சாது மிரண்டால் காடு கொள்ளாது
சாத்வீக முறையில் இடம்பெற்று வந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் போராட்டங்கள், அந்தப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களை யடுத்து, வன்முறைப் போராட்டங்களாக வடிவம் எடுத்துள்ளன. “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பதைப் போன்று அமைதி வழியில் போராடியவர்களைத் தாக்கி உசுப்பேற்றி யதையடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் பரவின.
மகிந்த ராஜபக்சவின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன. ராஜபக்சக்களின் குடும்ப நினைவுச் சின்னம் அமைந்திருந்த இடமும் தாக்குதலுக்கு உள்ளாகியது. பசில் ராஜபக்சவின் இல்லம், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய வீடுகள் அலுவலகங்கள் என்பனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரது வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு உடைமைகள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தில் வெல்ல முடியாதவர்கள் என கருதப்பட்ட விதலைப்புலிகளை ஆயுத ரீதியாக மௌனிக்கச் செய்ததையடுத்து, மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் வரலாற்று வெற்றி நாயகனாகப் போற்றிப் புகழ்ந்தனர். அவரது முதன்மை நிலையில் ராஜபக்ச குடும்பத்தினரின் தலைமையில் அரசியல் ரீதியாகக் கட்டுண்டு கிடந்தனர்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் சிங்கள மக்களினதும், பௌத்த மத பீடங்களினதும் உயர்ந்த கௌரவத்துக்கும் மரியாதைக்கும் உரியவராக மகிந்த ராஜபக்ச திகழ்ந்தார். அதேபோன்று அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் உயர் நிலை கௌரவத்தையும் மரியாதையையும் பெற்றிருந்தார். ஆனால் இனவாத மதவெறி கொண்ட ஆட்சிப் போக்கு காரணமாக தமிழ் முஸ்லிம் மக்கள் இவ்விரு தலைவர்கள் மீதும் அரசியல் ரீதியாக வெறுப்புணர்வைக் கொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி மன்றம் ஒன்றில்கூட தலைவராகச் செயற்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமே அற்ற நிலையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, பௌத்த சிங்கள மக்கள், ராஜபக்சக்களின் இனவாத மதவாத பிரசாரத்தில் மூழ்கி, அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். பௌத்த சிங்கள மக்களாகிய 69 இலட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வரலாற்று சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டரை மூன்று வருடங்களில் நாடு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகியது. அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே முடியாத அளவில் நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்கள். இந்த நெருக்கடி நிலைமையே ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலக வேண்டும். ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் ஒன்று திரண்டு வீதிகளில் இறங்கிப் போராடச் செய்தது.
கோட்டா கோ கம எரிந்தது
நாட்டின் வளங்களைச் சுரண்டி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்து, மக்களை நடுத்தெருவில் அவர்களே தவிக்கச் செய்தனர் என்று மக்கள் சீற்றம் கொண்டனர். அதன் விளைவாகவே நாடெங்கிலும் ராஜபக்சக்களுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னெழுச்சி பெற்ற இந்தப் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டது. அறவழியில் கட்டுப்பாட்டுடன் உறுதியான முறையில் இந்தப் போராட்டம் இடம்பெற்று வந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வீதிகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று தவிக்க நேரிட்டது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போதிலும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிலைமை அவர்களை அரைப்பட்டினி நிலைமைக்கு இட்டுச் சென்றது மட்டுமல்லாமல், ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசுக்கும் எதிராக வெகுண்டெழச் செய்திருந்தது.
இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் இளைஞர் யுவதிகளும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் பிரதான பங்கேற்றிருந்தனர். அரச தலைவர்களின் அலுவலகங்களின் முன்னால் இடம்பெற்ற போராட்டங்கள் இரவு பகலாகத் தொடர்ந்து இடம்பெற்றன. அந்த அலுவலகங்கள் போராட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்ததனால், அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியது. ராஜபக்சக்கள் பெரும் சவால்களையும், பொது வெளியில் பெரும் சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிட்டிருந்தது.
ஆனாலும் இந்த இரண்டு போராட்ட களங்களிலும் இளைஞர்களும் நடுத்தர வகுப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அறவழியில் – சாத்வீக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்ட களங்கள் மீதே பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களாகிய மகிந்த ராஜபக்சவின் அரசியல் விசுவாசிகள் குண்டர்களாக மாறி பெரும் தாக்குதலை நடத்தினார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியதுடன், காலிமுகத் திடலில் அமைந்திருந்த முதலுதவிச் சிகிச்சை நிலையம் உள்ளிட்ட கூடாரங்களைத் தீயிட்டு எரித்து அழித்தார்கள். இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
நாடே பற்றி எரிந்தது
பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் கூட்டியிருந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் கூட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்தக் கூட்டம் முடிவடைந்ததையடுத்து, அலரி மாளிகைக்கு வெளியில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைத் துறக்கக் கூடாது எனக் கோஷமெழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் பொதுஜன பெரமுன குண்டர்களினால் வைக்கப்பட்ட தீ அந்தச் சம்பவத்துடன் அணைந்துவிடவில்லை. அங்கு தாக்குதல் நடத்தி, போராட்டக்காரர்களைக் கலைத்துவிட்டு, பேருந்துகளில் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குண்டர்கள் மீது அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் கோபத் தீ சில மணித்தியாலங்களிலேயே வெஞ்சினத்துடன் பாய்ந்தது.
குண்டர்கள் வழி மறிக்கப்பட்டார்கள். அவர்கள் பயணம் செய்த பேருந்துகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டன. கொழும்பு பேரா வாவிக்கருகில் வழி மறிக்கப்பட்ட குண்டர்களை போராட்டக்காரர்கள் வாகனங்களுடன் குண்டுக் கட்டாகத் தூக்கி வாவியில் எறிந்தார்கள். வாவிக்குள் சிக்கியவர்கள் இரவு முழுதும் நீரில் இருந்து வெளியேற முடியாமல் தடுத்து வைத்துத் தண்டிக்கப்பட்டார்கள்.
இதேபோன்று திம்பிரிகஸ்யாய, நிட்டம்புவ உள்ளிட்ட பல இடங்களிலும் அந்தக் குண்டர்கள் பயணம் செய்த வாகனங்களும் பேருந்துகளும் வழி மறிக்கப்பட்டு எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் அரச எதிர்ப்புப் போராட்டக்கார்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதாக அடையாளம் காணப்பட்ட அரச நாடாளுமன்ற உறுபினர்கள் சிலரதும், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் உறுப்பினர்கள் சிலரதும் வீடுகள் அலுவலகங்கள் என்பனவும் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் காலிமுகத் திடலில் அரச ஆதரவாளர்கள் வைத்த தீ நாடெங்கிலும் பல இடங்களிலும் அரச ஆதரவளார்களது வீடுகள் அலுவலகங்களில் பற்றி எரிந்தது. இதனால் சாத்வீக வழியில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டு வந்த அரச எதிர்ப்புப் போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறைப் போராட்டமாக மாற்றமடைந்தது. சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிசாரினால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நிலைமைகள் கட்டுக்கடங்குமா?
இந்த நிலையிலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக வீதிகளில் இறக்கப்பட்டார்கள். பொதுச் சொத்துக்களுக்கும், தனியார் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கும் அதிகாரமளிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார்.
பொருளாதார நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் துவண்டு தவிக்கின்ற நிலையில் தங்கள் உணர்வுகளை போராட்ட வடிவில் வெளிப்படுத்துவது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை. அது அவர்களின் இறைமை சார்ந்த அடிப்படை உரிமையும்கூட. அவசரகாலச் சட்டத்தின் மூலமாகவோ ஊரடங்கு உத்தரவின் ஊடாகவோ அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறு செய்வது அராஜகமாகும். சர்வாதிகார அடக்குமுறையுமாகும்.
ஆனால் அமைதி வழியில் போராடியவர்களை வன்முறையில் ஈடுபடச் செய்யும் வகையில் அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் எதிரில் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியவர்களும், அவர்களை வழிநடத்தியவர்கள், அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்கள் பரவலாக எழுந்திருக்கின்றன. அதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியினால் எழுந்துள்ள வாழ்க்கைச் சுமைகளைத் தாங்க முடியாமல் தவிக்கின்ற மக்களை மேலும் நெருக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அவசரகாலச் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு முப்படைகளையும் வீதிகளில் இறக்கியுள்ளமை கைமீறியுள்ள நாட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. அதற்கான முயற்சிகள் நிலைமைகளை மேலும் சிக்கலாக்கி வேண்டத்தகாத நிலைமைகளையே உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதி வழங்கலின் காலதாமதத்தால் இலங்கையே அழிகிறது | சூ.யோ.பற்றிமாகரன்
- விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடை ஓர் இனவழிப்புப் போருக்கு வழிவகுத்ததா? – பேர்லினில் நடைபெறுகிறது 3வது மக்கள் தீர்ப்பாயம் | ஜெயந்திரன்
- அழுது தொழுது பெறுவதல்ல நீதி தேசமாக எழுந்து பெற அழைக்கிறது முள்ளிவாய்க்கால் நாள் | இலக்கு மின்னிதழ் 182 ஆசிரியர் தலையங்கம்
[…] […]