Home அறிவாயுதம் புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம் – தமிழில்: ஆர்த்தீகன்.

புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம் – தமிழில்: ஆர்த்தீகன்.

474 Views

நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம்

புதிய நெருக்கடிகளுக்கூடாக புதிதாக வளர்வதே விஞ்ஞானம்

ஐக்கிய நாடுகள் சபையின் ‘அமைதிக்கும், அபிவிருத்திக்குமான உலக விஞ்ஞான நாள்’ (World Science Day for Peace and Development) நவம்பர் 10 ஆம் நாள் அனுட்டிக்கப்படுகின்றது. அதனை முன்னிட்டு இந்த ஆக்கம் வெளிவருகின்றது.

கோவிட்-19 நோய்க்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து (mRNA vaccines) வெற்றிபெற்ற பின்னர், அதன் பாவனையானது காய்ச்சல், புற்றுநோய், எயிட்ஸ் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதால், மருத்துவத்துறை மிகப்பெரும் முன்னேற்றமான நிலையை எட்டியுள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் என்பது, கோவிட்-19 நோய்க்கு முன்னர் ஒரு சந்தேகமாகவே பார்க்கப்பட்டது. அது வெற்றிபெறும் என்றும் யாரும் நம்பவில்லை. ஆனால் கோவிட்-19 இற்கு பின்னரான காலம் அதில் ஒரு நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

மொடேனோ (Moderna) மற்றும் பைசர் மற்றும் பையோ என் ரெக் (Pfizer/BioNTech) ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த தடுப்பு மருந்துகள், வழமையான தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பத்தை விடுத்து, தகவல் காவும் மரபணுக்களை (mRNA) அடிப்படையைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. இது குறிப்பிட்ட புரதத்தைத் தயாரிப்பதற்கு உடலில் உள்ள கலங்களுக்கு கட்டளையிடும். இந்தத் தொழில்நுட்பம் முன்னர் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதல்ல.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மரபணு மூலக்கூறை உடலினுள் செலுத்துவதன் மூலம், எமது கலங்கள் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் இயந்திரமாக மாற்றப்பட்டு, கொரோனா வைரஸ் உடன் போராடும் நோயெதிர்ப்புச் சக்தி மூலக்கூறுகளை உருவாக்கும்.

கோவிட்-19 இற்கு முன்னர் இந்தத் தொழில்நுட்பம் தொடர்பில் பாரிய சந்தேகம் நிலவியது. அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை. அது பலன்தரும் என்பதிலும் உறுதியற்ற தன்மையே காணப்பட்டது. ஆனால் தற்போது மிகப்பெரும் நம்பிக்கையை அதன் பாவனை தோற்றுவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் இதனைக் கொண்டு ஏனைய நோய்களை கட்டுப்படுத்தும் நம்பிக்கைகள் தோன்றியுள்ளன.

வைரஸ் காய்ச்சல்

இந்த வருடம் குளிர்காலத்தில் எந்த வகையான வைரஸ் அதிகளவு மக்களைத் தாக்கும் என்பது தொடர்பில் ஒவ்வொரு வருடத்தின் பெப்ரவரி மாதமும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் பணியாற்றும் விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில் விவாதிப்பதுண்டு.

நான்கு வகையான வைரஸ்கள் புழக்கத்தில் இருக்கும்போதும், அவை விரைவாக உருமாற்றம் அடையக்கூடியவை. எனவே கடந்த வருடத்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்பு மருந்து பலனளிக்காது. புதிய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு நிறுவனங்களுக்குக் குறைந்தது 6 மாதங்களாவது தேவை.

செயற்திறனற்ற வைரஸ்கள் உருவாக்கப் பட்டு, அதனை மில்லியன் கணக்கான கோழி முட்டைகளினுள் வளர்த்தே சாதாரண தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகின்றது.

நோய்ப் பரவல் கண்டறியப்படும்போது, தடுப்பு மருந்து 60 விகிதம் பலன்தர வேண்டும். ஆனால் வைரஸ் உருமாற்றம் அடைந்தால், தடுப்பு மருந்து 10 விகிதமே பலன்தரும்.

எனினும் நான்கு வகையான வைரஸ்களையும் தடுக்கும் சக்தி கொண்டதும், எதிர்காலத்தில் உருமாறும் வைரஸ்களையும் தடுக்கும் சக்தி கொண்டதுமான தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடியாது இதுவரை காலமும் மருத்துவ உலகம் தவித்து வந்தது.

ஆனால் தற்போதைய புதிய தொழில்நுட்பம் கொண்ட ஆர்.என் ஏ தடுப்பு மருந்தானது, இலகுவாகத் தயாரிக்கக் கூடியதுடன், அது பல வைரஸ்களை ஒரே தடவையில் தாக்கக் கூடியதுமாகும். இது மிகவும் பரந்த அளவில் பயன்படுத்தக்கூடியது எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர்த்துறை ஆய்வாளர் நோபேட் பார்டி. அவரின் குழுவினர் இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் புதிய தடுப்பு மருந்துகள் பாவனைக்கு வந்துவிடும்.

புற்றுநோய்புதிய எச்.பி.வி தடுப்புமருந்தின் பாவனை என்பது பல ஆயிரம் மக்களை வைரஸினால் ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து காப்பாற்றியுள்ளது. எதிர்காலத்தில் புதிய mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படலாம். இதன்மூலம் மனிதர்களில் கலன்கள் பிறழ்வு அடைவதற்கு முன்னர் அதனைத் தடுக்கும் சக்தியை எமது உடலின் எதிர்ப்பு சக்தி பெறும்.

இது ஒரு முற்றுமுழுதான புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. இதனை நாம் புற்றுநோய்க்கு எதிராகப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார் டியுக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹொபேட் கிம் லெர்லி. அவரின் குழுவினர் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதிக் கட்டத்தில் உள்ள மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான mRNA தடுப்பு மருந்தை அவர்கள் எதிர்வரும் வருடம் பரிசோதனை செய்யவுள்ளனர். மருந்துகள் இறுதிக்கட்டத்தில்இந்த நோய்க்கு பலன்தராது. ஆனால் ஒரேநேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பம் பல முனைகளில் தாக்கி பிறழ்வடைந்த (Mutation) கலன்களை அழிக்க வல்லது.

ஆரம்ப நிலையிலேயே இந்த பிறழ்வடைந்த கலன்களைக் கண்டறிந்து அழிப்பதில் எமது உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தியைவிட மிகச்சிறந்த வைத்திய நிபுணர்கள் இந்த உலகில் இருக்க முடியாது எனத் தெரிவிக்கின்றார் பேராசிரியர் லெர்லி. இது வெற்றிபெற்றால், மக்களின் வாழ்நாளை அது அதிகரிக்கும். புகைப்பிடிப்பவர்களில் ஏற்படும் புற்றுநோய்களில் அதிகமானவை KRAS எனப்படும் மரபணுவினால் ஏற்படுகின்றது. அதனையும் தடுக்க முடியும்.

மலேரியா

இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் மலேரியாவுக்கான தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதியை வழங்கியுள்ளது. ஆனால் அது மேலும் விருத்தி செய்யப்பட வேண்டும். RTS,S எனப்படும் தடுப்பு மருந்து மலேரியாவின் கடுமையான பாதிப்புக்களை 30 விகிதம் குறைக்கின்றது. ஆனால் மலேரியா நுண்ணுயிர் மிக வேகமாகப் பிறழ்வு அடைவதால், அது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியைத் தோற்று விக்கும் ஞாபகமூட்டும் கலங்களில் இருந்து தப்பிப்பிழைக்கின்றது. இதுவே இங்கு சவாலான விடயம். மலேரியாவால் பாதிக்கப் பட்டவர்களும், தடுப்புமருந்து பெற்றுக் கொண்டவர்களும் கூட மீண்டும் பாதிக்கப் படும் சாத்தியங்கள் உள்ளன. ஆண்டு தோறும் 500,000 மக்கள் மலேரியாவால் இறக்கின்றனர். அதில் பெரும் பாலானவர்கள் குழந்தைகள்.

PMIF எனப்படும் புரதமே நோயெதிர்ப்புக் (Memory T-cells) கலங்களை அழிக்கின்றன. எனவே இந்தப் புரதங்களுக்கு எதிரான ஆர்.என்.ஏ தடுப்பு மருந்தை அமெரிக்காவின் யாள் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் றிச்சார்ட் புகொலா தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்தப் புரதத்தைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி மலேரியா நுண்ணுயிர்களை முற்றாக அழிக்கும் தகமையை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மனிதர்களில் பரிசோதனைகளை ஆரம்பிக்கவுள்ளனர். அது வெற்றிபெற்றால், அடுத்த வருடம் புதிய மலேரியாத் தடுப்பு மருந்து பாவனைக்கு வந்துவிடும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மலேரியா நோய் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்களை அதிகம் ஏற்படுத்துகின்றது. எனவே தடுப்பு மருந்து அவசியமானது. இந்தப் புதிய ஆர்.என்.ஏ தொழில்நுட்பத் தடுப்பு மருந்து அதிக சக்திவாய்ததுடன், மலிவானதுமாகும்.

எயிட்ஸ்

எயிட்ஸ் நோயின் தாக்கம் ஆரம்பித்து 50 ஆவது வருடமாகின்றது. ஆனால் அதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது என்பது சவலான விடய மாகவே உள்ளது என தெரிவிக்கின்றார் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டெரிக் ஹெயின்.

அவரின் குழுவினர் இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தயாரித்துள்ள புதிய antibodies மருந்துகள் எச்.ஐ.வி வைரஸ்களை ஓரளவு வீரியம் இழக்கச் செய்கின்றன. ஆனால் வைரஸ்கள் உடலில் மறைந்து பெருக்கமடைகின்றன. அவற்றை எமது உடலின் எதிர்ப்பு சக்தி அழிப்பது என்பது கடினமானது.

அதாவது முழு வீடும் பற்றி எரிய ஆரம்பித்த பின்னர் தீயணைப்புக் கருவியை தேடுவது போலவே இது. ஆனால் புதிய தடுப்பு மருந்து ஆரம்பத்திலேயே வைரஸ்களை அழித்துவிடும்.

ஹெயினின் குழுவினர் 4 அல்லது 5 வகையான, ஒரே சமயத்தில் பல வைரஸ்களைத் தாக்கும் தடுப்பு மருந்துகளைத் (Multi-target mRNA vaccines) தயாரித்து வருகின்றனர். இது உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கும் வைரஸ் இற்கும் இடையிலான ஆயுதப்போட்டியாகும்.

எயிட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டறிவது சுலபமானதல்ல என்பதை நாம் அறிவோம். அது கோவிட் -19 நோய்க்கான தடுப்பு மருந்தைப் போல 100 விகிதமோ அல்லது 90 விகிதமோ பலன்தராது விடலாம். ஆனால் 50 தொடக்கம் 60 விகிதம் பலனளித்தாலே நாம் வெற்றியாளர்கள் தான். 70 விகிதம் பலனளித்தால் அது போற்றத்தக்கது என ஹெயின் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோயை கட்டுப்படுத்த துணிச்சலாக கொண்டுவரப்பட்ட மற்றும் அனுமதி வழங்கப்பட்ட ஆர்.என்.ஏ தடுப்பு மருந்து எனப்படும் புதிய தொழில்நுட்பத்திற்கான பாவனை தற்போது உலகில் உள்ள பல நோய்களைக் குணப்படுத்தும் வழியை நமக்குத் திறந்துள்ளது.

மக்கள் கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்கும்போதே விஞ்ஞானம் அவர்களுக்கான புதிய பாதையை காட்டுகின்றது.

நன்றி: கன்னா டெவ்லின் (Hannah Devlin Science correspondent)

1 COMMENT

Leave a Reply

Exit mobile version