மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்கும் பணியில் இராணுவத்தினர்

மன்னாரில் இராணுவத்தினால் புதிதாக பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து எம்.பி. இன்று திங்கட்கிழமை (22) மதியம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

நாட்டின் பல பாகங்களிலும் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினால் அப்பகுதியில் புதிதாக ஒரு பௌத்த விகாரையை அமைக்க இராணுவத்தினால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நான்  வன்மையாக கண்டிக்கிறேன்.

தொடர்ச்சியாக, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படாமைக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணங்களாக உள்ளன.

மன்னாரில் 5 பௌத்த விகாரைகள் உள்ளன. மடு, முருங்கன், திருக்கேதீஸ்வரம், சௌத்பார், தலைமன்னார் ஆகிய இடங்களில் அவை உள்ளன. ஆனால், இங்கே பௌத்த குடும்பங்கள் ஐம்பது கூட இல்லை.

பௌத்த மக்கள் இல்லாத பிரதேசத்தில் இராணுவம் புதிதாக பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.

இவ்விடயம் குறித்து உடனடியாக நான் புத்த சாசன அமைச்சரது கவனத்துக்கும், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

மக்களிடம் இருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அப்பிரதேசத்தில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன் என்றார்.