போரை நிறுத்தும் முயற்சியாக ஆறு ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் ரஸ்யாவுக்கு செல்கின்றனர்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்தும் நோக்கத்துடன் ஆபிரிக்க நாடுகனின் ஆறு அரச தலைவர்கள் எதிர்வரும் மாதம் உக்ரைன் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் போர் நிறுத்தத்தையாவது ஏற்படுத்துவதே தமது நோக்கம் என தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான திணைக்களத்தின் தலைவர் சேன் டங்கர் கடந்த வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கும் தெரிவித்துள்ளோம், இதில் அமெரிக்காவின் பங்களிப்பும் உள்வாங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் இணைந்துகொள்ள எகிப்த்து, கொங்கோ குடியரசு, சம்பியா, உகண்டா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் விரும்பம் தெரிவித்துள்ளதாக தென்னாபிரிக்காவின் அரச தலைவர் சிறில் ராமபோசா தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினரை அனுமதிப்பதற்கு ரஸ்ய அதிபர் விளிமிடீர் பூட்டீனும், உக்ரைன் அதிபர் வொலமிடீர் செலன்ஸ்கியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்துள்ளார்.