தமிழரசுக் கட்சியின் ஜெனிவாவுக்கான கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்

கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்கடிதத்தில் சம்பந்தன் மட்டுமே கையொப்பம்: ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவணத்தை அனுப்பாது, இரா. சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமான ஆவணம் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை விளக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிற்செல் பச்லெட் அம்மையாருக்கு ஆவணங்களை அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகள், கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆவணம் ஒன்றை அனுப்பியது. இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆவணம் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்த நிலையில், அது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நேற்று பாராளுமன்ற அலுவலகத்தில் கூடிப் பேசுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேசவல்ல சுமந்திரன் எம்.பியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு இன்று (நேற்று) இடம்பெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வேறொரு கட்சியுடன் கையொப்பமிட்டு ஆவணம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கிறார் என்று அறிந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இவ்வாறு செய்துள்ளனர்.

“இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக ஆவணம் ஒன்றை அனுப்பவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இரு ஆவணங்களை அனுப்புவது பிரிந்து செல்வதாகத் தென்படலாம். இதனால் இன்னோர் ஆவணத்தை அனுப்பவில்லை. தலைவர் சம்பந்தன் கையொப்பமிட்ட ஆவணத்தை மட்டுமே அனுப்பவுள்ளோம்” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021