Tamil News
Home செய்திகள்  உரக்கச் சொல்லுங்கள் சமூக நீதியை -உறங்கச் செய்யாதீர்கள் – ஊடகவியலாளர் (தமிழ் நாடு) – கலைச்செல்வி

 உரக்கச் சொல்லுங்கள் சமூக நீதியை -உறங்கச் செய்யாதீர்கள் – ஊடகவியலாளர் (தமிழ் நாடு) – கலைச்செல்வி

சமூக நீதி நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் நவம்பர்,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும்,2009 ஆம் ஆண்டு முதல்தான் முறையாக அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி என்றால் என்ன? தனி நபருக்கும் சமூகத்திற்கும் இடையேயான சரியான ,நியாயமான உறவைக் குறிப்பதாகும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்  என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள். இவ்வுலகத்தில் பிறப்பால் அனைவரும் சமமே. பின்பு ,எங்கிருந்து வருகிறது ஏற்றத்தாழ்வுகள்  மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும், சிறுமைப்படுத்துவதும் எதனால்? இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சமூக நீதியைப் பற்றி சக மனிதனுக்கு படமெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றால் மனித நாகரீகம்  மலரவில்லையா என்ற கேள்வி எழுகிறது .இன்றைய காலகட்டத்தில் சமூக நீதி என்பது வார்த்தை ஜாலமாக மாறிவிட்டது.

ஆனால் ,இந்நாளைப் பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது .வரி, சமூகக் காப்பீடு, பொது உடல்நலவியல், பொதுக்கல்வி, பொதுப்பணி, தொழிலாளர் சட்டம் போன்றவற்றில் வளங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்வதே சமூக நீதி சுருங்கச் சொன்னால்,”அனைவருக்கும் ,அனைத்துக்குமான வளர்ச்சி” என்பதே இதன் அர்த்தமாகும்.

“சமூக நீதி” என்ற சொற்றொடர் 1780களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.தொழில்துறை புரட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்க சட்ட அறிஞர்கள் இந்த வார்த்தையை பொருளாதாரத்தில் பயன்படுத்தினர். இன்று அதன் பயன்பாடு உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் கணிசமாக விரிவடைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது. வறுமை ஒழிப்பு , பாலின சமத்துவம் ,வேலையின்மைக்கான தீர்வு ,சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது  சமூக மேம்பாடு .இதை வலியுறுத்துவதே சமூக நீதி.

உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகள் ,கலாச்சாரம்,மொழி,வெவ்வேறு இன மக்கள் , அதற்கான அரசியல் என களம் விரிந்து கொண்டேயிருக்கிறது. கடந்த நுற்றாண்டுகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் ,தீண்டாமை ,பாலின பாகுபாடு என கொடுமைகள் தலை விரித்தாடியது.

பெண்களின் பொருளாதார பங்கேற்பு, வாய்ப்பு, கல்வி பெறுதல், ஆரோக்கியம், உயிர் வாழ்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பாலின சமத்துவம் இருக்கிறதா ?என்பதை உலகத்தின் மனசாட்சி உலுக்கும் ..உலக பொருளாதார மன்றமானது 2022ம்ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் மற்றும் சாத் நாடுகள் உள்ளன

பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபன் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டவர் தான் பாகிஸ்தானைச் சேர்ந்த  மலாலா யூசுப். பாலின இடைவெளியைக் குறைக்க வேண்டுமென்றால்,கல்வி ஒன்றே நம் கையில் உள்ள அகிம்சை ஆயுதம் .மத ரீதியிலான நாடுகள் மட்டுமல்ல ,வல்லரசு நாடுகளில் கூட பெண்களுக்கான சமூக நீதி சத்தமில்லாமல் ஒடுக்கப்பட்டு வருகிறது. திறமையும், அனுபவமும் இருந்தால் கூட பணியிடங்களில் ஆண் ஊழியர்களுக்கு நிகரான ஊதியம்,பணி உயர்வு ,சலுகைகள் போன்றவை  ஏன் வழங்கப்படுவதில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .

சமூக நீதியைப் பொறுத்தவரை ,இந்தியாவில் சாதி, மொழி, மதம், பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, கல்விக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன.

வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலையே வறுமையாகும் . உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவையே நம் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கிறது .பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையின்படி ,  உலகில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள  54 நாடுகளின் பட்டியலில் இலங்கை இருக்கிறது .

அனைவரின் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி இல்லாதது, பொருளாதார மந்த நிலை மற்றும் மிக சமீப காலமாக போர் ஆகியவை சில நாடுகளில் முன்னேறத்துக்குத் தடைகளாக இருந்துள்ளன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

நாடுகள் வளர்ச்சி அடையாவிட்டால், ஏழ்மையைக் குறைப்பதில் முன்னேற்றம் காண்பது கடினம். ஏழைகளுக்கு  உழைப்பு தான் வருமானத்துக்கான பிரதான வாய்ப்பு. எனவே தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் .இல்லையென்றால், ஏழ்மை குறைவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார்கள் வல்லுநர்கள் .

2030 ஆம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொலைநோக்கு வளர்ச்சிக்கான  இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான அதனுடைய அறிக்கை, அந்த கெடு ஆண்டு வரும்போது உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் சர்வதேச ஏழ்மை நிலைக்குக் கீழே வசிப்பார்கள் என்று தெரிவிக்கிறது.`

இன்றைய உலகில் பணக்கார நாடுகளாக இருப்பவற்றின் வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால், 200 ஆண்டுகளுக்கு முன்பு அவை இன்றைய ஆப்பிரிக்காவின் நிலைமையில்தான்  இருந்தன. ஆனால், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி, திறனை வளர்த்துக் கொண்டதே அந்நாடுகளின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணம்.

ஆனால் ,இந்த விஷயத்தில்தான் வளரும் நாடுகள் இப்போது பின்தங்கியுள்ளன. ஏழ்மையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை வேகமாகக் குறைப்பதில் அவை நன்கு செயல்படுகின்றன. ஆனால் பரம ஏழைகளுக்கு அவை சென்றடைவதில் சிறப்பாகச் செயல்படவில்லை’. சமூக நீதி என்பது இங்கேதான் பிரச்சனைக்குரியதாகிறது.சமத்துவமின்மை என்பது இங்கே ஊமைக்  குரலாக  ஒலிக்கிறது .

குறைந்த வருவாய் நாடுகள் முன்னேறி, நடுத்தர வருவாய் நாடுகளின் நிலைக்கு உயரும்போது, சமத்துவமின்மை அதிகரிக்கிறது .அதனால் , புதிய வருவாய் நிலைகளின் அடிமட்டத்தில் இருந்து பரம  ஏழைகள் முன்னேறுவது கடினமாக இருக்கிறது.இது சமூக நீதிக்கான சவாலாக இருக்கிறது.

சமத்துவம் என்பது வருவாயை மட்டும் குறிப்பிடுவதாக இல்லை,வாய்ப்புகளில் சம பங்கு வேண்டும். அந்த வாய்ப்புகளே அடித்தட்டு மக்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும்.எனவே,சமூக நீதி என்பது உலகில் நிலை நாட்டப்பட்டு ,அமைதியும், வளர்ச்சியும் பெருகட்டும் .

Exit mobile version