மாலத்தீவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள்! – தோ.ம.ஜான்சன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள்கடந்த 08.10. 2021 வெள்ளிக்கிழமை அன்று தியேகோ கார்சியா தீவுக்கும் மாலத்தீவுக்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 85 பேர் அமெரிக்கக் கடற்படையால் மீட்கப்பட்டு, மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. இவர்களில் கிட்டத்தட்ட  59 பேர் தமிழ்நாட்டின் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து தப்பிச் சென்றவர்கள் எனக் கருதப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறன.

தமிழ்நாட்டின் மதுரை, திருச்சி, கரூர், சேலம் போன்ற இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கனடா செல்லும் நோக்கத்தோடு கேரளாவில் கொல்லம் என்ற இடத்திலிருந்து கடல்வழியாக ஆப்பிரிக்கா சென்று அங்கிருந்து கனடா செல்லும் திட்டத்தில் இவர்கள் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களை அகதிகளாகப் பதிவு செய்து, முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கைச் சூழல் இந்தியாவில் இல்லாத நிலையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 108 முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு இதுநாள்வரையில் இந்திய அரசால் குடியுரிமை வழங்கப்படவில்லை. இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்புப் போன்றவை இன்னும் கேள்விக்குறியாக உள்ளன. நாடற்றவர்களாக அயல் நாட்டவர் என்ற முத்திரையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற காரணத்தால், தனிப்பட்ட தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாமலும், தொழில்துறையில் முன்னேற முடியாமலும் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் வறுமையில் துன்பப்பட்டு வருகின்றனர்.

மாலத்தீவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள்இந்தியாவில் அகதியாக இருந்து கனடா சென்று குடியேறும் ஈழத்தமிழர் ஒரு சில ஆண்டுகளில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டு நிலைமையோ மிகவும் மோசமாக உள்ளது.

இந்தியா அகதிகள் நிலை குறித்த பன்னாட்டு உடன்படிக்கை 1951 இல் கையெழுத் திடாத காரணத்தால், இன்று வரையில் ஈழத்தமிழர்களைச் சட்டவிரோதக் குடியேறிகள் என்று ஒற்றை வார்த்தையில் அவர்களுக்கான உரிமைகளை மறுத்து விடுகிறது. இந்தியாவுக்குள் நுழைவதற்கும் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கும் பல்வேறு சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு தடையாக உள்ளன.

இலங்கை இனப்பிரச்சினையில் 2009இல் இறுதி முடிவு வந்துவிட்டதாக கூறி இந்தியாவில் புதிதாக வரும் ஈழத்தமிழர்களுக்கு அகதிப் பதிவு கூட வழங்கப் படுவதில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையில் இன்னும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகப் பதிவு செய்கிறது. இந்நிலையில் யாராவது ஒரு ஈழத்தமிழர் தன் உயிரைக் காத்துக்கொள்ள கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தால்,  அவர் கைது செய்யப்பட்டுக் கடவுச்சீட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானாலும், வழக்கை முடித்து சிறையிலிருந்து வெளிவந்தாலும் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்திய அயல் நாட்டினர் சட்டம் பிரிவு 3 (2 )இ-ன் படி சிறப்பு முகாம் என்கின்ற ஒருவகையான சிறைக்குள் மீண்டும் அடைக்கப்பட்டு கேள்வி கேட்பாரற்று பல்லாண்டுகள் அங்கு இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

இந்தியாவில் தங்களை அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்களும், இந்தியாவில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இதுபோன்ற கடவுச்சீட்டு வழக்குகளில் தொடர்பு உள்ள பொழுது அவர்களும்  சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரம் என்பது பிற தேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எவ்வளவு கல்வி கற்றாலும் எத்தகைய திறமை இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக ஈழத்தமிழர்கள் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்குச் செல்ல முடியாத தடைகள் இந்தியாவில் உள்ளன. இதன் காரணமாக ஏதாவதொரு வகையில் தங்கள் வாரிசுகளையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உந்துதலில் வேறுவழியின்றி ஈழத்தமிழர்கள் இது போன்று உயிரைப் பணயம் வைத்து பல நாட்கள் நெடுந்தொலைவு அலைகடலில் ஆபத்துடன் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

ஏற்கனவே இத்தகைய கடல் பயணங்களில் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் நடுக்கடலில் மாண்டு போனதையும், பல்வேறு துன்பங்களுக்கு ஆளானதையும் நாம் அறிவோம். கடல் வழியாக வருகின்ற அகதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளதையும், ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பயணம் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் கடலில் தத்தளித்து, பல்லாண்டுகள் இன்றளவும் மிகவும் பின்தங்கிய போராட்டச் சூழலில் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்ற நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று இந்தியாவிலிருந்து மங்களூர் வழியாக கனடா செல்ல முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தில் 38 பேரும் மதுரையில் 23 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது அவர்களையும் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளை கர்நாடக, தமிழக அரசுகள் செய்து வருகின்றன.

Mission Impossibleஇந்நிலையில்தான் அமெரிக்கக் கடற்படை ஈழத்தமிழர்களை மாலத்தீவு அரசிடம் ஒப்படைத்துள்ள செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எத்தகைய வாய்ப்பு வசதிகளும் இல்லாத, மக்கள் தொகை மிகவும் குறைவான, சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழுகின்ற ஒரு நாட்டில் 85 அகதிகள் அமெரிக்காவால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் என்ன, அவர்கள் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரிவுகள் இப்பிரச்சினையில் தலையீடு செய்துள்ளனர்.  தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். அல்லது அனைவருமே மீண்டும் நாடு கடத்தப்படுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டு முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்கள் கனடா செல்லும் இந்த கடல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழ்நாட்டு முகாம்களில் கியூ பிரிவு காவல்துறையினர் ஒவ்வொரு முகாமாக சென்று புலம்பெயர் ஈழத் தமிழர்களை கணக்கெடுப்பு என்ற பெயரில் மிரட்டி வருவதையும், நெருக்கடிகள் கொடுத்து வருவதையும் அறியமுடிகிறது.

தமிழர்களுக்கு குடியுரிமை

தமிழர்களுக்கு குடியுரிமைஅண்மையில் இயற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த எத்தகைய சட்ட வாய்ப்புகளும் இல்லாத நிலையில், இந்தியாவில் வாழுகின்ற கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தெற்காசியாவில் மிகப்பெரிய நாடாகக் கருதப்படும் இந்தியாவில் பன்னாட்டுச் சட்டங்கள், மனித உரிமை கோட்பாடுகள் அடிப்படையில் அகதிகள் நிலை குறித்த ஆக்கபூர்வமான முடிவுகள் இது வரையில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இலங்கை இனப் பிரச்சனையால் தங்கள் உயிரையும் எதிர்காலத்தையும் காத்துக்கொள்ள ஈழத்தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இலங்கைத் தீவில் தமிழீழத் தேசிய இன மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு இதுவரையில் கிடைக்காத நிலையில், இந்தியா போன்ற அகதிகள் நிலையில் பிற்போக்கு பார்வை கொண்ட அரசுகளின் கொள்கை முடிவால் வேறுவழியின்றி புலம்பெயர் தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது வெளிச்சம் வந்துவிடாதா என்ற நம்பிக்கையில் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் மாலத்தீவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஈழத்தமிழர்களை காப்பது, மீட்பது, மறு குடியமர்த்துவது போன்ற விடயங்களில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்புகளும், உலகளாவிய தொண்டு நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் உடனடி தலையீடு செய்ய வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும். இவற்றுக்கு அப்பால் இலங்கையில் இன்னும் இனப்பிரச்சனை முடிவுக்கு வராத காரணத்தால் பன்னாட்டுஅரசுகள்,  எல்லைகளைத் தாண்டி கடல் கடந்து புலம்பெயர் வாழ்க்கையில் துன்பப்படும் ஈழத் தமிழர்கள் பிரச்சனையை ஒரு சட்ட சிக்கலாக கருதி அவர்களுக்கு கூடுதல் துன்பங்களை கொடுக்காமல் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக கருதி மனிதாபி மானத்தோடு அகதிகள் பிரச்சனையை அணுக வேண்டும் என்பதை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் உலகுக்கு அறிவுறுத்த வேண்டிய தேவையும் கடப்பாடும் உள்ளது.