உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு

ஆ.த 3 உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு
இலக்கு மின்னிதழ் 149 இற்கான ஆசிரியர் தலையங்கம்

இன்றைய சமகால உலகில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வேகப்படுத்தி, முழுமைப்படுத்திட புலம்பதிந்த ஈழத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும், தமிழகம் உட்பட்ட உலகத் தமிழர்களும் ஒருங்கிணைந்து உழைப்பதற்கான முயற்சிகள் இளையவரிடையிலும், முதியவரிடையிலும் காலத்தின் தேவையென உணரப்பட்டு வரும் நேரம். ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையினை உலக நாடுகளும், அமைப்புக்களும் ஏற்றல் என்பதன் வழியாகவே ஈழத்தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் நீதியானதும், நியாயமானதுமான தீர்வைப் பெறும் என்பதே ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான, அமைதிக்கான, வாழ்வுக்கான ஒரே வழியாகவும் உள்ளது.

பாராளுமன்ற மக்களாட்சியை நிலைப்படுத்தும் பாராளுமன்றச் சட்டவாக்கம், அமைச்சரவை நிர்வாகம், சட்ட அமுலாக்கத்தை உறுதிப்படுத்தும் சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமமென்ற சட்ட ஆட்சி மூன்றும் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுச், சிறைச்சாலை அமைச்சரே சிறைச்சாலையுள் துப்பாக்கியுடன் சென்று, தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து, நான் நினைத்தால் உங்களை அழிப்பேன் என கொடுங்கோன்மை ஆட்சியை வெளிப்படுத்துகின்ற இன்றைய காலகட்டத்தில், இவ்வாறு அடக்கி ஒடுக்குவதுதான் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை; அதனை ஏற்றுப் பேச வாருங்கள் என சிறிலங்காவின் அரசத் தலைவர் கோத்தபாய ராசபக்ச, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரை அருகில் வைத்துக் கொண்டு, புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களாட்சி முறைமையில் நம்பிக்கையுள்ளவர் போல் சிறிலங்கா அரசத் தலைவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், மக்களாட்சி முறையின் வழியான அறவழிப் போராட்டத்தில் மக்கள் போராட்டத்தின் தேவையை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை உண்ணா நிலைப் போராட்டத்தால் ஈந்து, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஊட்டிய தியாகி திலீபனின் துயிலகத்தில் சுடர்விளக்கேற்றினார், ஈழத்தமிழர்களுக்கான சட்டவாக்கத்தை முன்னெடுக்க உரிமையுள்ள சிறிலங்காவின் பாராளுமன்ற உறுப்பினரான திரு கஜேந்திரன்.  இவரைத் திட்டி அவமானப்படுத்திக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையினர், ஏற்றிய ஈகைவிளக்கைக் காலால் உதைத்து அவமதித்த நிகழ்வானது, மனித உரிமை வன்முறைகளும், மக்கள் உரிமை மறுப்புக்களும்தான் சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறை; அங்கு மக்களின் பங்கேற்பு, சமுகநீதியை உறுதி செய்யும் சட்டத்தின் ஆட்சி, மக்களுடனான உரையாடல் மூலம் மக்களுடன் இணைந்து முடிவெடுத்தல் என்பன என்றுமில்லை என்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை உணர்ந்து ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வகையில், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, அனைத்துலக மன்னிப்புச்சபை உட்பட்ட  பல அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் உலக அமைதிக்கான அமைப்புக்கள் இன்றும் சிறிலங்காவின் மனித உரிமைகள் வன்முறைகளின் வழி ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதை நாளாந்தம் பேசத் தொடங்கி விட்டன.

இதன் விளைவாக ஏற்படக் கூடிய உலக மக்களின் அழுத்தம், அவர்களின் அரசுகளையும், ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சியை ஏற்க வைக்க வேண்டிய கட்டாயத்தை நோக்கி நகர்த்துகிறது. இந்த அனைத்துலகச் சூழலின் வளர்ச்சியைத் திசைமாற்றி, ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு வைக்கும் இராசதந்திர நகர்வுதான் சிறிலங்கா அரச தலைவரின் புலம்பெயர் தமிழர்களைப் பேச வாருங்கள் என்ற அழைப்பு.

அதேவேளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சட்டப் பேராசிரியர்  ஜி. எல் பீரிஸ், தன்னுடைய சட்ட அறிவைக் கொண்டு, ஒரு நாட்டின் அனுமதியின்றி ஐக்கிய நாடுகள் சபை அந்த நாட்டுக்குள் வெளியகப் பொறிமுறைகளை முன்னெடுக்க முடியாதென எச்சரித்துள்ளார். ஆனால் குவைத்தில் ஈராக்கின் தலையீட்டுக் காலம் முதலாக கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை எத்தனை நாடுகளில் வெளியகப் பொறிமுறைகளை எவ்வாறு எல்லாம் செயற்படுத்தி வருகிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவர், தான் அமைச்சராக ஒட்டிக் கொள்ளும் எந்த சிங்கள அரசிலும் கட்சி வேறுபாடின்றி, பௌத்த சிங்கள மேலாண்மையை நிலைப்படுத்தச் சட்டத்தின் பெயரால் எதை எதை எல்லாம் பேசி வருகிறார் என்பதும் அவருக்கே தெரியும். ஆயினும் சட்ட மயக்க நிலையொன்றைத் தோற்றுவித்து, ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமைக்கான உலக ஊக்குவிப்பை உடைப்பதே அவரின் நிறைவேறாக் கனவாகத் தொடர்கிறது.

இதனைத்தான் 34 ஆண்டுகளுக்கு முன் இதே செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று தியாகி திலீபன் “ஒரு மாபெரும் சதி வலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும்” என எச்சரித்தான். 34 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது என்றால், அதற்கு என்ன காரணம். தமிழுணர்வு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களிடை இல்லாது இருப்பதுதான் எனத் தமிழ் மெய்ப்பொருள் பேராசிரியர் நல்லூர் சரவணன் மிகத் தெளிவாகத் தமது விரிவுரையொன்றில் சுட்டிக்காட்டினார்.  தமிழுணர்வு என்பது, வெறுமனே மொழியின் பெருமை பேசுவதோ அல்லது பழம் பெருமைகள் பேசுவதோ அல்ல. ஒரு தமிழனுக்கு சுதந்திரம் இல்லையென்றாலும், அதனைத் தனது சுதந்திர இழப்பாகக் கருதும் மனநிலையே தமிழுணர்வு. இந்த நிலை மண்ணுக்கானதும், மக்களுக்கானதுமான முழுமையான பங்களிப்பு வாழ்வின் மூலமே பெறப்படலாம். இதுவே தியாகி திலீபனின் வரலாற்று உதாரணம்.

இந்தத் தமிழுணர்வின் வளர்ச்சியின் வேகத்திலும், உறுதியிலுமே ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமை வளர்ச்சியைப் பேணுவதற்கான மக்கள் சக்தி, உடைப்பு முயற்சிகளுக்கு எதிராகப் பலம்பெறும் என்பதே இலக்கின் எண்ணம்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021