இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு தனித்தனி சட்டங்கள் நடைமுறை-சிறிதரன் குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறை உள்ளதென பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் “கடந்த 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவரான மனநலம் குன்றிய பொதுமகன் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் முரண்பட்டுள்ளார்.

இதன்போது, அங்கு வருகைதந்த விசுவமடு 572 ஆம் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் குறித்த பொதுமகனை தமது முகாமுக்கு இழுத்து சென்று பலமாக தாக்கி இரத்தக்காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை அவதானித்த அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இராணுவ காவலரணுக்கு அருகே சென்று குறித்த பொதுமகனை தாக்கியமைக்கான காரணத்தை கேட்டபோது இராணுவத்தினர் அவர்களையும் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

அதன்பின்னர் இரு கனரக வாகனங்களில் பொல்லுகளோடும் கூரிய ஆயுதங்களோடும் அழைத்துவரப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் இந்த சம்பவத்தோடு எவ்வித தொடர்புமற்ற வீதியால் சென்றவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

இதில் 6 பேர் இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அன்றாட சீவியத்துக்காக, விவசாயத்துக்காக நாள் முழுதும் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் மீது காரணமின்றி இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளமை அப்பகுதி மக்களிடையில் பாரிய அதிருப்தியையையும் அதியுச்ச கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக பிரமானந்தமாறு பிரதான வீதியின் மூன்று இடங்களிலும், விசுவமடு சந்நிதியிலும் சமபவம் இடம்பெற்ற இராணுவ காவலரண் முகாமுக்கு அருகிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

எனவே, சமூக வன்முறைகளுக்கு வழிகோலும் வகையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சமப்வத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும், பொதுப் பயன்பாட்டு இடங்களில் இராணுவ தலையீடுகளை தவிர்ப்பதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆவணம் செய்யுமாறு இந்த உயர்ந்த சபையினூடாக ஜனாதிபதியையும் சமபந்தப்பட்ட அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டிலே காலிமுகத்திடலிலும் ஒரு போராட்டம் நடக்கின்றது. தென்பகுதியிலுள்ள சிங்கள இளைஞர்கள் போராட்டங்கள் நடத்துகின்றார்கள். காவல்துறையினரின்  காவலரண்களைத் தள்ளுகின்றார்கள். இராணுவத்தினரைத் தள்ளுகின்றார்கள்.

இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும்,முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை உங்களது பிள்ளைகளாக பார்க்கின்றீர்கள். தமிழர்களை மாற்று முகமாக பார்க்கின்றீர்கள்.

நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக தெருக்களில் காத்திருக்கின்றார்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் வரையில் வீதிகள் எல்லாம் திருவிழாக்கள் போல் 3, 4 நாட்களாக எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள்” என கூறியுள்ளார்.

Tamil News