Home செய்திகள் 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்- பாராளுமன்றத்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு

9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்- பாராளுமன்றத்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு

9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்

தமிழர்களின் பரம்பரை நிலங்களைப் பறித்து தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்லவென்ற திட்டத்தை அரசு கச்சிதமாக முன்னெடுக்கின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஒதுக்கீடுகள் என்று கூறி தமிழ் மக்களை விவசாயம் செய்ய விடாது தடுக்கின்றனர். மறுபுறம் 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்களவர்களை குடியேற்றுகின்றனர். இது தான் இந்த நாட்டின் ஒரே நாடு ஒரே சட்டமா? தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வேலையாட்களின் குறைந்த பட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் சிறப்பு ஏற்பாடுகளில் திருத்தச் சட்ட மூலம் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வாசலாக இருக்கின்ற வவுனியா மாவட்டத்தினுள் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கனுகவெவ,கம்பிலி வெவ,வெசுரதென்ன ஆகிய மூன்று சிங்கள குடியேற்ற கிராமபிரிவுகளில் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்தகல்லு கிராம அதிகாரிப் பிரிவுடன் இணைக்க அனைத்து அரச நிர்வாக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வவுனியாவில் தமிழ் மக்கள் வாழும் எண்ணிக்கையையும் செறிவையும் இல்லாமல் செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தின் கொக்கச்சங்குளம் என்ற தமிழ் கிராமம் இன்று பொகஸ்வெல என பெயர் மாற்றப்பட்டு 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம் மேற்கொள்ள வனவளத் திணைக்களம் தயாராகி வருகின்றது.

அத்துடன் குருந்துார் மலையில் உள்ள வயல்வெளிகளில் ஒதுக்கப்பட்ட காடுகள் என்ற பெயரில் தமிழர்களின் வயல் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில வழக்கு போட்டும் நீதி கிடைக்காத நிலையில், பௌத்த பிக்குமார்கள் பெரும் படையாக வந்து இன ரீதியிலான வேறுபாட்டை ஏற்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version