந்தனைகளால் நெருக்கடிக்குள் இலங்கை -மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன்

IMF இன் நிபந்தனைகளால் நெருக்கடிக்குள் இலங்கை -மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன்

WhatsApp Image 2023 02 24 at 8.56.13 PM IMF இன் நிபந்தனைகளால் நெருக்கடிக்குள் இலங்கை -மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை மூத்த பேராசிரியர் எஸ்.விஜயச்சந்திரன் இலக்கு நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி….

கேள்வி:- இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:-

இலங்கையானது இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடவில்லை.அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.பொருளாதாரம் தொடர்பாக ஒரு சில பிரச்சினைகள் இப்போது தற்காலிகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.உதாரணமாக எரிபொருள் வரிசை, எரிவாயு தொடர்பான பிரச்சினைைகள் என்பன தற்காலிக தீர்வினை எட்டியுள்ளன.கிடைப்பனவுகள் ஓரளவு இருந்தபோதும் மக்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பு இன்னும் தீர்த்து வைக்கப்படாத ஒரு நிலையிலேயே காணப்படுகின்றது.

அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டண உயர்வு மற்றும் புதிய வருமானவரி போன்ற பலவும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதோடு, வாழ்க்கை தரத்தின் மீது அதிகளவிலான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.எனவே நாட்டின் பொருளாதாரமோ அல்லது மக்களின் பொருளாதாரமோ இன்னும் மேலெழும்பிவிடவில்லை.அதற்கான வாய்ப்புகள் இன்னும் காணப்படவில்லை.மறுபுறத்தில் நாட்டில் உற்பத்தி தொடர்பான பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.எவ்வாறெனினும் விவசாய உற்பத்தி பொருட்களின் விலைகள் ஓரளவு  குறைந்து கொண்டு செல்வதையும் இங்கு கூறியாதல் வேண்டும்.உணவுப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட  நிலையில் இது  தற்போது சற்று குறைவான போக்கினை வெளிப்படுத்துகின்றது.ஆனாலும் இன்னும் பழைய அல்லது சாதாரண நிலைமையை அது எட்டவில்லை.

இலங்கை ரூபாவுக்கான டொலரின் பெறுமதியானது இன்னும் உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.இதன் காரணமாக இறக்குமதி பொருட்களுக்கான விலைகள் இன்னும் உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன.முதலீடு தொடர்பான அல்லது மக்களின் உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய நிலைமைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான செலவுகள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன.மக்கள் தங்களுடைய அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.அரசாங்க வைத்தியசாலைகளில் போதிய அல்லது பொருத்தமான மருந்து வகைகள் இல்லாத நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லாதவர்களாக நோயாளர்கள் காணப்படுகின்றனர்.கல்விப் பின்னடைவு அதிகரித்துள்ள நிலையில் கற்பித்தல் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.மேலும் கல்விச் செலவுகளுக்கான வாய்ப்பின்றி கல்வியைத் தொடர முடியாது சில மாணவர்கள் இடைவிலகும் போக்கும் காணப்படுகின்றது.

தனியார் துறை சேவைக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.போக்கவரத்துக் கட்டணங்களும் கணிசமாக உயர்வடைந்துள்ளன. உணவுப் பொருட்களின் விலைகள் ஓரளவு குறைவடைந்துள்ளபோதும் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மின்சாரக் கட்டண அதிகரிப்பானது எதிர்காலத்தில் உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு உந்துசக்தியாக அமையும்.இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்நியச் செலாவணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை  ஒரு முழுமையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விடயமாகும்.சர்வதேச நாணய நிதியத்திடம் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அந்நிதியத்தின் உதவிகளுக்காக தவம் கிடக்கின்றது.சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு கானல் நீராகவே காணப்படுகின்றது.இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் வெளிப்பார்வைக்கு ஓரளவு தீர்ந்தது போல் தென்பட்டபோதும் எதிர்காலங்களில் இதைவிட மோசமான தாக்கங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் மிகவும் குறைவடைந்துள்ள நிலையில்   உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுகளுக்காகத் தேவைப்படும் 100 கோடி ரூபாவைக்கூட கொடுக்க முடியாத நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.இந்த வகையில் நோக்குகின்ற போது இலங்கை இன்னும் தனது பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடவில்லை.இந்தச் சிக்கல் எதிர்காலத்தில் சமகாலத்தைக் காட்டிலும் மிக மோசமான ஒரு நிலைக்கு சென்றுவிடுமோ! என்ற இயல்பான அச்சம் தற்போது பலரிடத்திலும் மேலோங்கிக் காணப்படுகின்றது.இதேவேளை இலங்கையில் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. நாட்டிலிருந்து மூளைசாலிகளின்  வெளியேற்றம் அதிகரித்து வரும் நிலையில் அது நாட்டின் அபிவிருத்திக்கு குந்தகமாகி இருக்கின்றது.எனவே இவை அனைத்தும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது எதிரணித் தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி:- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவி கிடைக்கும் பட்சத்தில் அது எந்தளவுக்கு இலங்கையின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமையும்?

பதில் :- சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.எனினும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இவ்வுதவி கணிசமான பங்களிப்பு நல்கும் என்று கூறுவதற்கில்லை.இலங்கையின் பொருளாதார மேலெழும்புகைக்கு 10 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி தேவைப்படுகின்றது.எனினும் 2.9 பில்லியன் டொலர்கள் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.இலங்கையில் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதிகளவிலான பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியம் ஒரு காரணமாக இருக்கின்றது.குறிப்பாக மின்சாரம் மற்றும் எரிபொருட்களுக்கான மானியத்தை நீக்கி அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு வேண்டுகோளாகும்.அதனையே அரசாங்கம் இப்போது நிறைவேற்றி இருக்கின்றது.

தனிநபர் மீதான வருமான வரியினை அதிகரிப்பதன் மூலமாக அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையாகும்.இதன் மூலமாக நடுத்தர வர்க்கத்தினர், அரசாங்கத் துறையில் சேவையாற்றுபவர்கள் போன்றவர்களின் வருமானத்தின் அளவு குறைவடைந்துள்ளது. இதனால் அம்மக்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.மேலும் அரசாங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அரசாங்க நியமனங்களை குறைக்க வேண்டுமென்பது நாணய நிதியத்தின் மூன்றாவது கோரிக்கையாகும்.இதனடிப்படையில் கடந்த ஒரு வருடத்துக்கும்  மேலாக அரசாங்கத் துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு அரசாங்கத்துறை தொடர்பான செலவுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.அமைச்சுகள், திணைக்களங்கள், அலுவலகங்கள் எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.

இவற்றை மையப்படுத்தி நோக்குகின்ற போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முழுமையான தீர்வாக அமையாது என்பது தெளிவாகின்றது.சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் புதிய புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பதற்கும், முரண்பாடுகள் மேலோங்குவதற்கும் அடிப்படையாக இருக்கின்றது.ஆயினும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்கான ஒப்புதல் கிடைக்குமிடத்து அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதன் காரணமாக ஏனைய நாடுகள் கடன் உதவிகளை வழங்குவதற்கு முன்வரலாம் என்று நம்பப்படுகின்றது.இவ்வாறாக ஏனைய நாடுகள் கடன் உதவிகளை வழங்குமாக இருந்தால் இலங்கையின் வெளிநாட்டு கடனளவு  மேலும் பன்மடங்கு அதிகரிக்கும்.இதனால் இலங்கை இப்போது இருப்பதனைக் காட்டிலும் அதிகமான ஒரு கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயநிலையே காணப்படுகின்றது.இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாரியளவில் ஏற்படுவதோடு, முதலீடுகளின் தொகையும் அதிகரிக்கப்படுதல் அவசியமாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பவற்றால் தொழிலாளர்களுக்கான கூலி அதிகரித்துள்ளது.இதனால் புதிய முதலீடு அவசியமானபோதும் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன என்பதையும் கூறியாக வேண்டும்.வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கை கவர்ந்திழுக்க மாட்டாது.இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்காக கோரிக்கை, நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் என்பவற்றால் இலங்கை மாற்று வடிவத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்குமாக இருந்தால் அது எந்தளவுக்கு ஒரு சாதகமான நிலையை இலங்கையில் ஏற்படுத்தும் என்பது ஒரு கேள்விக்குறியாகும்.

கேள்வி :-இலங்கை பொருளாதார அபிவிருத்தியில் மீட்சிபெறும் காலம் வெகு தொலைவிலுள்ளது என்று கருதமுடியுமா?

பதில் :- ஆம்.இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த ஆகக்குறைந்தது 08 வருடங்களாவது தேவைப்படுகின்றது.இந்த காலப்பகுதியிலே பல தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இத்தேர்தல்கள் இலங்கையில் ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த வாய்ப்பளிக்குமா? என்பதும் கேள்விக்குறிய விடயமேயாகும்.இந்நிலையில் 2030 ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் அமைவதோடு சர்வதேச நாடுகளின் நம்பிக்கையையும் பெற்றுக் கொள்ள முடியும்.இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தாலும் 2010 ம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து கொள்வதற்கு இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டிய ஒரு நிலையே காணப்படுகின்றது.எனவே இது 2040 ம் ஆண்டிற்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதனை நிழற்படுத்தி  இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2045 ம் ஆண்டளவிலேயே இலங்கையின் பொருளாதாரம் மேலெழும்பும் என்று கூறியிருக்கின்றமையும் நோக்கத்தக்கதாகும்.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்துக்கான மீட்சிக்காலம் 15 தொடக்கம் 20 வருடங்களாக இருக்கும்.இந்த காலத்தில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களின் செயற்பாடுகள், ஊழலற்ற தன்மை, மக்கள் நலன் கருதிய போக்கு, சர்வதேச நம்பகத்தன்மை மற்றும் அதனூடான உதவிகள், இளைஞர்களின் பங்களிப்பு எனப்பலவும் பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துவதாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மூளைசாலிகள் மற்றும் இளைஞர்கள் இலங்கையை விட்டு தற்போது  அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.இது மனிதவளப் பற்றாக்குறையை தோற்றுவிப்பதாக அமையும்.இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய மூளைசாலிகள் மற்றும்  இளைஞர்கள் வெளியேறும் நிலைமையும் நாட்டின் அபிவிருத்திக்கு தடைக்கல்லாக அமையும்.இப்போது உற்பத்தியாளர்களாக உள்ளவர்கள் 2035, 2040 காலப்பகுதியில் முதியவர்களாகி விடுவார்கள்.எனவே அதனை பதிலீடு செய்வதற்கு இலங்கையில் மனிதவள பற்றாக்குறை ஏற்படும்.இதனடிப்படையில் நோக்குகையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு முன்னதாக சவால்கள் பலவற்றையும் சந்திக்க வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.

Exit mobile version