ஸ்ரான் சுவாமி-சமூக இயக்கம்-கூட்டுத்தலைமைத்துவம்

ஸ்ரான் சுவாமி -சமூக இயக்கம்-கூட்டுத்தலைமைத்துவம்

ஸ்ரான் சுவாமி-சமூக இயக்கம்-கூட்டுத்தலைமைத்துவம்
பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார்.

ஒன்பது மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 5ம் திகதி யூலை, பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார். அவருடைய மரணம் தொடர்பில் எதிர் வினைகளை அவதானித்தவர்கள் இந்திய நீதித் துறையின் சுதந்திரத் தன்மையை கேள்விக்கு உட்படுத்தினர், இந்திய சனநாயக முறைமையின் சரிவாக உற்று நோக்கினர். தனக்கு நடந்ததைப் பற்றி  ஸ்ரான் சுவாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.

எனக்கு நடப்பது தனிப்பட்டது அல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பல சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், மாணவர் தலைவர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், ஆதிவாசிகள், தலித்துக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக நின்று நாட்டின் ஆளும் சக்திகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நபர்கள் குறி வைக்கப் படுகிறார்கள்

பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார்.தேசியப் புலனாய்வு அமைப்பு ஸ்ரான் சுவாமியை கைது செய்து, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பையிலுள்ள சிறையிலடைத்தது. இந்திய தேசிய புலனாய்வு முகாமை (NIA) ஸ்ரான் சுவாமிக்கும் மாவோயிஸ்டு களுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச் சாட்டுக்களை முன் வைத்தது. அக்குற்றச் சாட்டுக்களில் எந்த விதமான உண்மையும் இல்லை என்பதை ஸ்ரான் சுவாமி மறுத்து வந்திருக்கின்றார். எல்கர் பரிஷத் – பீமாகோரேகான் வழக்கிலேயே 15வது நபராக அவரைக் கைது செய்தது. இவர் ஜார்க்கண்டில் வசிக்கும் பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

அவருடைய கைதுக்கு முன், ஆயிரக் கணக்கான இளம் ஆதிவாசிகள், பூர்வ குடிமக்களை நக்சல்கள் என முத்திரை குத்தி இந்திய அரசு அவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து, இவ்வாறு கைது செய்த அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும், விசாரணையை விரிவாக நடத்த வேண்டும் எனவும் கோரி அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் ஒன்றை ஸ்ரான் சுவாமி செய்திருந்தார்.

வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும் போது அதற்கான காரணங்களை விசாரிக்கக் கோரி நீதித்துறை ஒரு ஆணையத்தையும் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதோடு இந்திய அரசியலமைப்பில் ஐந்தாவது உறுப்புரையில் கூறப்பட்டுள்ளவாறு ‘பழங்குடியினர் ஆலோசனைக் குழு’ மாவோயிஸ்டுகளுக்கும் வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே உருவாக்கப்பட்ட ‘பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் ஏன் கிடப்பில் போடப் பட்டுள்ளது? எனவும் கேள்வி எழுப்பினார்.

விஸ்காபன் விறோதி ஜான் விகான் அண்டோலன் (VVJA)

‘கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங்குடியினரின் சுயநிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காகவும் அவர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் உழைத்ததை விட நான் வேறு என்ன தவறு செய்து விட்டேன்.’

ஏறக்குறைய இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தப்பன் பாஸ் உடனான நேர்காணலில் தனது உரிமைசார் வேலையையும் தான் சார்ந்த அமைப்பையும் ஒரு தன்னார்வ நிறுவனமாக விபரிக்காமல், மக்கள் இயக்கமாகவே அவர் விபரித்திருந்தார். இந்திய உள்துறை அமைச்சு மேலே குறிப்பிட்ட மக்கள் இயக்கத்தை மாவோயிஸ்ட் சார் அமைப்பு எனவும் இந்திய தேச பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாக அமைவதாகவும் கூறியதை மறுத்து விடப்பட்ட அறிக்கையில் மிகத்தெளிவாக VVJA  மக்கள் இயக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். VVJA எனப்படுவது தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்ல மாறாகப் பரந்துபட்ட மக்கள் இயக்கம், ஜார்க்கண்ட் மாநிலம் உதயமாகிய போது, அதன் முதல் தசாப்தத்தில் சுயமாக அந்த அமைப்பு உருவாகியதாகக் குறிப்பிடுகின்றார்.

பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார்.ஜார்க்கண்ட் மாநிலம் ஏறக்குறைய இந்தியாவின் 40 வீதமான கனிய வளத்தைக் கொண்ட மாநிலம். ஆனாலும் மிகவும் வறிய மக்கள் வாழுகின்ற மாநிலம். 39.15 வீதமான மக்கள் வறுமைச் சுட்டெண்ணின் கீழ் வாழுகின்றார்கள். 19.6 வீதமான ஐந்து வயதிற்கு குறைவான சிறுவர்கள் போசாக்கு அற்றவர்களாகவும், அம் மாநிலத்தின் 24 வீதமான மக்கள் மட்டுமே நகர்ப் புறங்களில் வாழ்வதாகவும் ஏனையோர் கிராமப் புறங்களிலேயே வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய மாநிலம் உதயமான போது பழங்குடியினரும் அல்லது ஆதிவாசிகளும், மற்றும் மூல்வாசிகளும் தங்களுடைய பண்பாட்டு மரபுகளின் படி, தங்களைத் தாங்களே ஆட்சி செய்து, பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்று பலம் பெற முடியும் என்பதே எதிர் பார்ப்பாக இருந்தது. ஆனால் அவை எவையுமே நடை பெறவில்லை. ஆனால் இந்திய அரசு பல கோடிகள் பெறுமதி வாய்ந்த உடன்படிக்கைகளை தனிநபர் வணிக நிறுவனங்களுடன் கைச்சாத்திட்டிருந்தது.

பழங்குடியினருடைய நிலங்களைத் தனியார் வணிக நிறுவனங்களுக்கு இந்திய அரசு பழங்குடியினரின் அனுமதி இன்றியே வழங்கியிருந்தது. 2005ல் தகவலறியும் சட்டத்தின் கீழ் இந்திய அரசு, தனியார் வணிக நிறுவனங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தாது கைச்சாத் திட்டிருந்த 74 ஆவணங்கள், பெறப்பட்டு மக்களுக்கு பகிரங்கப் பட்டிருந்தன. மக்கள் தங்களுடைய நிலங்கள் தங்களுடைய உடன்பாடு இல்லாமே தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதை அறிந்து அதற்கான எதிர்ப்பை வெளிக் காட்டத் தொடங்கியதன் விளைவாகத் தான் மக்கள் இயக்கங்கள் உருவாகின.

மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பினால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெறுங்கையாகவே விரட்டி யடிக்கப்பட்டன. இது ஆளுந் தரப்பிற்குப் பயத்தை மூட்டியது. 1997ல் ‘சமத்தா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பழங் குடியினரின் நிலங்களில் உள்ள கனிய வளங்களை வெளியார் கையகப் படுத்த முடியாத அளவிற்கு பாதுகாப்பை வழங்கியது. அத்தீர்ப்பிற்கமைய ‘நில உரிமையாளருக்கே அந்த நிலத்தில் உள்ள கனிய வளங்களும் சொந்தம்’ என்ற சிந்தனை பழங்குடி மக்களிடையே வலுப் பெற்றிருந்தது. 2013ல் ஜார்க்காண்ட் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்ததன் ஊடாக தனியார் வணிக நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்கியது.

VVJA  பழங்  குடியினரின், விவசாயிகளின், சாதாரண கூலித் தொழிலாளிகளின், தலித்துக்களின் வலிந்த இடப்பெயர்வை எதிர்த்தது. குறிப்பாக அபிவிருத்தி என்ற போர்வையில் வணிக நிறுவனங்கள் நிலத்தை கையகப் படுத்துவதற்காக மேற்கூறப்பட்ட மக்களை அவர்களுடைய நிலங்களிலிருந்து விரட்டி யடிப்பதை வன்மையாக எதிர்த்தது. இந்த மக்கள் இயக்கம் ஒரு முனையில் எதிர் வினையாற்றிக் கொண்டிருக்கையில் மறுமுனையில் ஆக்கபூர்வமான மக்கள் மையப்படுத்தப்பட்ட மாற்றுத் தன்னிறைவு அபிவிருத்தி மாதிரியை முன்மொழிந்தது.

2006ல் இந்திய அரசு கொண்டு வந்த வன உரிமைச் சட்டத்தின் படி பழங் குடியினருக்கு அவர்கள் காட்டுக்குள் சென்று உணவு சேகரித்தல், விறகு பொறுக்குதல் போன்றவற்றைச் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. காட்டு ஒழுங்கமைப்பை பழங்குடியினர் சீர்குலைப்பதில்லை. காட்டுக்குள் சென்று வந்தால் தான் அவர்களுடைய வாழ்வு அர்த்தம் பெறுகின்றது. ஏனெனில் அவர்களுடைய மூதாதையர்களும் குல தெய்வங்களும் அங்கு குடியிருப்பதாக அம்மக்கள் நம்புகின்றார்கள்.

தேசத் துரோகக் குற்றச்சாட்டு

“இவை அனைத்தும் என் கணினியில் திருட்டுத் தனமாக வைக்கப்பட்ட பொய்யான சான்றுகள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். என்னோடு கைது செய்யப்பட்ட குற்றஞ் சாட்டப்பட்ட சக செயற்பாட்டாளர்களும், இந்திய அரசு இவ்வாறு செய்வது ஒன்றும் புதிதல்ல எனக் கூறினர்”.

பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார்.பயங்கரவாதத்திற்கு எதிரான, சட்டத்தின் கீழ், தேசத் துரோகக் குற்றச்சாட்டு முன்வைத்து US கீழ் ஸ்ரான் சுவாமியும் ஏனையவர்களும் கைது செய்யப்பட்டனர். 2019ல், திருத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் (UAPA) மத்திய அரசு தனிநபரையோ, அல்லது ஒரு நிறுவனத்தையோ பயங்கரவாதியாக, பயங்கரவாத அமைப்பாக தான் விரும்பும் நேரத்தில் குற்றஞ்சாட்டி, கைது செய்யலாம்.

இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை பிணையில் எடுப்பது மிகவும் அரிது. இச்சட்டத்திற்கமைய காவல்துறை குற்றஞ் சாட்டப்பட்டவர்களை ஆறு மாதம் வரைக்கும் சிறையில் எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் வைத்திருக்க முடியும். குற்றஞ் சாட்டப்பட்டால் ஏறக்குறைய ஏழுவருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஸ்ரான் சுவாமி SANHAT  என்ற இணையத் தளத்திற்கு ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்னர் அரச அடக்கு முறை பற்றி பின்வருமாறு விபரிக்கின்றார்.

 “அரச அடக்கு முறை தற்போது புதிய வாழ்வியல் ஒழுங்காக கொடுக்கப் பட்டுள்ளது. யார் யாரெல்லாம் ‘அரசின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பியக்கத்தை முன்னெடுக் கின்றார்களோ, அவர்களெல்லாம் நக்சல்களாக பொய் முத்திரை குத்தப்பட்டு சிறையில் தள்ளப் படுகின்றார்கள். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட ஆதிவாசி செயற்பாட்டாளர்களை அணுகி அவர்களை பிணையில் வெளியே எடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். சில ஆதிவாசி செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டு விட்டனர்.

இன்னொரு பண்பாட்டுச் செயற்பாட்டாளர் பொய்க் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தூக்கில் கொலை செய்யப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் நாங்கள் அதை கேள்விக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு அவரை விடுதலை செய்திருந்தோம். நாங்கள் தொடர்ந்தும் இந்திய அரசு ஆதிவாசிகளுக்குச் செய்கின்ற அநீதிகளுக்காக குரல் கொடுத்து அவர்களது நிலங்களையும், அந்நிலங்கள் கொண்டிருக்கும் கனிய வளங்களையும் மீட்டெடுப்போம். இதனால் ஆத்திரமடைந்த அரசு, காவல்துறையையும் அதன் துணை இராணுவக் குழுக்களையும் பயன்படுத்தி போலியான போராட்டக்களத்தை உருவாக்கி பல அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றது.

அது பற்றியும் நாங்கள் எங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இதன் விளைவாக இந்திய அரசு போலியான சரண் அடைதல்களை உருவாக்குகின்றது. ஆதிவாசி இளைஞர்களை நக்சலைட்டுக்களாகக் கட்டமைத்து அவர்களைச் சரணடைய வைக்கின்றது. பல்வேறு சலுகைகளையும், வேலை வாய்ப்புக்களையும், பணத்தையும் தருவதாகக் கூறி ஆதிவாசி இளைஞர்களை நக்சக்லைட்டுக்களாகக் காண்பித்து, அவர்களுடைய நிலங்களை அபகரித்து வருகின்றது. இளம் ஆதிவாசிச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் நில அபகரிப்பிற்கெதிராக குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றார்கள். அவர்கள் ஒரு போதும் அமைதியாக இருக்கப் போவதில்லை. இளைய தலைமுறை ஆதிவாசிச் செயற்பாட்டாளர்கள் கூட்டுத் தலைமைத்து வத்தை உருவாக்கி தங்களது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக் கின்றார்கள்”.

கூட்டுத் தலைமைத்துவம்

‘இந்திய அரசின் அநீதியான அடக்குமுறைக்கெதிராக ஆதிவாசிகள் தங்களை சமூகமாக ஒருங்கிணைத்து, முழுச் சமூகமுமே நில அபகரிப்பிற்கெதிராக போராட களமிறங்குகின்றது. அதுவே பல இயக்கங்களின் வெற்றிக்கு காரணமாகின்றது’.

ஸ்ரான் சுவாமி, தப்பன் பாஸ் உடைய நேர்காணலின் ஆரம்பத்திலேயே கூட்டுத் தலைமைத்துவத்தை பற்றிக் குறிப்பிடுகின்றார். கதாநாயகத் தலைமைத்துவத்தை அவர் ஆதரித்ததாகத் தெரியவில்லை. மக்கள் அடக்கு  முறைக்கு எதிராகத் தங்களை தாங்களாகவே அணி திரட்டுவதன் மூலம் தான் அநீதியை எதிர்க்க முடியும் என்பதை பல்வேறு உதாரணங்களைக் கொண்டு முன் வைக்கின்றார்.

ArcelorMittal வணிக நிறுவனம் எஃகிரும்பு தொழிற்சாலையை கட்டுவதற்கு ஏறக்குறைய 12000 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முற்பட்ட போது அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை விரட்டியடித்ததை கூட்டு தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்ட அந்த நேர்காணலில் கதாநாயகத் தன்மை தலைமைத்துவம் மக்கள் இயக்கத்திற்கு ஒவ்வாததையும் பற்றிக் குறிப்பிடத் தவறில்லை. அதனுடைய அபாயத் தன்மையையும் அவர் குறிப்பிடுகின்றனர்.

மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கும் சக்திகளுக்கு எதிரான, மாற்றத்தின் தேவையை உணர்ந்த நிலையில் தாங்களாகவே ஒன்றுபட்டு, தாங்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கி பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி நகர்கின்றார்கள். இவ்வாறான கூட்டுத் தலைமைத்துவத்தில் அனைவருடைய பங்களிப்பும் முக்கியமாக கருதப்படுகின்றது. எல்லோரும் தங்களுடைய கூட்டு இலக்கை அடைவதற்காக, பங்களிக்க எதிர்பார்க்கப் படுகின்றார்கள்.

இது தொடர்புசால் செய்முறை, தனிநபர் தலைமைத்துவத்தை போலல்லாமல் கூட்டுத் தலைமைத்துவத்தில் கூட்டுப்பொறுப்பு செயல் வடிவம் பெறுகின்றது. அரசுகளால் தனிநபர் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப் பட்டாலும் மக்கள் இயக்கம் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான தலைமைத்துவத் தொடர்ச்சி மக்களிடையே இயங்கு நிலையில் வைக்கப்பட்டிருக்கும் போது, போராட்டத்தில் தேக்க நிலை வெளி இடம்பெற வாய்ப்பிருக்காது.

கூட்டுத் தலைமைத்துவத்தில் கூட்டுப் பொறுப்பில்  எல்லாரிடமும் பொறுப்பு தங்கியிருக்கின்ற போது பார்வையாளர் என்று யாருமே இருக்கப் போவதில்லை. கூட்டுத் தலைமைத்துவத்தில் இலக்கை அடைவது தான் குறிக்கோளாக இருக்குமே தவிர தலைமைத்துவப் போட்டிக்கோ அதிகார, உட்பூசல் போட்டிக்கோ இடமிருக்கப் போவதில்லை. ஒட்டுமொத்த சமூகமும் போராட்ட இயங்கு கொதி நிலையில் இருந்து கொண்டிருக்கும்.

ilakku-weekly-epaper-140-july-25-2021