தமிழ் தாயகத்தில் இடம்பெறும் பௌத்த சிங்கள மயமாக்கலை தடுத்து நிறுத்தாவிடில் ஆபத்து- செல்வராசா கஜேந்திரன்

தமிழ் தாயகத்தில் இடம்பெறும்

தமிழ் தாயகத்தில் இடம்பெறும் பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும். இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்கல் விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது. அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம். அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார். அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும். ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.

ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது. இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து, மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது. இச்சபை இணைந்தும் இருந்தது. குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது தான் உண்மையான விடயம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad தமிழ் தாயகத்தில் இடம்பெறும் பௌத்த சிங்கள மயமாக்கலை தடுத்து நிறுத்தாவிடில் ஆபத்து- செல்வராசா கஜேந்திரன்