இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி-உடன் நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள்  கோரிக்கை

இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி

இலங்கை காவல்துறையினருக்குப் பயிற்சிகளை வழங்கும் ஸ்கொட்லாந்து காவல்துறையினரின் வகிபாகமானது இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அரசியல் ரீதியில் மூடிமறைப்பதற்கான திரையாக அமைகின்றது. ஆகவே இப்பயிற்சி வழங்கல் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்தம் எதிர் வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அவ்வொப்பந்தத்தை  மீளப்புதுப்பிக்காமல் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏற்றவகையிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானிய மற்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் இணைந்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

சாரா பொயாக், மெகீ சாப்மன்,ஃபோய்சோல் சௌடுரி, கெறி க்ளாக்,சேர் எட் டேவே,மொனிகா லெனொன், ரிச்சார்ட் லியோனார்ட், லயம் மெக் ஆர்தர், ஜோன்மெக் டொனெல், கரோல் மோகன்,மரியன் பாலிஸ்டர்,வில்லீ ரெனீ, அலெக்ஸ் ரௌலே,சாரா சுல்தானா, போல் ஸ்வீனி மற்றும் மேர்கடெஸ் விலல்பா ஆகியோர் இணைந்து உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் “இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் நீதித்துறைசார் வெளிநாட்டு உதவி தொடர்பான மதிப்பீடுகள் தற்போது இலங்கையிலுள்ள  பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்தினால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக மயப்படுத்தல், பாலின மற்றும் பாலியல் வன்முறைகள், பாலின சமத்துவம் ஆகிய விடயங்கள் உள்ளடங்களாக நீண்ட காலமாக இலங்கை காவல்துறையினருக்கு  ஸ்கொட்லாந்து காவல்துறையினரால் வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள்  தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைந்திருக்கின்றோம்.

இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சிகளை வழங்கும் ஸ்கொட்லாந்தின் காவல்துறையினரின் வகிபாகமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அரசியல் ரீதியில் மூடி மறைப்பதற்கான திரையையும் அங்கீகரிக்கப்படாத சட்டவரையறையையும் வழங்குகின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad இலங்கை காவல்துறையினருக்கு ஸ்கொட்லாந்து பயிற்சி-உடன் நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள்  கோரிக்கை