சமூகச் சீரழிவால் தென்பகுதி அரசியல்வாதிகள் நன்மையடைகின்றனர் – கலாநிதி இரா.ரமேஷ்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட  தமிழர் தாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் இனவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக போதைப்பொருள் ஈடுபாட்டினை இளைஞர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்பாடு காணப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து  போதைப்பொருட்கள் இலங்கைக்கு நாளாந்தம் கடத்தப்படும் நிலையில்  இதனை கட்டுப்படுத்துவதில் இந்திய, இலங்கை கடற்படையினரின் வகிபாகம் போதுமானதாக இல்லை. இவர்களின் இந்நிலை காரணமாக கடத்தல் ஊக்குவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் மிகப்பெரும் சமூக சீரழிவை  தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனால் தெற்கிலுள்ள அரசியல்வாதிகளே நன்மையடைகின்றனர் என்று பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவிலிருந்து  இலங்கைக்கு கடத்தப்படும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.உலகத்தில் மிகவும் இறுக்கமான சுங்கத் திணைக்களம் இந்தியாவிலேயே உள்ளது.

கடல் மார்க்கமாக அல்லது விமான மார்க்கமாக பொருட்களை கொண்டு வருகின்றபோது அவை இறுக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம்.அப்படியான சூழ்நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு எவ்வாறு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகும்.

இது சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளா? அல்லது சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தரப்பினர் வேண்டுமென்றே இதிலிருந்து விடுபட்டு நிற்கின்றார்களா? என்று சிந்திக்க வைத்துள்ளது. அத்தோடு இத்தகைய  கடத்தலுக்கு பின்னால் அரசியல் சக்திகள் வியாபார சக்திகள் இருக்கின்றனவா? என்ற கேள்வியுமெழுகின்றது.

மிகப்பெரிய பொலிஸ் படையைக் கொண்ட இந்தியாவில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளுக்கு போதைப்பொருட்களை இலகுவாக கடத்துவதென்பது பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற தரப்பினர் இச்செயற்பாட்டை முன்னின்று நடாத்துகின்றார்களா? என்றுமொரு சந்தேகமுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் நிலையின் காரணமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார் போன்ற பல தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்கள்.பாடசாலை மாணவர்கள் சிலரின் நிலையும் மோசமாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

மிகப்பெரிய சமூகச் சீரழிவு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று ஏற்பட்டிருக்கின்றது.புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணத்தை பயன்படுத்தி இளைஞர் சமூகம் இத்தகைய தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் வடக்கிலே பாதிப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இளைஞர்கள் அரசியல், சமூக சிந்தனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு போதைப்பொருளுக்கு அடிமையான சமூகமாக மாறிவருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.இது ஒரு நல்ல செயற்பாடல்ல.போதைப்பொருள் கடத்தலில் பல தரப்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது.கடத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாக இருந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் இந்நடவடிக்கையில் ஈடுபடும் பிரதான தரப்பினர்கள், சூத்திரதாரிகள் யார்? என்பதனை அடையாளம் காண வேண்டும்.

அரசியல்வாதிகளா?  வியாபாரிகளா? பாதுகாப்பு தரப்பினரா?இதில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மாறப்போவதில்லை.மறுபுறமாக இது.

குறித்த விழிப்புணர்வும் கலந்துரையாடல்களும் சமூக மட்டத்தில் மிகவும் அவசியமாகியுள்ளன.ஊடகங்களில் இது தீவிரமாக பேசப்பட்டு வருகின்றபோதும் கடத்தல் பிரச்சினை தமிழர் தாயகத்தில் எவ்வாறு எதிரொலிக்கின்றது? அங்குள்ள இளைஞர்கள் எவ்வாறு இதுபற்றி சிந்திக்கின்றார்கள்? பாடசாலை மட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு எந்தளவுக்கு முன்வைக்கப்படுகின்றது? என்றதொரு பிரச்சினையும் காணப்படுகின்றது.

இந்நிலையில்  சர்வதேசத்தின் தலையீடும் போதைப்பொருள் கடத்தல்  பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியப்படுகின்றது.சர்வதேச பொலிஸார் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த உச்சகட்ட பங்களிப்பினை செலுத்த வேண்டிய தேவையும்  மேலெழுந்திருக்கின்றது.

தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள கடத்தல் பிரச்சினையால் தெற்கிலே இருக்கின்ற அரசியல்வாதிகளே அதிக நன்மையடைவர்.தமிழர் தாயகம் சீரழிவதன் பயன் இவர்களையே சென்றடையும்.சிவில் சமூகம், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலருக்கும் போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவதில் பெரும் பங்குள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் சுமார் 200 பேர் வரை இலங்கையிலிருந்து இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் செல்லுகின்ற போது ராமேஸ்வர பகுதியில் வைத்து இந்திய கடற்படையினர் உடனடியாகவே கைது செய்கின்றனர்.நிலைமைகள் இவ்வாறிருக்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்வதில் மட்டும் இழுபறி ஏன்? என்ற கேள்வி எழுகின்றது.நாளாந்தம் பல பில்லியன் கணக்கான போதைப்பொருள் கடத்தப்படும் நிலையிலும் உரிய கண்டுபிடிப்புகள் இடம்பெறாத நிலையிலும் இது கடற்படையினரின் சம்மதத்தோடு இடம்பெறுகின்றதா? என்ற இயல்பான சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது என்றார்.