பயங்கரவாத சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்துப் போராட்டம்: பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

கையெழுத்துப் போராட்டம்

கையெழுத்துப் போராட்டம்: மக்களின் ஜனநாயத்தினை வலுவாகப் பாதிப்பதும், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரங்களை அடங்குவதுமான இச்சட்டம் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கையெழுத்துப் போராட்டத்திற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கெதிரான கையெழுத்து சேகரிக்கும் செயற்பாடு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கயில் தமிழ் மக்களை மட்டுமல்லாது அனைத்து மக்களையும் அரசாங்கத்தின் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக பெரும்பான்மை அரசாங்கங்களினால் கையாளப்படுகின்ற சட்டமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் விளங்குகின்றது.

இச்சட்டமானது இந்த நாட்டில் அதிகமாக தமிழர்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தினால் எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் காரணங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அதில் பலர் இன்னும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் இளமை, வாழ்க்கை என அனைத்தையும் இழந்து நிற்கின்றார்கள்.

மக்களின் ஜனநாயத்தினை வலுவாகப் பாதிப்பதும், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரங்களை அடங்குவதுமான இச்சட்டம் முற்றுமுழுதாக இந்த நாட்டில் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் குறியாக இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலேயே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டத்தினை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பித்துள்ளோம்.

இதன் முதற்கட்ட செயற்பாடாக கடந்த 03.02.2022ம் திகதியன்று முல்தை்தீவு ஊடக மையத்தில் வைத்து இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் செய்வதற்கான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அச்செயற்பாடு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தற்போது இக்கையெழுத்து சேகரிக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றது.

எமது எதிர்கால பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும், அவர்கள் அச்சமில்லா சூழலில் வாழ்வதை உறுதிப்படுத்தவும் அனைத்து மக்களும், பொது அமைப்பினரும், சிவில் செயற்பாட்டாளர்களும், அரசியலாளர்களும் இதில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பினை வழங்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் சார்பில் கேட்டுக் கொள்வதோடு, இந்த செயற்பாடானது உங்கள் பிரதேசங்களில் நடைபெறுகின்ற போது அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

Tamil News