Home ஆய்வுகள் ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம் – துரைசாமி நடராஜா

ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம் – துரைசாமி நடராஜா

ரொமோயாவின் அறிக்கை

துரைசாமி நடராஜா

ரொமோயாவின் அறிக்கையின் முக்கியத்துவம்: பின்தங்கிய சமூகங்களின் வரிசையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். இவர்களின் அபிவிருத்தி கருதி ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமிருக்க முடியாது. ஆட்சியாளர்கள் மக்களின் வாக்குகளைக் கவர்ந்து கொள்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்களே தவிர, அது இதய சுத்தியுடனான செயற்பாடாக அமையவில்லை. மலையக மக்களின் பின்னடைவு நிலைமைகளைக் கடந்தகால தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுகள் பலவும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

எனினும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு அம்மக்களிடையே அபிவிருத்தி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றதா? என்று நோக்கினால் விடை பூச்சியமாக இருக்கும். இந்த நிலையில் அண்மையில் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா மலையக மக்களின் இழிநிலை கண்டு நெஞ்சம் குமுறி இருக்கின்றார். இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ள ரொமோயா அத்தகைய சில துறைகளையும் சுட்டிக்காட்டி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பின்தங்கிய நிலைமைகள்

மலையகப் பெருந்தோட்ட மக்கள் இலங்கை நாட்டிற்கு வருகை தந்த காலம் முதல் பல்வேறு நெருக்கீடு களுக்கும், உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளமை தெரிந்த விடயமாகும். ஆரம்பத்தில் தற்காலிக குடியிருப்புகள் இவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நிலையில், இது பல்வேறு பாதக விளைவுகளுக்கும் உந்துசக்தியாக அமைந்தது. சுகாதாரச் சீர்கேடுகள், போஷாக்கான உணவின்மை  உள்ளிட்ட பல காரணங்களால் பலர் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவும் நேர்ந்தது. மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே இம்மக்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இவர்களுக்காக வழங்கப்பட்ட உணவு வெறுமனே சோற்றுடன் பருப்பு மற்றும் ரசத்தை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. இத்தகைய உணவு நிலைமைகளுக்கு மத்தியில் அவர்கள் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரிந்த விடயமாகும்.

இழிவான சுகாதார மற்றும் மருத்துவ நிலை காரணமாக இம்மக்கள் மத்தியில் நோய்நிலை வீதமும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் மரண வீதமும் 1870 களின் பிற்பகுதியில் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார மேம்பாட்டை மையப்படுத்திப் புதிய சட்டச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் அன்றைய காலனித்துவ அரசு ஆர்வம் காட்டினாலும், அது ஆங்கிலேய பெருந்தோட்ட செய்கையாளர்களின் எதிர்ப்பைச் சந்தித்திருந்தது. அரசினுடைய இத்தகைய இடையீடுகள் பெருந்தோட்ட செய்கையாளர்களின் தோட்ட நிர்வாகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்குமென்று அவர்கள் கருதியதே இதற்கான முக்கிய காரணம் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

தோட்டப்புற வீடமைப்பு போக்குகளும் மந்த கதியிலேயே உள்ளது. சுமார் 185,000 தனி வீடுகள் இன்று தொழிலாளர்களுக்கு அவசியமாகவுள்ளன. எனினும் இது சாத்தியப்படுவதாக இல்லை. அரசாங்கத்தின் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் 25,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுமென்றும், 50,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுமென்றும் வலியுறுத்தல்கள் இடம்பெறுகின்றன. ஆயினும் இது சாத்தியப்படுவதாக இல்லை. இதைப்போன்றே தேர்தல் காலத்திலும் வீடமைப்பு குறித்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்படுகின்றன.

எனினும் இதுவும் காற்றோடு காற்றாக கலந்து விடுகின்றது. இதனிடையே மாடி வீடு, தனிவீடு, இரட்டை வீடு என்றெல்லாம் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டபோதும் இவையெல்லாம் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைக்கு தீர்வாக அமையவில்லை. இன்னும் பலர் தற்காலிக குடில்களிலும், குடிசைகளிலும், இடிந்து விழும் நிலையில் உள்ள லயன்களிலுமே வாழ்க்ககையினை உயிரச்சத்திற்கும் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தேசிய வேலைத்திட்டங்கள்

தேசிய ரீதியில் பல நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களை முறையாக வந்தடைகின்ற போதும், பெருந்தோட்டங்களை வந்தடைவதில் இழுபறி நிலை காணப்படுகின்றன. பல தேசிய வேலைத்திட்டங்கள் மலையகத்தை வந்தடையாமலே முற்றுப்பெற்று விடுகின்றன. பொருளாதார அபிவிருத்தி, சுகாதாரம், மருத்துவம், கல்வி, சமூக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களும் இவற்றில் உள்ளடங்கும். ஒவ்வொரு தேர்தலின் போதும் மலையக மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்ளும் வகையில் பெரும்பான்மைக் கட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றன எனினும் ஆட்சிபீடமேறியபின் நீ யாரோ! நான் யாரோ! என்ற பாணியில் நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காலங்காலமாக பெரும்பான்மைப் கட்சிகளை நம்பி மலையக மக்களை ஏமாற்றுகின்ற ஒரு போக்கே மலையகத்தில் காணப்படுகின்றது. மலையக மக்கள் தொடர்பான செயற்பாடுகளில் பெரும்பான்மைக் கட்சிகளின் ஏமாற்றுப் போக்கினை  பெரும்பான்மை அரசியல்வாதிகளே இங்கு கண்டித்தும் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே கூறியதைப் போன்று மலையக மக்களின் பின்தங்கிய நிலைமைகளை வலியுறுத்தும் அறிக்கைகள் ஆவணங்கள் அதிகமுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஐக்கிய நாடுகளின் அறிக்கையும் இணைந்து கொள்கின்றது. ஐ.நா.அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா நாட்டின் சமகால நிலைமைகள் உட்பட மலையக நிலைமைகள் குறித்தும் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருக்கின்றார். நுண்கடன்களால் கடந்த சில வருடங்களில் மாத்திரம் 200 க்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், கடனை மீளச் செலுத்த முடியாத பெண்களிடம் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் முகவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றினையும் ரொமோயா வெளியிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலைமைகள் இறுக்கமடைந்துள்ள நிலையில், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வின் அர்த்தமற்ற நிலைமை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் இழுபறியான நிலைமைகள், குடியிருப்பு பிரச்சினைகள், கொரோனாவின் பின்னர் தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இடைவிலகல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ரொமோயா கவனம் செலுத்தி இருக்கின்றமை நோக்கத் தக்கதாகும். ஐக்கிய நாடுகள்   சபையின் இந்த ஆய்வு வெளிப்பாடு மிகவும் முக்கியத்துவம்  மிக்க ஒரு விடயமாகக் கருதப்படுகின்றது. ஆய்வின்  மூலமாக ஏற்கனவே மலையகத்தின் பின்னடைவுகள் பல இனங்காணப்பட்டுள்ளபோதும், இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதில் இழுபறி நிலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தீர்வுகளைப் பெற்றுக்   கொள்வதென்பது  கல்லில் நார் உரிப்பது போன்ற ஒரு கடினமான செயலாக இருக்கின்றது.  ஆய்வின் மூலமாக அபிவிருத்தியை ஏற்படுத்துவது பிரதான இலக்காக உள்ளது. எனினும் ஆய்வுகளும் அறிக்கைகளும் பின்தங்கிய நிலைமைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப் படுகின்றதே தவிர தீர்வுச் செயற்பாடுகள் எதுவும் உருப்படியாக இடம்பெறுவதாக இல்லை.

மலையக அரசியல்வாதிகள்

இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. தேசிய மற்றும் சர்வதேச வெளிப்பாடுகளை மையப்படுத்தி மலையக மக்களின் அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அறிக்கைகளில், ஆய்வுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை உரியவாறு நிறைவேற்றுவதற்கு மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேவேளை மலையக மக்களின் சமகால பல்துறை சார்ந்த நிலைமைகள் தொடர்பாக மலையக கட்சிகள் ஒரு பொது ஆவணத்தை தயார்படுத்தி அதனை நிறைவேற்ற முயற்சிப்பதும் நன்மை பயப்பதாக அமையும்.

எதனைச் செய்வதற்கும் முதலில் மலையக கட்சிகள் பொது இணக்கப்பாட்டின் கீழ் ஐக்கியப் படுவது அவசியமாகவுள்ளது. கட்சிகள் வெவ்வேறாக இருப்பினும் மக்கள் நலன்கருதி சில பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது என்பதனை மறந்து செயற்படுதல் கூடாது. இலலையேல் ஆய்வுக்கு உட்படுத்தி எத்தனை அறிக்கைகள் வெளியிட்டாலும் அவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்ற ரீதியிலேயே முற்றுப்பெற்றுவிடும் என்பதனை விளங்கிச் செயற்படுதல் வேண்டும்.

 

Exit mobile version