Home ஆய்வுகள் ரூபாவை மிதக்கவிடுவது என்ற முடிவை இலங்கை எடுத்ததன் பின்னணி என்ன? | பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்...

ரூபாவை மிதக்கவிடுவது என்ற முடிவை இலங்கை எடுத்ததன் பின்னணி என்ன? | பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் செவ்வி

என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடி

என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை

இலங்கைக்கு என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது எதிர் கொள்கின்றது. டொலரின் பெறுமதி 280 ரூபாவைத் தாண்டிச் சென்றுள்ள நிலைமையில், அத்தியவசியப் பாவனைப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் உயர்வடைந்திருக்கின்றன. சந்தையில் அவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடும் காணப்படுகின்றது. டொலர் இல்லாமையால் உருவான இந்தப் பிரச்சினையை எதிர் கொள்வதற்காக இந்தியாவிடம் கடன் பெறுவதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச புதுடில்லி சென்றிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வது என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் இறுதியாக எடுத்திருக்கின்றது. இந்த நிலையில், இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள முடியும் – தவறு எங்கே இடம் பெற்றுள்ளது என்பவற்றையிட்டு கொழும்பு பல்கலைக் கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்வுக்கு அளித்த செவ்வியின் முக்கியமான பகுதிகளை இங்கு தருகிறோம்.

கேள்வி:
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் தற்போது நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒன்று எனக் கூறியிருக்கின்றார். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:
பகுதியளவில்தான் அதனை ஏற்றுக்கொள்ளலாம். கொரோனாவினால் ஏற்பட்ட பிரச்சினை அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அது உண்மை. இப்போது உக்ரைன்- ரஸ்ய யுத்தத்தினால் உலகளாவிய ரீதியில் எரிபொருளுக்கு, கோதுமைக்கு ஏற்படக் கூடிய தட்டுப்பாடு- விலை உயர்வு என்பன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. ஆனால், கொரோனாவுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அரசாங்கம் விடயங்களைக் கையாண்ட விதத்தைப் பார்க்கும் போது ஏனைய நாடுகள் கையாண்ட முறையை விட இலங்கை கையாண்ட முறை மோசமாக இருந்தது. அதனால், எல்லாவற்றுக்கும் வெளிச் சக்திகள்தான் காரணம் எனக்கூறி, இலங்கை அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா, மற்றும் ஆபிரிக்க நாடுகள் பலவும் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளன. இலங்கையின் இன்றைய நிலைக்கு தற்போதைய அரசாங்கமும், முன்னைய அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

கேள்வி:
டொலரின் பெறுமதி திடீரென அதிகரித்திருக்கின்றது. ரூபாவை அரசாங்கம் மிதக்க விட்டமைதான் இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. ரூபாவை மிதக்க விடுவது என்ற முடிவை அரசு எடுத்தமைக்கு காரணம் என்ன?

பதில்:
ரூபாவை மிதக்கவிடுவது என்பது ஒன்றும் புதியவிடயமல்ல. ஜெயவர்த்தன அரசாங்கம் 1977 இல் பதவிக்கு வந்தபோது ரூபா மிதக்க விடப்பட்டது. அதாவது முகாமைத்துவம் செய்யப்பட்ட மிதக்கவிடலாகவே அது இருந்தது. மத்திய வங்கி அதனைக் கண்காணித்தது.

அடிப்படையில் இலங்கைக்கு இறக்குமதிகளுக்கான செலவீனத்தை விடவும், ஏற்றுமதிகள் மூலமாகக் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கின்றது. இதனால், உள்ளே வரக்கூடிய நாணயத்தைவிட வெளியே செல்லும் நாணயத்தின் அளவு அதிகமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்கு அதிகளவுக்கு கடன்களை இலங்கை பெற்றுக் கொண்டது. அதன்மூலம்தான் வெளிநாட்டு நாணயத்தை உள்ளே கொண்டுவர முடிந்தது. இதன் காரணமாகத்தான் செயற்கையான ஒரு முறையில் நாணய மாற்றுவிகிதம் இருந்தது. இதன் காரணமாகத் தான் ரூபாவை மிதக்கவிடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இப்போதுகூட, ரூபா முகாமை செய்யப்படும் ஒரு நிலைதான் உள்ளது. முழுமையாக மிதக்க விடப்படவில்லை. இன்னும் இவ்விடயத்தில் சீரான ஒரு நிலைமை உருவாகவில்லை.

கேள்வி:
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை – உதவியைப் பெற்றுக் கொள்வது என்ற முடிவை அரசாங்கம் இறுதியாக எடுத்திருக்கின்றது. இந்த முடிவு தற்போதைய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எந்தளவுக்கு உதவும்?

பதில்:
இந்த நெருக்கடியை ஓரளவுக்குத் தணிப்பதற்கு இது உதவுமே தவிர, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இது உதவப்போவதில்லை. சர்வதேச நாயண நிதியம் உதவ முன்வந்தால், இலங்கையின் பொருளாதாரம் ஒரு ஸ்திர நிலைக்கு வரும் என்ற நம்பிக்கையில் கடன் கொடுக்கும் நாடுகள் தமது கடன் எல்லையை அதிகரிக்கக்கூடும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு அங்கத்துவ நாடாகத்தான் இலங்கை இருக்கின்றது. ஆனால், ஏனைய நாடுகளைப் போலல்லாமல் நாணய நிதியம் சில நிபந்தனைகளை விதிக்கும். இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்யக் கூடிய நிபந்தனைகளாகத்தான் அவை இருக்கும். ரூபாவின் பெறுமதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடாது. அதனைத் தளர்த்த வேண்டும் என்பது அவர்களுடைய நிபந்தனையாக இருக்கும். அதனை இலங்கை அரசாங்கம் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனைவிட, வருமானத்தை உயர்த்த வேண்டும். செலவுகளை ஒழுங்கமைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் நிச்சயமாக இருக்கும். இந்த நிபந்தனைகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு நீண்டகால அடிப்படையில் பயனளிக்கக் கூடியவையாக இருக்கும்.  இருந்த போதிலும் வரிகளை அதிகரித்தல் போன்ற நிபந்தனைகள் தமது செல்வாக்கை – மக்களின் ஆதரவை பாதிப்பதாக அமையும் எனக்கூறி அரசாங்கம் அதனை இழுத்தடிக்கும். அதனைவிட, நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் அரசாங்கம் விரும்பாது. அதேபோல ரூபாவின் பெறுமதி குறைவடையும் போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கும். இவ்வாறன ஒரு இக்கட்டான நிலையில்தான் இலங்கை அரசாங்கம் சிக்கித் தவிக்கின்றது.

கேள்வி:
இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச புதுடில்லி சென்றிருந்தார். இந்தியா இவ்விடயத்தில் நிபந்தனைகளின்றி உதவும் என நினைக்கின்றீர்களா?

பதில்:
நிச்சயமாக நிபந்தனைகள் இருக்கும். இரு தரப்பு உடன்படிக்கைகள் பலவற்றை செய்ய முடியாத கட்டத்தில் இந்தியா இருந்தது. குறிப்பாக – சீனா உடன்படிக்கை, கொழும்பு துறைக கிழக்கு முனையத்தைப் பெறும் முயற்சியிலும் இந்தியா தோல்வியடைந்தது. அதேவேளையில், சீனா தன்னுடைய முதலீடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் தன்னுடைய நலன்களையும் உறுதிப்படுத்திக் கொண்டு தான் இந்தியா உதவும். இதற்கான சமிக்ஞைகள் ஏற்கனவே தெரிகின்றன.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சம்பூரில் சூரிய சக்தியில் இயங்கும் மின்உற்பத்தி நிலையம் ஒன்றையும் இந்தியா அமைக்கவுள்ளது. அதாவது, திருமலையை மையப்படுத்தியதாக இந்தியாவின் நகர்வுகள் உள்ளன. அதனைவிட பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு என வடக்கு கிழக்கில் நலன்களைப் பேணுவதற்கு இந்தியா முற்படுகின்றது. இந்தியாவின் பெருமளவு முதலீடுகள் வடக்கு கிழக்கை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றை உறுதிப்படுத்திக் கொண்டுதான் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா முன்வரும்.

கேள்வி:
தற்போது உருவாகியிருக்கும் இந்த டொலர் பிரச்சினை – அதனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு போன்றன இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?

பதில்:
இது திடீரென ஏற்பட்ட ஒரு பிரச்சினையல்ல. தற்போதைய அரசாங்கமும், முன்னைய அரசாங்கங்களும் கையாண்ட தவறான பொருளாதாரக் கொள்கைதான் இதற்குக் காரணம். உற்பத்தியைப் பெருக்காமல் விட்டது. ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்தாமல் விட்டது. இறக்குமதிகளை அதிகரித்தது என்பனதான் இதற்குக் காரணம். இலங்கை அரசாங்கங்கள் அனைத்தும் கையாண்ட தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவை நாட்டு மக்கள் இப்போது அனுபவிக்கின்றார்கள். இது எவ்வளவு காலத்துக்குத் தொடரும் எனக் கூறமுடியாது.

கேள்வி:
இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் அரசாங்கம் கையாளும் உபாயம் எந்தளவுக்கு நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும்?

பதில்:
அரசாங்கம் இதுவரையில் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியளித்ததாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் அபிவிருத்தி தந்திரோபாயங்கள் எல்லாம் உள்நாட்டு வருமானத்தைப் பெறுவதற்கு கடன்பெறுதல், அல்லது நாயணத்தை அச்சிடுதல் என்பதாகவே இருந்துள்ளது. வெளிநாட்டு வருமானத்தைப் பொறுத்தவரையில் இறக்குமதிச் செலவு அதிகம், ஏற்றுமதி வருமானம் குறைவு என்ற நிலை இருக்கின்றது. அதனாவது, உள்நாட்டு வருமானமும் குறைவு, வெளிநாட்டு வருமானமும் குறைவு என்பதுதான் நிலை.

இந்த நிலையில் இலங்கையின் தந்திரோபாயம் எவ்வாறானதாக இருந்தது என்றால், உள்நாட்டு வருமானத்துக்கு கடன்பெறுவது அல்லது நாயணத்தை அச்சிடுவது. வெளிநாட்டு வருமானத்துக்கு கடன் பெறுவது. கடன்பெறுவதை மட்டும் தந்திரோபாயமாகக் கொண்ட ஒரு நாடு நீண்டகாலத்தில் பிரச்சினையை எதிர்கொள்ளும்.

Exit mobile version