Home செய்திகள் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோஷம் முதற்பார்வையில் சரியாகத்தான் இருக்கிறது-மனோ கனேசன்

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோஷம் முதற்பார்வையில் சரியாகத்தான் இருக்கிறது-மனோ கனேசன்

முதற்பார்வையில் சரியாகத்தான் இருக்கிறது

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கனேசன் தனது முக நுாலில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது முக நுாலில்,

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோஷம் முதற்பார்வையில் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் இதன் தலைவராக நியமிக்கப்பட்டவர், “இது சிங்கள பெளத்த நாடு. ஏனைய அனைவரும் வந்தேறு குடிகள். சி-பெள மேலாண்மையை ஏற்றுக்கொண்டால் இங்கே நீங்கள் வாழலாம்” என்று பகிரங்கமாக சொல்பவர். இவர் இதை என்னிடமே நேரடியாக சொன்னவர். அவருக்கு நான் உடனடியாக, “நீங்களும் படகில் வந்து கரை ஏறிய கும்பல்தான் என்று உங்கள் மகாவம்சத்தில் உள்ளதே” என பதில் கொடுத்தேன். அது வேறு விஷயம். ஆனால் அவரது நிலைப்பாடு அதுதான். ஆகவே இவரது செயலணி, சி-பெள மேலாண்மையைதான் பொது சட்டமாக முழு இலங்கைக்கும் பரிந்துரைக்கும் என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியாது.

அல்லது.., “ஒரே நாடான இலங்கை பல இனங்களை, மொழிகளை, மதங்களை கொண்ட பன்மைத்துவ நாடு” என்ற அடிப்படையை ஏற்றுக் கொண்ட நிலையில் இந்த செயலணி ஆரம்பிக்கப்பட வேண்டும்.இதுதான் இதிலுள்ள பிரதான பிரச்சினை.அடுத்தது, சரத் பொன்சேகா சொல்வது போன்றுகூட இதற்கு, ஞானசாரரை அகற்றி விட்டு பெளத்த மகாநாயக்கர்களை நியமிப்பதும் பொருத்தமானதல்ல. எதற்காக இதற்கெல்லாம் மத தலைவர்களை இங்கே நியமிக்க வேண்டும்? இந்த குழு, மதச்சட்டங்கள் தொடர்பில் ஆராயும் போது, உபகுழு மட்டத்தில் எல்லா மத தலைவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம். ஆனால் மொத்தமாகவே இவற்றை மத தலைவர்களிடம் கையளிப்பது சரியல்ல.மத தலைவர்களுக்கு தத்தம் மதப்பணிகள் என்ற வேறு வேலைகள் இல்லையா?

இந்த குழுவில் இஸ்லாமிய மத தலைவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எனக்கு தெரியாது. அப்படி இருந்தால், அதுவும் பொருத்தமானதல்ல.அவர்களும் உபகுழு மட்டத்தில்தான் இருக்க வேண்டும். அவர்களை செயலணியில் வைத்துக் கொண்டால், அதை காட்டி, எல்லா மத தலைவர்களும் உள்ளே வரத்தான் பார்ப்பார்கள்.

ஒரு நாட்டு தேசிய நிர்வாகத்தில் இருந்து மத தலைவர்களை எந்தளவு தள்ளி வைக்கிறோமோ, அந்தளவு அந்நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், ஐக்கியம், நிம்மதி ஆகியவை செழித்து வளரும். அரசு (State), மதம் (Religion) ஆகிய இரண்டும் தொடர்புபட கூடாது. இது உலகம் முழுக்க அனுபவரீதியாக கண்டறிந்த உண்மை என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version