இலங்கை: ஊடக சுதந்திரத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்

ஊடக சுதந்திரத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்

இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருவதை அண்மைக் கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவம் தாக்கிய சம்பவம், கிண்ணியா படகு விபத்தின் போது  செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகர்கள் மீது தாக்குதல், யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன. 

ஊடக உரிமைகளைப் பெற பல்வேறு போராட்டங்களை நடாத்திய போதும் அதற்கான நிலையான தீர்வு கிட்டவில்லை . கிண்ணியா ஊடக சம்பவம் தொடர்பில் கிண்ணியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், உரியவர்கள் கைது செய்யப்பட வில்லை.   இதற்கான நீதி கோரி கிண்ணியாவில் 1.12.2021 கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் ஊடகவியலாளர்கள் நடாத்தியிருந்தனர். இதில் சுதந்திர ஊடக இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன ஊடக அடக்கு முறைக்கு எதிரான அறிக்கைகள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடக தாக்குதல் தொடர்பில் கிண்ணியா காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் அறிக்கை கோரியிருந்தது. மேலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாக கண்டித்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின் போது மூத்த ஊடகவியலாளர் ஒருவர்,

“கிண்ணியா படகு விபத்து சம்பவத்தின் போது சில குண்டர்களால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை ஏற்க முடியாது. நீதியான விசாரனை இடம் பெற்று கைது செய்வதனை உறுதிப்படுத்த வேண்டும். வடக்கிலும் ஊடகவியலாளர்கள்  இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என கூறியிருந்தார்.

கிண்ணியா காவல் நிலையத்தில் கிண்ணியா ஊடகவியலாளர் எச்.எம்.ஹலால்தீன் தனக்கு இடம் பெற்ற தாக்குதல் தொடர்பில்   கருத்து தெரிவிக்கையில், “ஊடகங்கள் என்பது மக்கள் பிரச்சினைகளை மட்டுமல்லாது உண்மையான பல விடயங்களை சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டுகின்றது. என் மீதான தாக்குதல் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது ” என்றார். எனவே இலங்கையில்  ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக வெறும் பேசு பொருளாகவே உள்ளது. அது நடை முறையில் சாத்தியமாக்கப்படவில்லை. இதனை சாத்தியமாக்க ஊடக அடக்கு முறைக்கு எதிராக நாம் ஓரணியில் நின்று அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad இலங்கை: ஊடக சுதந்திரத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்