எரிவாயு பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ள பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு

எரிவாயு சிலிண்டர்கள் விபத்து தொடர்பாக

இலங்கை எரிவாயு சிலிண்டர்கள் விபத்து தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, அம்பாறை, ஹட்டன், புத்தளம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. நேற்றும் இன்றும் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, தற்போது நாடு முழுவதும் மக்கள் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் உள்வாங்கப்படும் பியுட்டேன் மற்றும் புரோபீன் ஆகிய இரண்டு இரசாயணப் பொருள்களின் செறிவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமையே, இந்த வெடிப்பு சம்பவங்கள் நேர்வதற்கான காரணம் என எதிர்கட்சிகள், பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளன.

அத்துடன் எரிவாயு கொள்கலன்களில் எந்தளவு பியுட்டேன் மற்றும் புரோபீன் ஆகிய இரண்டு இரசாயண பொருள்களின் செறிவுகளும் இருக்க வேண்டும் என இலங்கையில் எந்தவித கட்டாயங்களும் கிடையாது என   இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சபையில்  தெரிவித்ததோடு, இந்த பதார்த்தங்களின் செறிவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வு கூட வசதிகள் இலங்கையில் கிடையாது எனவும்  கூறியிருந்தார்.

இந்நிலையில், நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சிறப்பு ஆலோசனைக் குழு கூட்டம் கூடவுள்ளது.  பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போதே சபாநாயகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதே நேரம்,  இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கும்  குழு ஒன்று அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (LPG) சிலிண்டர் தீ விபத்துக்கு உள்ளாகின்றமை,​வெடிப்புகள் ஏற்படுகின்றமைக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்குமாறு  அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad எரிவாயு பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ள பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு