மனிதாபிமான நெருக்கடியாக முகிழ்த்துள்ள நிலைமையில் மாற்றங்கள் வருமா ? | பி.மாணிக்கவாசகம்

பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடி:மாற்றங்கள் வருமா?

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி என்பன தளர்வின்றி மீள முடியாத நெருக்கடிகளாகத் தொடர்கின்றன. இந்த நெருக்கடிகளைத் தளர்த்தி, பெரும் வாழ்க்கைச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க ஆட்சியாளர்களினால் முடியாமல் இருக்கின்றது. அரசியல்வாதிகளினாலும் முடியாமல் இருக்கின்றது.

நாட்டில் நெருக்கடி நிலைமைகள் உருவாகும்போது, அவற்றை எதிர்கொண்டு சவால்களை முறியடிப்பதற்கு அரசியல் தலைவர்கள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். அரசியல் நலன்களைப் புறந்தள்ளிவிட்டு, நெருக்குவாரங்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதையே முழு நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும். ஆனால் இலங்கையில் அத்தகைய நன்முயற்சிகளைக் காண முடியவில்லை. அத்தகைய தேசப்பற்றுள்ள எண்ணங்களுடன் அரசியல் செயற்படுவதாகத் தெரியவில்லை.

எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற நோக்கில் செயற்படுகின்ற கபடத்தனத்தையே அரசியலில் காண முடிகின்றது. அரசாங்கம் முழுமையாகப் பதவி விலக வேண்டும் என்று மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பேரணிகள், பணிப்புறக்கணிப்பு, கடையடைப்பு என பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நாடெங்கிலும் எதிரணி அரசியல்வாதிகளினாலும், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கும் மேலாக அரச தலைவர்களாகிய ஜனாதிபதியின் செலயகம், பிரதமரின் செயலகம் என்பன போராட்டக்காரர்களினால் முற்றுகை இடப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதே இந்தப் போராட்டங்களின் முக்கிய நோக்கம்.

இறக்குமதிப் பொருளாதாரத்தையும் கடன்முறை பொருளாதாரத்தையும் நிதி ஆதாரமாகக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கை, நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை சின்னாபின்னமாக்கி உள்ளது. அந்நியச் செலாவணியில் வீழ்ச்சி, உள்ளூர் உற்பத்திப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி என்பவற்றால் உணவுப் பொருட்களையும், எரிபொருட்கள் மற்றும் சமையல் வாயுக்களையும் இறக்குமதி செய்ய முடியாத அவல நிலைமைக்கு நாடு ஆளாகி இருக்கின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒரு சங்கிலித் தொடராக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பொருட்களின் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கின்றது. உணவில்லை என்பதோடு மருத்துவத் தேவைக்குரிய அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் இல்லாத நிலைமை நாட்டில் உருவாகி இருக்கின்றது.

வருமானத்திலும் பார்க்க செலவினங்களே அதிகம். இப்போது டொலர்களைக் கடன் பெறுகின்ற வழியொன்றின் மூலம் மாத்திரமே நாட்டைக் கொண்டு நடத்த முடியும் என்ற பேரவல நிலைமை உருவாகி இருக்கின்றது. இதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமைகளையும் நெருக்கடி நிலைமைகளையும் தாங்க முடியாத மக்கள், அரசுக்கு எதிராகச் சினம் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

குழம்பிய நிலைமையும் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியும்

ஆட்சி மாற்றம் வேண்டும். நாட்டில் நல்லாட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் உள்ளார்ந்த கோரிக்கை. ஆனால் நாட்டின் அரசியல் நிலைமைகளில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. சுய அரசியல் நலப் போக்குடைய சூழலில் அரச பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிமுறையில் அதிருப்தி அடைந்து அரசுக்கான தமது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசிலிருந்து விலகியவர்கள் பிரதான எதிர்க்கட்சியுடன் இணையவில்லை. மாறாக சுயேட்சைக் குழுவாகச் செயற்படும் வகையில் நாடாளுமன்றத்தில் தனிக் குழுவாக அமர்ந்திருக்கின்றார்கள். நாட்டின் பிரதான அரசியல் கட்சியாக விளங்கிய சுதந்திரக் கட்சியும் அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் தனிச் சக்தியாக அமர்ந்திருக்கின்றது. அதேவேளை பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளும் தனிப் போக்கிலேயே காணப்படுகின்றன.

இவற்றுக்கு மத்தியில் அரசுடன் இணைந்துள்ளவர்கள் போக எஞ்சியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் கட்சிகளும் தனிவழிப் போக்கிலேயே காணப்படுகின்றன. போராட்டங்கள் மற்றும் பேரலையாக எழுந்துள்ள அரச எதிர்ப்பு நிலைமைகளினால் அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போது ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

அரச கட்சியாகிய பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளையும், இன்னும் அரசுடன் இணைந்திருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசி, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடாக ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்.

தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது…?

இந்த ஆட்சி மாற்றம் என்பது புதிய அரசாங்கத்தை உருவாக்கினாலும்கூட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கை. அவர்களின் அரசியல் அபிலாசை.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையை நீக்கி, புதிய பிரதமர் ஒருவருடைய தலைமையில் புழைய மொந்தையில் புதிய கள்ளு என்ற போக்கில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டிருக்கின்றார். இது இனவாத மதவெறி கொண்டதோர் அரசாங்கத்தையே மீண்டும் நாட்டில் உருவாக்குவதற்கான வழிமுறையாகும்.

ஆட்சி மாற்றத்திற்கும் நல்லாட்சி ஒன்றை உருவாக்குவதற்குமாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் அரசியல் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறப் போவதில்லை. மாறாக இந்த முயற்சியானது நல்லாட்சிக்காகப் போராடுகின்ற மக்களின் அரசியல் அபிலாசையைப் புறக்கணித்து, நேர்மாறானதோர் அரசாங்கத்தை உருவாக்குவதையே நோக்காகக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் மிகப் பெரும்பான்மை பலத்தை வழங்கி நிகரற்றதோர் ஆட்சியை உருவாக்குவதற்கு உதவிய சிங்கள மக்களே ஆட்சி மாற்றத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நிலையில் எந்த வகையில் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது குறித்து தீர்க்கமாக முடிவெடுக்க முடியாமல் தமிழ்த்தரப்பு அரசியல் சக்திகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

சஜித் பிரேமதாசாஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ராஜபக்சக்களை நிராகரித்து, எதிர்க்கட்சித் தலைவராகிய சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த்தரப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சாதகமான சந்தர்ப்பமின்றி தவிக்கின்றது.

அடுத்த கட்டம் என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினராகிய ஏனைய ராஜபக்சக்களுக்கும் எதிராகக் கிளர்ந்துள்ள சிங்கள மக்கள், விரும்புகின்ற ஆட்சி மாற்றத்தில் எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது, அதற்குரிய சாத்தியமான வழியென்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழ் அரசியல் சக்திகள் தள்ளப்பட்டிருக்கின்றன.

சிங்கள மக்களின் போராட்டம் இனவாத சக்திகளையும் பெத்த மத வெறிகொண்ட சக்திகளையும் புறக்கணிக்கின்ற போக்கை அடையாளப்படுத்தி இருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் இந்த நாட்டின் மக்களாக எந்த வகையில் எத்தகைய உத்தரவாதத்தின் அடிப்படையில் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாத இருட்டில் இருக்கின்றார்கள். இருப்பினும் சிங்கள மக்களின் போராட்டத்தை அவர்கள் மானசீகமாக ஆதரிக்கின்றார்கள். அவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டையே உளப்பூர்வமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில், நாட்டின் தென்பகுதி அரசியலில் மக்கள் ஒருபக்கமும், அரசியல் சக்திகள் மற்றுமொரு பக்கமுமாக இரண்டாகப் பிளவுபட்டிருபபதைப் போன்றதொரு நிலைமையே வடக்கு கிழக்குத் தமிழ்ப்பிரதேசத்திலும் உருவாகி இருக்கின்றது. ஆனால் தெற்கில் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி சிங்கள மக்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்காக வீதிகளில் துணிந்து இறங்கியிருக்கின்றார்கள். மலையகம் மற்றும் நாட்டின் தென்பகுதிகளில் வசிக்கின்ற தமிழ் மக்களும் சிங்கள மக்களுடைய போராட்டங்களில் பங்கேற்று, தமது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றார்கள். ஆனால் வடக்கு கிழக்கு நிலைமை அதற்கு நேர்மாறாகக் காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் அரசியல் நெருக்கடி உருவாகி இருக்கின்றது. அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் அரசியல் சக்திகள் தடம் மாறிச் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால், பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. இந்த நெருக்கடிகள் இப்போது மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்திருக்கின்றது. இது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலான தேசிய பிரச்சினையாக உருமாறி இருக்கின்றது.

இந்த நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்த்து வலிமையுடன் எதிர் நீச்சல் போடுவதற்கான சாத்தியக்கூறுகளைக் காண முடியவில்லை. மாறாக நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக அதிகரித்துச் செல்கின்ற மக்களின் போராட்டத்தைப் போலவே, பொருளாதார நெருக்கடிகளும் வாழ்வியல் நெருக்கடிகளும் அதிகரித்துச் செல்கின்ற நிலைமையையே காண முடிகின்றது. இதனால் நாட்டின் அடுத்த கட்ட நிலைமை என்னவாகும் என்ற கேள்வியே இப்போது தொக்கி நிற்கின்றது.

Tamil News