Tamil News
Home செய்திகள் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட நடவடிக்கை தேவை- செல்வம்

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட நடவடிக்கை தேவை- செல்வம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலிற்கு அவசர கடிதம் ஒன்றையும் இன்று அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில், மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் இல்மனைட் கனிம வள மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் இல்மனைட் மணல் அகழ்வுக்கு பாரிய எதிர்ப்புகள் இருந்தும் கூட அதற்கு எந்தத் தடையும் இன்றி கனிம வள மணல் அகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்து அதனை நடைமுறைப் படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுதொடர்பாக கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும், குறித்த கலந்துரையாடல் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version