தமிழர்களின் வரலாற்றை அழிக்க சிங்கள அரசாங்கம் முயற்சி -டானியல் வசந்த்

IMG 20210727 103330 தமிழர்களின் வரலாற்றை அழிக்க சிங்கள அரசாங்கம் முயற்சி -டானியல் வசந்த்தமிழர்களின் வரலாற்றை இல்லாது செய்வதில் சிங்கள பேரினவாத அரசாங்கம் குறியாக இருக்கின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் டானியல் வசந்த் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று  நடைபெற்ற  வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 38வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

இந்த மண்ணை நாங்கள் பாதுகாக்காமல், இந்த மண்ணை நாங்கள் மீட்காமல் எமது இனத்தின் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நாங்கள் ஒரு போதும் கருதிவிட முடியாது.

இந்த மண்ணை மீட்பதற்காக எத்தனையோ உயிர்களை  நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். எதுவிதமான அடக்கு முறைகளுக்கும் அடிபணியாது, இந்த மண்ணுக்காக உண்மையிலேயே தமது இன்னுயிர்களை கொடுத்த மாபெரும் தலைவர்கள் தளபதி குட்டிமணி  தலைவர் தங்கதுரை அவர்களோடு இணைந்த ஏனைய போராளிகளும்,  அன்று இந்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து இருந்தால் சிங்களவர்களின் அமைச்சர்களாகவோ அல்லது தளபதிகளாகவும் வாழ்ந்திருக்க முடியும். அவர்களது உயிர்களை இந்த மண்ணிற்காக கொடுத்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூருவது எமது கடமை.

எனவே ஒரு இனம் வாழ வேண்டும்.  வளர வேண்டுமென்றால் அவர்களது வரலாறு நிலைத்திருக்க வேண்டும். எமது வரலாறுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளை இந்த சிங்கள இனவாத அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

கறுப்பு ஜூலை படுகொலையின் நினைவேந்தல் சுவரொட்டிகளை நாங்கள் ஒரு புறமாக ஒட்டிச் செல்லும் பொழுது மறுபுறமாக சிங்கள இனவாதத்தின் காவல் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் அந்த சுவரொட்டிகளை கிழித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கான காரணம் இந்த தலைவர்களின் வரலாறு எமது அடுத்த சந்ததியினருக்கு தெரிந்து விடக்கூடாது என்பது தான்.

மேலும் இன்று எமது நிலங்களை சிறுக சிறுக கைப்பற்றி எமது இருப்பை கேள்விக் குறியாக்கி கொண்டிருக்கின்றார்கள். எமது மண்ணையும் மக்களையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

எனவே இந்த தருணத்தில்  நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு எமது மண்ணையும் மக்களின் இருப்பையும் நிலை நிறுத்த பாடுபட வேண்டும் என்று ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம் என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021