இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

இரகசிய பேச்சு கேள்விகளையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்

இரகசிய பேச்சு கேள்விகளையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்
சுரேஸ் பிரேமச்சந்திரன்
இரகசிய பேச்சு கேள்விகளையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்: TNA அரசாங்கத்துக்குமிடையில் பேச்சு வார்த்தை ஒன்று விரைவில் இடம்பெறலாமென்ற சூழமைவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக க்களத்துக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள்

இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்கேள்வி?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசிற்கும் இடையிலான பேச்சு வார்த்தை ஒன்று விரைவில் நடைபெறலாம் என்ற செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இந்த நேரத்தில் இவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்!

இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்
ஜீ.எல்.பீரிஸ்

ஏற்கனவே இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஒரு பேச்சுவார்த்தை கல்வியமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல்.பீரிஸ் அவர்களுடன் நடந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும், புதிய அரசியல் சாசனத்தில் எந்த விடயங்கள் உள்ளடக்குவது என்பது தொடர்பாக நாங்கள் எதிர்காலத்தில் பேசலாம் என்ற விடயத்தை அவர் சொன்னதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. ஆகவே அந்த வகையில், பேராசிரியர் பீரிஸைப் பொறுத்தவரையில், பஸில் ராஜபக்சவை இந்தப் பேச்சுவார்த்தைக்காக அவர் நியமித்திருப்பதாகவும், ஆகவே அவருடன் இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடரும்படி கோரியதாகவும் சொல்லப்பட்டிருந்தது.

முக்கியமான விடயம் என்னவென்றால், கடந்த அரசாங்கத்தில் – ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கத்தின் பங்காளிகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டிருந்தது. அப்பொழுதும் ஒரு புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வருவதற்கு 4 வருடங்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் இறுதியில் அந்த அரசியல் சாசனம் எதுவும் நிறைவேற்றப்படாமல், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்குப் பிற்பாடு நடந்த தேர்தலில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற ஒரு கருத்தை தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட எல்லோருமே தேர்தல் மேடைகளில் பேசினார்கள்.

இப்பொழுது வந்திருக்கக்கூடிய அரசாங்கம் என்பது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முழு இலங்கையிலும் நிறுவ வேண்டும். வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் அல்ல, அங்கெல்லாம் சிங்கள பௌத்த மேலாதிக்கம் இருக்க வேண்டும் என்று, அதற்கான நிகழ்ச்சி நிரலில் வேலை செய்யக்கூடிய ஒரு அரசாங்கம். ஆகவே இந்த அரசாங்கம் கொண்டு வரக்கூடிய அரசியல் சாசனம் என்பது, எவ்வளவு தூரம் தமிழ் மக்களின் உரிமைகளை உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் என்பது ஒரு கேள்வி. இன்னும் சொல்வதானால், 13 ஆவது திருத்தத்தில் உள்ள எல்லாவற்றையும் பறித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், 13 ஆவது திருத்தமே தேவையில்லை என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில், புதிய அரசியல் சாசனம் பற்றிப் பேசப்போகிறோம் என்பது ஏற்கனவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை மறந்து, இந்த அரசும் மோசமாக ஏமாற்றும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், பேசுகின்ற ஒரு பேச்சாகத் தோன்றுகின்றது.

அந்த நிலையில் தான் அரசாங்கத்திற்கு ஒரு நெருக்குவாரம் ஏற்பட்டிருக்கின்றது. உதாரணமாக ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புக்கள் PTA என்று சொல்லக்கூடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கா விட்டால் GST + என்பதைக் தாங்கள் திரும்பக் கொடுப்பது கஸ்டமாக இருக்கும் என்ற அடிப்படையிலான நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில், நாங்கள் தமிழர் தரப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் விரைவாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம் போன்ற கருத்தை வெளியில் சொல்லுவதற்குத் தான் இந்தப் பேச்சுவார்த்தை இவர்களுக்கு உதவுமே தவிர, அரசாங்கம் ஜெனீவா போன்ற நடவடிக்கைகளிலிருந்து தான் தப்பிக் கொள்ளத் தான் தமிழர் தரப்புடன் பேசுகிறோம் என்ற ஒரு தொய்மையைக் காட்டுவதற்கு இது உதவுமே தவிர, இந்தப் பேச்சுவார்த்தையின் ஊடாக எதுவுமே நிறைவேற மாட்டாது. மேலும் கூறுவதாக இருந்தால், மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கூட நாங்கள் 16, 17 தடவைகள் சந்தித்துப் பேசியும் எதுவுமே நடக்கவில்லை. பின்னர் ரணில் அரசாங்கத்திலும் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்து, பாராளுமன்ற விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவர முடியவில்லை.

இன்று ஒருபுறத்தில் காணிகள் பறிமுதல் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத் சட்டம் நீக்கப்படவில்லை. இன்னும் பல்வேறுபட்ட பிரச்சினைகள். காணுகின்ற புராதனச் சின்னங்கள் எல்லாம் பௌத்த சின்னங்கள் என முத்திரை குத்தப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், குறைந்தபட்சம் இவற்றை நிறுத்த முடியாத அரசாங்கம், புதிய அரசியல் சாசனத்தில் எங்களுக்கு எதுவும் செய்யும் என்று எதிர்பார்ப்பது ஏற்புடைய விடயம் அல்ல. இந்த நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேச்சுவார்த்தைக்குப் போவதாக இருந்தால், அதுவும் அரசியல் சாசனம் பற்றிப் பேசுவதாக இருந்தால், அது உண்மையாகவே நடைமுறைச் சாத்தியமானதா? அல்லது அரசாங்கத்தை இந்த ஜெனீவாக் கூட்டத்தொடர் பிரச்சினையிலிருந்து பிணை எடுக்கும் யோசனையா?  உண்மையாக எல்லோருக்கும் தெரியும் இது ஒரு பிணை எடுக்கும் முயற்சி என்பது. அ, ஆ படிக்காதவர்கள்கூட புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே பிராந்திய அரசியல் சூழல் Global political situation அல்லது Indo pacific region இல் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றங்கள். இந்த நெருக்குவாரங்கள் எல்லாம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தை பிணையில் எடுக்கின்ற அடிப்படையில், கிடைக்கிற சந்தர்ப்பத்தை விடமாட்டோம். பேசுவோம் என்று கூறுவது ஒரு அர்த்தபுஷ்டியான விடயமாக எனக்குத் தெரியவில்லை. கிடைக்கிற சந்தர்ப்பம் என்பது உண்மையானது. அவர்கள் தமிழ் மக்களைக் காட்டி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அந்த விடயத்தை நாங்கள் உணர்ந்து கொள்ளுவோமாக இருந்தால், இதனை எவ்வாறு கையாள்வது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் ஏமாற்றுப்பட்டுவிடக் கூடாது. அதற்கு உடந்தையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்துவிடக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து.

கேள்வி?

மூன்று தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள  பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குக்கூடத் தெரியாமல் தான் இந்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயங்களில் இரகசியம் பேணப்பட வேண்டியது அவசியம் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்!

இந்த அரசாங்கத்திற்குள் ஒரு புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவர முடியும் என்று சொல்வார்களாக இருந்தால், அவர்களுக்கு 2/3பெரும்பான்மை கிடைக்கும் என்றிருந்தால், அதை மக்களுக்குக் கூறுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இருப்பதாக நான் நம்பவில்லை. மக்களுக்குத் தெரியாமல் ஒரு புதிய அரசியல் சாசனம் வரமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாராளுமன்றத்திற்கு வரப்போகின்றது. அங்கு சமர்ப்பிக்கப்படப் போகின்றது. மக்களுக்குத் தெரியத்தான் போகின்றது. ஆகவே இது ஒளிப்பு மறைப்பான ஒரு விடயம் அல்ல. ஆகவே இந்த நிலையில் நீங்கள் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்பது, இது தான் போன அரசாங்கத்திலும் நடந்தது. இரகசியமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

அந்தப் பேச்சுவார்த்தையிலும் வடக்கு கிழக்கு இணைப்பைப் பற்றி இவர்கள் பேசவே இல்லை. வடக்கு கிழக்கில் பௌத்தத்திற்கு முதலிடம் வேண்டாம் என்பது பற்றி இவர்கள் கதைக்கவே இல்லை. இது இருக்கட்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்றார்கள். இவை எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தும்கூட போன அரசாங்கத்தில் எதனையும் செய்ய முடியவில்லை. எல்லாம் இரகசியமாக இருந்தது. தங்களது பங்காளிக் கட்சிகளுக்கும்கூட இது பற்றி எதுவும் சொல்லவில்லை. இப்பொழுதும் கூட அந்த நிலை தொடர்கிறது. அதன் காரணமாகத்தான் ரெலோ ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. கூட்டாக இந்தப் பிரச்சினையைக் கையாள வேண்டும் என்ற அடிப்படையில் ரெலோ ஒரு முயற்சியை எடுத்தது.

இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களுக்குக்கூடத் தெரியாமல் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக இருந்தால், முக்கியமாக இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்திருக்கின்றார்.  அவர் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு ஆளல்ல என்ற ஒரு பரவலான கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்றது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவர் தனித்துவமாகச் சென்று இரகசியமான முறையில் விடயங்களைக் கையாள்வது என்பது, மக்கள் மத்தியில் பாரிய கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் மீண்டும் மீண்டும் உருவாக்கும்.

இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்ஆகவே இதனை சுமந்திரனும் புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய வகையில் குறைந்தபட்சம் நாம் என்ன விடயங்களைப் பேசப் போகின்றோம் என்ற விடயங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். பல்கலைக்கழகப் பேராசிரியருடனோ அல்லது புத்திஜீவிகளுடனோ ஏனைய கட்சிகளுடனோ இவர்கள் பேசி, ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி இப்படியான இடங்களில் இறங்குவதென்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் . ஆனால் அவை எதுவுமே இல்லாமல், இவர்களின் செயற்பாடுகள் என்பது நிச்சயமாக அது அரசாங்கத்தைப் பிணை எடுப்பது மாத்திரமல்ல, தமிழ் மக்கள் மேலும் மேலும் நம்பிக்கையீனங்களை உருவாக்குவதற்குத் தான் வழிவகுக்கும் எனக் கருதுகின்றேன்.

கேள்வி?

இந்தியத் தலைவர்களுடன் பேசுவதற்காகவும், புதுடில்லிக்கான விஜயம் ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொள்ளவிருக்கின்றார்கள் என்ற செய்திகள் வந்திருக்கின்றன. தற்போதைய தருணத்தில் இந்த விஜயம் எவ்வகையில் பலனளிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்!

முதலாவது இந்தியாவிற்குப் போய் என்ன பேசப்போகிறார்கள் என்பது திரும்பவும் இருக்கக் கூடிய கேள்வி. புதிய விடயங்களைப் பற்றிப் பேசப்போகின்றார்களா? அல்லது முன்னர் மாதிரி நீங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேசி, ஏதாவதொன்று செய்யுங்கள் என சொல்லப் போகின்றார்களா? அல்லது திட்டவட்டமாக எங்களுடைய பிரச்சினைகள் இவ்வாறு தான் இருக்கின்றன. இவ்வாறு தான் செயற்பட வேண்டும் என்று கோரிக்கைகளை வைக்கப் போகின்றார்களா? என்ற பல கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. ஏனென்றால், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவன் என்ற அடிப்படையில் இந்த விடயங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை தெரிந்தவன் என்ற அடிப்படையில் நிச்சயமாக பழைய படிவத்தில் இந்த  விடயங்களைக் கையாள்வதால், எந்தப் பலாபலன்களும் ஏற்படாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், இலங்கை மண் என்பது சீனாவினால் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகையில், இலங்கை மண் என்பது இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கு  குந்தகங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையில், இந்த மாற்றமடைந்த சூழ்நிலையில் என்னென்ன விடயங்களை இந்தியாவுடன் பேசுவது என்பது சரியான புரிதலும், தெளிவும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன்.

இரகசியமான முறையில் பேசுவது பாரிய கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் உருவாக்கும்
சம்பந்தன்

இரண்டாவதாக உண்மையாக இவ்வளவு காலமும், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 5 வருடங்களில்கூட டெல்லிக்குச் சென்று எந்தவொரு விடயத்தையும் பேசியதாக இல்லை. ஆகவே இந்தக் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் உடனடியாக அவர்கள் டெல்லிக்குப் போவார்களா, போக மாட்டார்களா என்பது ஒரு கேள்வி. இலங்கை அரசாங்கத்தை ஜெனீவா விடயங்களிலிருந்து பிணை எடுக்கின்ற விடயத்தை திசை திருப்புவதற்காக நாங்கள் இந்தியாவிற்குச் செல்கின்றோம்.

பேசப் போகின்றோம் என்ற ஒரு கேள்வியும் உருவாகின்றது. எனவே இவர்கள் போவார்களா, போக மாட்டார்களா என்று தெரியாது. தமிழ் மக்களின் உரிமைகள், அதற்கான காலங்கள் கனிந்து வரக்கூடிய சூழ்நிலையில், இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஒரு தெளிவான முடிவுகள் வேண்டும். அதற்கு ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் ஆதரவுகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவை இல்லாமல்  அரைகுறை விடயங்களுடன் நாங்கள் தான் எல்லாம். நாங்கள் நினைத்த அனைத்தையும் செய்வோம் என்று கூறி எல்லாவற்றையும் போட்டுடைப்பது என்பது ஏற்புடையதாக இருக்காது.

ஆகவே கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பங்காளிக் கட்சித் தலைமைகளாவது இதைப் புரிந்து கொண்டு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என்று தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

ilakku-weekly-epaper-143-august-15-2021