Home செய்திகள் தியாக தேசம்

தியாக தேசம்

தியாக தேசம்

2009  இற்குப் பின்னரான காலத்தில் நாம் பல்வேறு சிக்கல்களை  கேள்விகளை எதிர் நோக்குகிறோம்.  எவ்வாறு மீளெழுவது, நமது வரலாற்றில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம், இறுதிப் போரை நாம் வரலாற்றில் எவ்வாறு எடுத்துச் செல்வது,   மாவீரர்களின் இறுதி நிலையான (last stand) நந்திக்கடலின் முக்கியத்துவம் என்ன, மக்களை எவ்வாறு ஒற்றுமைப் படுத்துவது, எதிர்காலத்தில் தலைவர் பிரபாகரனின் பங்கு தமிழ் தேசியத்தில் எது மாதிரி இருக்கவேண்டும், தலைவர் இருக்கிறாரா இல்லையா, எதிர்காலப் பாதையும் உத்திகளும்  என்ன, வரலாறு காட்டும் வழிகள்  எனப் பல்வேறு கேள்விகள் உள்ளன. இவ்வாறான கேள்விகளை நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளி ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு முயற்சிதான் பிரபாகரன் சட்டகம் என்ற நூலாக வெளியிடப்பட்டது.  இக்கட்டுரையின் நோக்கம் மேலும் பல புதிய விடைகளையும், விளக்கங்களையும், கேள்விகளையும் பகிர்வதே.

சில நேரங்களில் சில அதிசயங்கள் நடந்து நமது வேலையை எளிதாக்கும். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் எமது ஆராய்ச்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது.  வாட்டர்லூ பல்கலைக் கழகத்தில் இருக்கும் சுடீவன் மாக்கு (Stevan Mock) என்ற  சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர் நமக்கு பயனுள்ள ஆராய்ச்சியே செய்திருக்கிறார்.  தங்களது இறையாண்மையை போரில் இழந்த தேசங்கள் தங்களை எவ்வாறு மீள் கட்டமைத்துக் கொள்கின்றன, தங்களது அடையாளத்தை எவ்வாறு உருவாக்குகிறது என்று 2009-இல் ஒரு ஆய்வை[1,2] வெளியிட்டிருக்கிறார்.  அது இப்பொழுதுதான் எனது கண்ணில் பட்டது.  இது ஈழப்போராட்டத்தைப் பற்றி ஒரு வரிகூட பேசவில்லை என்றாலும், இந்நூலின் ஒவ்வொரு வரியும் நமக்காகவே எழுதப்பட்டது போலுள்ளது. இனி இந்நூலிலுள்ள தத்துவங்களை நமது போராட்டத்தின் வழியாகப் பார்த்து, பல்வேறு பயனுள்ள விளக்கங்களைக் காண்போம்.

1.தேசத்தின் அடித்தளம் என்ன?

இனம் (ethnie) வேறு தேசியம் வேறு. இனம் என்பது தனித்த மொழி பண்பாடு மூலம் தொன்று தொட்டு வரும் அடையாளம்.   ஆனால் தேசம் என்பது நவீன கட்டமைப்பு. ஒரு தேசத்தில் அனைவரும் சமம் என்ற உணர்வு கொண்ட ஒரு பெரிய கற்பனை சமூகம் (Imagined community).  இது  கட்டமைக்கப்படுவது. ஓர் இனம் தானாக தேசிய உணர்வு பெறுவதில்லை. இந்தியாவில் பல்வேறு இனங்கள் உள்ளன, ஆனால் அவை தங்களை தனித்த தேசமாக உணர்வதில்லை. தமிழினமும் வெள்ளையர்கள் வெளியேறும் காலத்தில் தேசிய உணர்வு கொள்ளவில்லை.

While the ethnie may come into existence by its birth, the nation only comes into being through sacrifice [1]

ஓர் இனம் தன்னை தேசியமாக உணர வேண்டுமானால், அதற்கு ஒரு தியாகக்   கட்டுக்கதை அல்லது வரலாறு வேண்டும். தேசத்தின் அடித்தளம் என்பதே இரத்த தியாகம்.  தியாகம் இல்லாத இனம் தேசிய உணர்வு பெறாது.  இதை நமது வரலாற்றில் பார்த்தாலே தெளிவாகும். தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கும் புலிகளின் தியாகத்திற்கும் நேரடித் தொடர்பு கொண்டது.  புலிகள் இரத்தம் சிந்த ஆரம்பித்த பின்னர் தான் தமிழ்த்தேசிய உணர்வுகள் வீறுகொண்டு எழுந்தது. இன்று தமிழகத்தின் தமிழ்த்தேசிய எழுச்சியின் ஆதாரமாக இருப்பது புலிகள் சிந்திய இரத்தம்தான்.

இங்கு முக்கியமான கேள்வி என்பது ஏன் தியாகம் தேசியத்திற்கு அடித்தளமாக இருக்கவேண்டும்.  இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய உளவியல், மனிதன் காட்டுவாசியாக இருந்த காலத்திலிருந்து தொடர்வது. கடவுளுக்கு இரத்த பலிகொடுத்து, படையல் வைத்து, சடங்குகள் செய்வது உலகில் அனைத்து காட்டுவாசி சமூகங்களிலும் பொதுவானது. அது இன்றும் பல இடங்களில் தொடர்கிறது. இதற்கான அடிப்படை உளவியல் காரணம் என்பது அதுதான் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.   பலி இல்லாவிட்டால் சமூகம் என்பது இல்லை. மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர், இன்று காணும் பெரும் மதங்கள் தோன்றின. அவற்றின் அடித்தளத்தை பார்த்தால், அதிலும் பலி, தியாகம், சடங்குகள், அவற்றை சார்ந்த கட்டுக்கதைகள் நிரம்பி இருக்கும்.

அவற்றைக் கொண்டே மத அடிப்படையிலான சமூகங்கள் தோன்றின.  உதாரணமாக கிறித்தவ சமூகத்தின் அடிப்படை என்பது ஏசுவின் இரத்த தியாகம். ஏசு உயிரோடிருந்த பொழுது, கிறித்துவ சமூகம் உருவாக்கவில்லை, தியாகத்தின் பின்னர்தான் உருவானது.  நவீன உலகு உருவாகிய பின்னர், மதத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக தோன்றியதுதான் தேசம் என்ற கட்டமைப்பு. அந்த தேசிய கட்டமைப்பின் அடித்தளம் என்பது வீரர்களின் இரத்த பலி, அவர்களைப் போற்றும் சடங்குகள், மற்றும் தேசிய வரலாற்றுக்கதைகள்.  தேசம் என்பது மதசார்பற்ற மதம் என்று சமூக அறிவியலாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

அடிப்படையில் எந்த ஒரு சமூகத்தையும் தியாகம் இல்லாமல் உருவாக்க முடியாது. இது மனிதனின் அடிப்படை உளவியல் தன்மை.

a national society is a political community based on the principle of common culture, enabled by a foundational memory of generative sacrifice.[1]

புலிகள் இரத்தம் சிந்தி, மாவீரர்களுக்கு நடுகல் கோயிலைக்கட்டி, மாவீரர்நாள் முதற்கொண்டு பல சடங்குகள் ஏற்படுத்தி, வீர வரலாற்றை உருவாக்கி, மக்களின் மனதில் அந்த தியாகத்தை உணரவைத்துதான் தேசியம் வளர்த்தார்கள். அந்த தியாகம் இல்லாமல் தேசியம் என்பதே இல்லை.   அனைவரும் இரத்தம் சிந்தினால், அனைவரும் உறவினர் ஆவார்கள் என்கிறார்கள் சமூக அறிவியலாளர்கள். சமூக ஒற்றுமைக்கு போரில் வெற்றிதோல்வி முக்கிய அல்ல, இரத்தம் சிந்துவதுதான் முக்கியம்.

Wars, whose unifying effect endure, must be costly. Not winning or losing, but serious bloodletting is the important factor in ritual success. WHEN ALL BLEED, EVERYONE IS KIN.[3]

அடிப்படையில் தமிழ்த்தேசித்தின் அடித்தளம் என்பது பிரபாகரனும் மாவீரர்களும் தான். அவர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் என்று ஒன்றில்லை, தமிழின ஒற்றுமையும் இல்லை.  பிரபாகரனுக்குமுன் பலர் தமிழ்த்தேசியம் பேசியிருக்கலாம், ஆனால் தமிழ்த் தேசிய உணர்வுகள் மக்களிடம் இல்லை.

இன்றும் இரத்தபலி கொடுத்துதான் பெரும்பான்மையான தமிழர்கள் வீடு கட்டுகிறார்கள். அது வீட்டுக்கு பொருந்துமோ இல்லையோ, ஆனால் நாட்டுக்குப் பொருந்தும். முந்தைய தமிழ்த்தேசிய அரசியல் அமைப்புகள் கட்டியவுடன் சில காலத்தில் இடிந்து விழுந்தன அல்லது பெரிதாக வளரவில்லை. ஏனெனில் அவற்றிற்கு தியாக வரலாறு இல்லை. ஆனால் இன்று அப்படியில்லை. இன்றைய தமிழ்த் தேசியத்திற்கு யாருக்கும் இல்லாத அளவு இரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

தியாகம் பகுத்தறிவற்றது, அது சமூகத்தின் அடிப்படையாக இருக்க முடியாது என்று சிலர் வாதிடலாம். உண்மை என்னவென்றால் மக்களை பகுத்தறிவின் மூலம் ஒரு தேசியமாக ஒன்று திரட்ட முடியாது என்பது சமூக அறிவியலாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை. சமூகத்தின் அடித்தளம் என்பது பகுத்தறிவற்றதன் மூலமே கட்டியமைக்கப் படுகிறது.  இதற்கான காரணங்கள் ஆழமானவை என்பதால் இப்பொழுது இதை விவாதிக்கவில்லை. வேண்டுபவர்கள் இந்நூலைப் [4] படிக்கவும்.

REPORT THIS ADPRIVACY

society itself is ultimately based not upon reasoning or rational agreement but upon a non-rational foundation. If people acted purely on a rational basis, they would never be able to get together to form a society at all. [4]

தமிழ்த் தேசியத்திற்கு புலிகளின் தியாகம் தவிர வேறு  எந்த மாற்றும் கிடையாது.  அவ்வாறான மாற்று ஒன்று இருந்தால், அது புலிகளின் தியாகத்தைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். அது எக்காலத்திலும் கிடைக்கப்போவதில்லை.

தமிழின ஒற்றுமையையும், தமிழ்த் தேசியத்தையும் வளர்க்க வேண்டுமானால்,  மக்கள் அனைவரும் மாவீரர்களின் தியாகங்களை தொடர்ந்து நினைவுகூருவதன் மூலமே முடியும். இதை சரியாக உணர்ந்து செயல்படுத்தியது அண்ணன் சீமான் அவர்களின் பெரிய சாதனை.  நாம் தமிழர் அமைப்பின் வளர்ச்சி வேகம் என்பது அவர்கள் எவ்வளவு வேகமாக புலிகளின் தியாகத்தை அனைவருக்கும் கொண்டுசென்று உணர வைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

2.தேசத்தின் இறப்பு பிறப்பாகிறது

வரலாற்றில் எந்த போரில் பெரும் உயிர் தியாகங்களுடன் ஓர் இனம் தனது இறையாண்மையை சுயநிர்ணய உரிமையை இழக்கிறதோ, அந்த இழப்புதான் அவர்களின் தேசத்தின் பிறப்பாகிறது. ஏனென்றால் அங்குதான் ஒரு தேசத்தை கட்டியமைக்கத் தேவையான தியாக வரலாறு உருவாகிறது.  அது அவர்களின் முதன்மை அடையாளமாகிறது.  இது முரணாகத் தோன்றலாம், ஆனால் இதுதான் உலகில் பல தேசிய வரலாற்றில் ஏற்படும் நிகழ்வு: அந்தப்போரின் முக்கியமான தியாகி தேசத்தின் குறியீடாகிறார்.

It may seem counter-intuitive to propose that a nation’s defeat and its foundation could occur in the same symbolic moment, but such is the nature of ambivalence and the mechanisms for resolving it. [1]

2009-இல் என்று பேரழிவு ஏற்பட்டதோ, அன்றுதான் தமிழகத்தில் திராவிடத்தின் பிடியை உடைத்துக்கொண்டு தமிழ்த்தேசியம் ஒரு புதிய பிறப்பெடுத்தது.   இதுதான் இறப்பில் பிறப்பு என்பது.  இரத்த தியாகம் தேசிய உணர்வுக்கான அடிப்படை என்பதால், பாரிய இழப்பு ஒரு தேசிய உணர்வைத் தூண்டி மக்களை ஒன்று சேர்க்கிறது.

உதாரணமாக பிரான்சுக்கு சோன் ஆஃபு ஆர்க்கு (Joan of Arc), இசுரேலுக்கு மசாதா (Masada), சேர்பியாவுக்கு கொசோவோ போலெ (Kosovo Polje, நவீன கிரேக்கர்களுக்கு கான்சுடண்டினோ போல் வீழ்ச்சி (Falll of Canstantinopol), செக்கோசுலோவாகியாவுக்கு வெள்ளைமலைப் போர் (Battle of White Mountain), குபேக்கிற்கு(Quebec) Plains of Abraham, கட்டலோனியாவிற்கு (Catalonia) பார்சிலோனா வீழ்ச்சி (Fall of Barcelona), கானாவிற்கு (Gana) Nana yaa Asantewa.

அந்த இழப்பை தேசம் பின்வருமாறு கட்டியமைக்கிறது. ஒருவர் (அல்லது சிலர்)

*தேசத்தின் குறியீடாக நிற்பார்

*தோற்போம் என்று முன்கூட்டியே தெரிந்தும்   தேசத்திற்காக   வீரமரணம் அடைவார்

*இறப்பு உறுதியாயினும் அதியுச்ச வீரத்துடன் போர்புரிவார்.

*அவருக்கு நெருங்கியவர்களாலோ அல்லது அவரின் சமூகத்திலிருந்து சிலர்  துரோகம் செய்வார்கள்.

*அதன் விளைவாக  முக்கியமான  வெளி சக்திகளால் எதிரிகளால்   கொல்லப்படுவார்

*இறுதியில் இறைவனாலயோ அல்லது கூட்டு சமூக தியாகத்தாலோ அதே  எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.

*அவர்தான்  தேசத்தின் ஆன்மா.  அந்த ஆன்ம பலத்துடன் தேசம் இழந்ததை மீட்கும், எக்காலத்திலும் யாராலும் அழிக்க முடியாதபடி தொடரும்.

ஒரு தேசம் தான் இழந்த இறையாண்மையை வென்றெடுக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு தேசியமும் பின்பற்றும் உளவியல் இதுதான்.  இதை “தியாக உளவியல்” என்போம். ஒவ்வொரு தேசத்திற்கும் இது வெவ்வேறு வடிவமெடுக்கலாம்.  பெரும்பாலான தேசங்களுக்கு உண்மையான வரலாறு இல்லாததால், கட்டுக் கதைகளை உருவாக்கி தேவைகளை நிரப்புகிறார்கள். ஆனால் நமக்கு இது உண்மை வரலாறு.

2009-இல் தமிழர் தேசம் அதுபோன்ற அழிவை சந்தித்திருக்கிறது.  பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் இயற்கையாக தோன்றிய மேற்கூறிய உளவியலை ஏற்கனேவே உள்வாங்கி தலைவரை வழிகாட்டியாக, அடையாளமாக, தேசிய ஆன்மாவாகக் காண்கிறார்கள், ஆனால் சில முக்கிய கூறுகளை நாம் இன்னும் உள்வாங்கவில்லை.

போர் இலக்குகளை அடையாவிட்டாலும், போராளிகள் இறுதிவரை நின்று  தியாகம் செய்தது என்பது அறநெறி வெற்றி (moral victory).  அவ்விடம்தான் தேசத்தின் பிறப்பிடம்.  அது நமது முக்கிய அடையாளம்.  இது கொண்டாடப்பட வேண்டியது.  ஆனால் அன்று நடந்த இனவழிப்பை முதன்மையாக எடுத்துக்கொண்டு அந்நாளை முழுமையான துக்க தினமாக மாற்றிவிட்டோம். சிலர் இனவழிப்பை தங்களின் அடையாளம் என்றும் கூறுகின்றனர். உலகில் எந்த இனமும் இனவழிப்பை தங்களின் அடையாளமாக எடுத்துக்கொள்வதில்லை.

அது நினைவுகூரப் படவேண்டிய விடயம், ஆனால் அது அடையாளம் ஆகாது. யூதர்களுக்கு மசாதா அடையாளம், இட்லர் நடத்திய இனவழிப்பு அல்ல. புலிகள் இறுதிவரை நின்று போர் புரிந்தது நின்ற இடம் நமது அடையாளம்.  அதை நந்திக்கடல் என்று அடையாளப்படுத்தி அதை முக்கியமான அடையாளமாகப் பார்க்கவேண்டும் என்று பரணி கிருஷ்ணரஜனி பத்து ஆண்டுகளாகக் கூறிவருகிறார், ஆனால் அதை தேசம் இன்னும் செவி மடுக்கவில்லை. இன்று இனவழிப்பு நாள் என்று மே 18ஐ அடையாளப்படுத்தி நிற்கிறோம்.

கட்டலோனியா பார்சிலோனாப் போரில் (செப்டம்பர் 11, 1714) சுபேயினிடம் வீழ்ந்து தனது இறையாண்மையை இழந்தது. இன்று  கட்டலோனியா  தேசியப் போராளிகளிகளுக்கு அது தேசிய நாள் (National Day of Catalonia) , இருப்பதிலேயே முக்கியமான நாள்.  செர்பியா தாங்கள் போரிட்ட இறையாண்மை இழந்த நாளை விடோவுடன் நாள்(Vidovdan  day) என்று தேசிய விடுமுறை அறிவித்து அதை “சேர்பியர்களின் எருசலம்”  (Serbian Jerusalem) என்று கொண்டாடுகிறது.    யூதர்களுக்கு மசாதா என்பது அவர்களின் வீரத்திற்கான குறியீடு. இது  யூதர்களின் இடிக்கப்பட்ட கோவிலின் அடையாளத்திற்கு சமமாகக் கருதப்படுகிறது. இசுரேலின் போர்வீரர்கள் “மசாதா இனிமேல் வீழாது” என்று உறுதி எடுத்துக்கொள்கிறார்கள்.

நந்திக்கடல் சமரை தமிழ்த்தேசிய எழுச்சி நாளாக நாம் கொண்டாடவேண்டியது முக்கியமானது.  அது மே-19 ஆகக்கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லது இனவழிப்பு நாளை ஒரு நாள் முன்னுக்குத் தள்ளலாம். முதல் நாளை இறப்பாகவும், மறுநாளை பிறப்பாகவும் எடுத்துக்கொண்டு ஒரு நல்ல உளவியலில் இந்நாளை அணுகலாம். அனைத்து தியாகங்களுக்கு உச்ச தியாகங்கள் இங்குதான் நடந்திருக்கின்றன. எத்தனையோ தளபதிகள், போராளிகள்  நின்று இரத்தம் சிந்திய இடம். இதைவிட அதிகம் தியாகம் நடந்த இடம் வேறில்லை.

இதன் முக்கியத்துவம் எந்த வகையிலும் மாவீரர் நாளை விடவோ அல்லது பிரபாகரன் பிறந்தநாளை விடவோ குறைந்தது இல்லை.  ஆனால் கண்டிப்பாக இனவழிப்பு நாளைவிட முக்கியத்துவம் வாய்ந்தது.   இதை தேசம்தான் கூடிப்பேசி முடிவுக்கு வரவேண்டும். போராளிகள் எதற்காக   எவ்வாறு இறுதிவரைப் போராடி இரத்தம் சிந்தினார்கள் என்பதைத் தொடர்ந்து நினைவுகூருவதன் மூலமே தேசம் தன்னை ஒருமைப்படுத்தி, இருப்பை தக்கவைத்து, குறிக்கோள்களை அடையமுடியும்.  இவ்வாறுதான் நம்மைப் போன்ற தேசியங்கள் வரலாற்றை அணுகுகின்றன.

the elevation of an image of defeat to a central role in the national construction of history and memory furthers the nation’s ultimate purpose [1]

பிரிட்டனின் வேல்சு (Wales) இனமக்கள் தாங்கள் இறுதிவரை நின்று போராடி இறையாண்மை இழந்த இடமாக பல சின்னங்கள் இருந்தாலும், எதையும் நினைவு கூறுவதற்கென்று அடையாளப் படுத்தவில்லை.  அதை செய்யாமல் வென்ற போர் வெற்றிகளை மட்டுமே அடையாளப்படுத்த்தினர். மேலும் இறுதிவரை போரிட்டு இறந்த தலைவரான கிளிண்டர்(Glyndwr) இறக்கவில்லை, ஒரு குகையில் இருக்கிறார், மீண்டும் வருவார் என்று எடுத்துக் கொண்டது.   இவ்வாறான வரலாறு வேல்சை அடிபணிவு, இணக்க அரசியலுக்கு இட்டுச் சென்றது. வரலாறு காட்டும் வழியில் நாம் சரியாகப் பயணிப்பது முக்கியமானது.

  1. தேசத்தின் பலி

பிரபாகரன் இந்தியப்படைகளுடன் வாழ்வா சாவா என்று போரிடும்பொழுது ஒரு கையில் பெட்ரோலுடன் போர் புரிந்தார். தான் போரில் இறந்தால் தனது உடலை எரித்துவிடுமாறு ஆணை பிறப்பித்திருந்தார்.  எக்காலமும் சரணடைவதோ, தப்பி ஓடுவதோ, அல்லது இறந்த உடல்கூட பிடிபடுவதோ கூடாது என்பதுதான் நிலைப்பாடு.  இது ஏன்? நீங்கள் நினைக்காலம் அது பிரபாகரனின் பண்பு என்று.  நான் கேட்கிறேன் “நீங்கள் பிரபாகரன் இறுதிப்போரில் சரணடைவதையோ,  அல்லது சடலம் பிடிபடுவதையோ விருப்புவீர்களா?”  எந்த தமிழ்த் தேசியவாதியும்  இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டான்.

இலங்கை போலியான ஒரு சடலத்தைக் காண்பித்து உளவியல் யுத்தம் செய்தது. அதை சரியாக அடையாளம் கண்டு தேசம் நிராகரித்தது என்பது தேசிய உளவியலைத் தெளிவாகக்  காண்பிக்கிறது.   அது தலைவனை அவமானப் படுத்துவதாக, தேசத்தை  அவமானப் படுத்துவதாகப் பார்க்கப்படும்.  சரி, அப்படி என்றால் போரிட்டு பிரபாகரன் மரணிப்பதை விரும்புகிறீர்களா?   அவர் தேசியத்தின் அடையாளம் ஆயிற்றே, அவர் மரணம் கூடாது என்ற பதில் வரும்.  அடிப்படையில் பிரபாகரன் உயிர் தப்பவும் கூடாது, மரணிக்கவும் கூடாது என்றால் என்ன செய்வது?    இது நாம் எதிர்நோக்கும் சிக்கல் மட்டுமல்ல, அனைத்து தேசியங்களும் எதிர்நோக்கும் உளவியல்   சிக்கல்.

இரகசியம் இதுதான்:  தேசம் தனது தலைவனை உயிராக நேசிக்கிறது, ஆனால் அதே தேசம் தனது வாழ்வுக்காக தலைவனின் உயிரைப் பலி கேட்கிறது.  பிரபாகரன் சரணடைந்தாலோ அல்லது பிடிபட்டாலோ, அது தேசத்தின் இழப்பு.  அவர் இறந்தால் தேசம் உயிர் பெறுகிறது.  அடிப்படையில் ஒரு தேசம் தனது தலைவனின் உயிரைப் பலி கொடுப்பதன் மூலமே தன்னை உயிர்ப்பிக்க முடியும்.

the “totem secret” – that it is the community itself that desires and demands the death of its own, as a means of renewal in order for that community to be maintained [1]

பிரபாகரன் பெட்ரோலுடன் திரிந்தது தனக்காக அல்ல, தேசிய மக்களின் விருப்பத்திற்காக. அவர் தனக்காக எதையும் விரும்பியதில்லை. ஏசுவை மக்களைக் காக்கவந்த பலியாடு என்பர். அதே உளவியல்தான் இங்கும். பிரபாகரன் தேசத்தைக் காக்கவந்த ஆயுதம் ஏந்திய பலியாடு.  ஏசு உயிருடன் இருந்தபோது கிருத்துவ சமூகம் உருவாகவில்லை. இறந்தபின்தான் அந்த தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது.  தலைவன் இறந்தால்தான் அந்த தியாகத்தின் அடிப்படையில் தேசியம் உயிர்பெறும்.

இன்று தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று முடிவெடுக்காத நிலையில் இருக்கிறோம். தலைவரை உயிராக நேசிப்பதால் அவர் உயிரோடிருக்கவேண்டும், ஆனால் தேசத்திற்காக அவர் பலியாக வேண்டும் என்ற இரு எதிரெதிர் எண்ணங்களிலும் சிக்கி முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறது. வரலாறு இருவழிகளைக் காட்டுகிறது:

தலைவர் வீரமரணம் அடைந்தார் என்று ஏற்றுக்கொள்வது

இறந்தும் உயிரோடு இருக்க வேண்டுமானால் அது இறைவனாக இருந்தால் மட்டுமே முடியும். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

தேசத்திற்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மேலுள்ள இரண்டுமே தேசத்தில் இருக்கலாம், ஆனால் தப்பி உயிரோடு இருக்கிறார் என்பது தேசிய “தியாக உளவியல்” கட்டமைப்பில் பெரும் சேதத்தை உருவாக்கும், வரலாறு காட்டும் பாதையில் இருந்து விலகுவோம்.

எதுபோன்ற தேசத்தை பலி கொடுக்கிறோமோ, அதுவே நாம் அடையவேண்டிய கனவு தேசமாக  குறிக்கோளாக  மாறுகிறது  என்கிறார் சுடீவன் மாக்சு.  இறைவனுக்கு பலி அல்லது படையல் வைக்கும் பொழுது, தங்களிடம் இருப்பதிலேயே சிறந்தது குறையில்லாததுதான் பலியிடப்படும்.  தேசத்திற்காக ஆகுதியாகிய மாவீரர்களிலிருந்து, தலைவர், தேசம் வரை மாசுமருவற்றவர்கள்.  அது பலி கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தேசம் போன்ற தன்மையுடன் இருந்தது.   எப்படிப்பட்ட தேசம் பலிகொடுக்கப்பட்டதோ, அது தேசத்தின் குறிக்கோளாகிறது, அடையாளமாகிறது. இன்று புலிகள் உருவாக்கிய தேசம் அழிந்துவிட்டதால் நாம் மொத்தமாக மோசம் போகவில்லை. அது பல வெற்றிகளையும் உருவாக்கி இருக்கிறது. அதில் ஒன்று நமக்கான என்றென்றும் அழியாத கனவு தேசம். தியாக தேசம்.

நம்மால் இறையாண்மை கொண்ட நாட்டை உருவாக்க முடியும், ஆனால் புலிகள் படைத்த தேசம் போன்ற குற்றமற்ற,  சிறந்த தலைமையைக் கொண்ட, அதி ஒத்துழைப்பான,  சீரான,  வீரம் செறிந்த, ஒழுக்கத்தில் உயர்ந்த தேசத்தை நம்மால் என்றுமே உருவாக்க முடியாது. அது என்றும் எட்டாக்கனியாகவே இருக்கும். அதை முயன்று முயன்று தோற்பதுதான் நம்மை அழியாமல் வைத்திருக்கும். அது கலங்கரை விளக்கம் போன்றது, தொடர்ந்து பாதையை காண்பிக்கும், என்றென்றும் அழியாதது.  அடிப்படையில் தேசத்தின் பலி என்பது தேசத்திற்கு அழியா வரத்தை அழிக்கிறது. அதன் இறப்பில் புதிய பிறப்பு ஏற்படுகிறது.

4.தேசம் என்பது பிரபாகரனே

தேசத்தின் பலியாக இறக்கும் தலைவர் அத்தேசத்தின் குறியீடாகிறார். பிரபாகரன் அந்த தியாகத்தின் முதன்மைக் குறியீடு என்பதால் அவர்தான் தேசத்தின் குறியீடு. பிரபாகரன் தான் தேசம். பிரபாகரனை இழிவு படுத்துவது என்பது தேசத்தை இழிவு படுத்துவது. தேசத்தை அழிக்க பிரபாகரன் என்ற குறியீட்டை அழித்தால் போதுமானது. எதிரிகளின் நோக்கமும் அதுவே. தீவிரவாதி பயங்கரவாதி என்ற பதங்கள் எல்லாம் நம்மை அழிப்பதற்காக எதிரிகள் பயன்படுத்தும் அரசியல் உத்திகள்.  பிரபாகரனை இழிவு படுத்தும் அனைத்து செயல்பாடுகளுக்கும் நமது கடுமையான எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்.

If a symbol amounts to the nation’s effective if not purported foundation myth, a threat to it threatens the very foundations of the nation. Explains why nations might react more explosively to the violation of some symbols rather than others.[1]

ஒருமுறை பரணி கிருஷ்ணரஜனி அவர்களிடம் ஒரு உளவியல் சோதனை செய்தேன். ஒரு பேச்சுக்கு இலங்கை ஈழத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதற்கு முன்நிபந்தனையாக  தமிழர்கள் மாவீரர்களையும் பிரபகாரனையும் நினைவு கூருவதை நிறுத்த வேண்டும்  என்று கோருகிறது என வைத்துக் கொள்வோம். தமிழ்த்தேசம் இதற்கு சம்மதிக்குமா?  பரணி இதை ஏற்கனவே இந்த சோதனையை நண்பர்களிடம் செய்திருக்கிறேன் என்று கூறினார். பல நண்பர்கள் கோபப்பட்டிருக்கின்றனர், அதுபோன்ற நாடேத் தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்திருக்கின்றனர்.  தேசம் என்பது தியாகத்தின் அடிப்படையிலானது. அந்த தியாகத்தை எடுத்துவிட்டால், அது தேசம் அல்ல. இதுதான் காரணம்.  தேசம் என்பது எல்லையில் இல்லை, அது நமது உள்ளத்தில் இருப்பது.  அனைத்து தமிழர்களும் தியாகிகளை உள்ளத்தில் வாங்கும்பொழுது, தமிழ்த்தேசியம் ஓங்கி வளரும். அதன் பின்பு எல்லை என்பது காலம் சாதகம் ஆகும்போது தானாக உருவாகும்.

5.எதிரி, நண்பன், துரோகி

ஒருவரை நம்மவரா அயலவரா (insider/outsider) என்பதை அறிவதற்கான உரைகல்லாக தேசத்தின் குறியீடாக இருப்பவரை தேசியங்கள் எடுத்துக் கொள்கின்றன. உதாரணமாக மசாதவை நிராகரிப்பவன் இசுரேலிய யூதனாக இருக்க முடியாது.

Not only must insiders be capable of identifying with the saviour/hero in his moment of sacrifice, but if one can be associated with the enemy…one is thereby rendered ineligible for full membership to the national communion.[1]

தேசத்தின் குறியீடான பிரபாகரன் தமிழ்த்தேசியத்தின் உரைகல்.  ஒருவர் தமிழ்தேசியவாதியா இல்லையா என்று அறிவதற்கான எல்லைக்கோடு என்பது அவர் பிரபாகரனின், மாவீரர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கிறாரா இல்லையா என்பதே. தூற்றுகிறார்கள் என்றால் அவர்கள் எதிரிகள்.  தேசத்திற்குள் பல பிளவுகள் இருக்கலாம், ஆனால் குறியீடு என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுபடுவர்.

இசுரேலில் மத நம்பிக்கை கொண்டவர்கள் உண்டு, நம்பிக்கையற்றவர்கள் உண்டு, பல்வேறு முரண்பட்ட கட்சிகள் உண்டு.  ஆனால் அவை அனைத்தும் மசாதா என்றால் ஒன்றுபடும். தேசம் என்றால் பல்வேறு வேற்றுமைகள் இருக்கும். ஆனால் அவ்வேற்றுமைகளை ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சக்தி குறியீட்டிற்கு உண்டு. பிரபாகரன் அதுபோன்றவர். இன்று தமிழ்த்தேசியவாதிகள் பிரபாகரனை உரைகல்லாக பயன்படுத்துவதில் வியப்பில்லை.  மாவீரர் நாள் என்பது நண்பர்களையும், எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் காட்டும் நாள்.

எந்த அரசியல் அமைப்புகள் தேசியக் குறியீட்டை நிராகரிக்கின்றனவோ, அவர்கள் ஆளும் அங்கீகாரத்தை (legitimacy) இழக்கின்றனர்.

If one can successfully portray one’s political enemies as unqualified to claim association to the national totem, as being fundamentally opposed to its values and ideals, this amounts to the ultimate political victory, the absolute negation of their political legitimacy [1]

இன்று பிரபாகரனை குறியீடாகப் பார்க்கும் தமிழ்த்தேசியர்களின் பார்வையில் திராவிட கட்சிகள் அந்த அங்கீகாரத்தை இழந்துவிட்டன.   அதற்கு முக்கிய காரணம் அவர்கள் துரோகத்தின் குறியீடாக மாறி நிற்பதால்தான். அவர்களுடன் நிற்பவர்களுக்கும் துரோக முத்திரை குத்தப்படுகிறது.   உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் இதை அறிந்து செயல்படவேண்டும். அவர்களுக்கு உண்மையாகவே தர்க்க ரீதியாக எதிரிகளுடன் செயல்படுவதற்கு   நல்ல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அவர்களின் எந்த ஒரு விளக்கமும் எடுபடாது.  அவர்கள் வெளியாள், துரோகி என்று முத்திரை குத்தப்படுவார்கள். இது தேசிய உளவியல்.

6.கலங்கரை விளக்கம்

தேசியக்குறியீடு என்பது கலங்கரை விளக்கம் போல என்றென்றும் தேசத்திற்கு பாதை காண்பிப்பது. ஒரு தேசம் தனது உயர்ந்த இலக்குகளில், தனது   செயல்பாடுகளில், தனது ஒழுக்கத்தில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று உணர்த்தி  ஊக்கம் அழிப்பது.  பிரபாகரனும் மாவீரர்களும் தமிழ்த்தேசத்தின் கலங்கரை விளக்கமாக நாம் சிதறிப்போகாமல் பாதை காண்பிப்பவர்கள்.

தேசம் என்பது அனைவரும் சகோதரர்கள் என்ற ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு தட்டையான அமைப்பு. ஒரு சமூகத்தின் பல பாகுபாடுகளை ஒழித்து அனைவரும் சகோதரர்கள் என்று உணரவைக்கும் தன்மை தேசியக் குறியீட்டிற்கு உண்டு. பிரபாகரனின் தியாகத்தை உணர்ந்து ஏற்றுக்கொள்பவர்களுக்கு சாதிமத பாகுபாடுகள் ஏற்படாது. ஏற்றுக்கொண்ட அடுத்த நிமிடமே, அது ஒழிந்துபோகும். பிரபாகரன் தமிழ்த்தேசிய ஒற்றுமையின் சகோதரத்துவத்தின் முதன்மை அடையாளம்.

7.அதிக தியாகம் குறைந்த தியாகத்தை நீக்கும்  

தேசத்தின் அடிப்படை அடையாளம் என்பது தியாகமே. எந்த தியாகம் உயர்ந்ததோ, அது அடையாளமாகும்.

If society is indeed, at root, a sacrificial system, then it can be dissolved and replaced only if its participants come to adhere to another sacrificial system with greater commitment. [1]

தமிழகத்தில் 2009 இற்கு முன்வரை பெரியார் அடையாளமாகப் பார்க்கப்பட்டார். இன்று தமிழ்த்தேசியம் பேசுபவர் பெரும்பாலும் ஒரு காலத்தில் பெரியார் புகழ் பாடியவர்களே. அனைத்தும் 2009-இல் ஒரு நொடிப்பொழுதில் தலைகீழாக மாறியது.  இன்று தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் பிரபாகரனை உயர்த்துவதற்குக் காரணம் உயர்ந்த தியாகமே. உண்மையான தமிழ்த்தேசியவாதிகள் பிரபாகரனை அனைவருக்கும் மேலாக உயர்த்திப் பிடிப்பார்கள்.   பிரபாகரனின் தியாகத்தை வேறு எவராலும் எக்காலத்திலும் விஞ்ச முடியாது என்பதால், அவர்தான் தேசத்தின் நிரந்தரக் குறியீடு.

 8.மொழியைவிட தியாகம்தான் உயர்ந்தது.

மொழி என்ற அடையாளத்தை வைத்து மக்களை ஒற்றுமைப்படுத்த முடியாது, தியாகம் ஒன்றினால் மட்டுமே முடியும். செக்கோசுலோவாகியா நாட்டில் ஒரே மொழி பேசும் மக்கள் இருந்தாலும், அவர்கள் இருவேறு தேசங்களாக உடைத்தார்கள்.  ஏனெனில் அச்சமூகங்களுக்கு வெவ்வேறு தியாகக் கட்டுக்கதைகள் இருந்ததுதான் காரணம்.

the lack of a common defeat myth, and hence common conceptions of insider-outsider boundaries, can contribute to explaining the peaceful dissolution of Czechoslovakia in 1993, illustrating as well the primacy of myth over language as a basis for defining national boundaries.[1]

ஈழத்திலும் தமிழ்பேசும் இசுலாமியர் தங்களை தமிழராக அடையாளப் படுத்துவதில்லை.   ஒரு சமூகம் பொதுவாக ஒரே தியாகத்தை போற்றுவதுதான் ஒற்றுமையை ஏற்படுத்தும். தமிழினம் தனது தேசத்தை மொழி மூலம் வென்றெடுக்க முடியாது.   அனைவரும் பிரபாகரனையும் மாவீரர்களையும் அவர்களின் தியாகத்தை போற்றுவதன் மூலமே ஒன்றுபட முடியும்.

9.அர்த்தமுள்ள வாழ்க்கை 

அனைவரும் ஒரு நாள் இறப்போம். அதனால் மனிதர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை எதிர்பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் மதம் என்பது அந்த அர்த்தத்தை அளித்தது, ஆனால் இந்த நவீன வாழ்க்கையில் மதத்தின் பங்கு சுருங்கிவிட்டது, நம்பிக்கையும் குறைந்துவிட்டது. ஒருவர் அர்த்தமுள்ள வாழ்க்கையை அடையவேண்டுமானால், தன்னை தாண்டி ஒரு பொதுவான குறிக்கோளும் வழிகாட்டியும் தேவைப்படுகிறது.

இன்று அந்த அர்த்தத்தை பலருக்கு  அளிப்பது தமிழ்த் தேசியம்தான்.  பிரபாகரனும் மாவீரர்களும் உயர்ந்த இலக்குகளை வைத்து அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர்களால்தான் போதையிலும், சினிமா மோகத்திலும், காமத்திலும் அர்த்தமற்று ஊறிக்கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்த முடியும். இன்று பிரபாகரனை முன்னுதாரணாமாக எடுத்து பல இளைஞர்கள் தீய பழக்கங்களில் இருந்து விலகி நல்வழிப்பட்டிருக்கிறார்கள்.

  1. ஆபத்தை உணர்தல்:

ஒரு தேசம் “தியாக உளவியலை” உள்வாங்கியபின்   அதியுச்ச பாதுகாப்பு நிலைக்கு மாறும்.  தேசம் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி அழிந்து கொண்டிருக்கிறது என்ற பயம் ஏற்படும்.  சிறுசிறு விடயங்களையும் அவதானிக்கும், போர் மனநிலையில் இருக்கும்.  தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு இணங்காதவர்களை எதிரிகள், துரோகிகள், கொத்தடிமைகள் என்று அடையாளப்படுத்தும், எந்த ஒரு சமரசத்தையும் எதிர்க்கும்.

When the myth is activated, it produces a sense that the nation is continually on the verge of destruction or dissolution, which leads to a chronic wartime mentality inclined towards the perception of all non-conformists as traitors or enemies and a mistrust of compromise as a form of vassalage[1]

தமிழ்த்தேசிய அரசியல் 2009-இல் இருந்து இந்த மனநிலையில்தான் இருக்கிறது.   இதற்கு எடுத்துக்காட்டு தேவையில்லை.

11.வெற்றியா தோல்வியா

ஓர் இனம் தனது இறையாண்மையை இழக்கும் போரை எவ்வாறு வரலாற்றில் எடுத்துக்கொள்கிறது என்பது அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அதைத் தோல்வி என்று எடுத்துக்கொண்ட எந்த தேசியத்தையும் வரலாற்றில் காணமுடியவில்லை. ஒன்று அவர்கள் அழிந்திருக்கவேண்டும், இல்லையென்றால் அவ்வாறு குறிப்பிடும்படி எந்த தேசியமும் இல்லை.

For a fundamental aspect of the totem…is that it cannot be seen to lose. This is not the same as saying that it cannot be defeated, but defeat must be transformable into a sort of moral victory where the continued presence of the totem at the defining head of the group affords it an aura of durability – immortality, as it were – even in the face of catastrophe.[1]

வெற்றி என்று எடுத்துக்கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது.  உதாரணமாக காட்லாந்து (Scotland) வில்லியம் வாலசின் (William Wallace) தலைமையில் விடுதலைக்காக இங்கிலாந்துடன் போர் புரிந்தது. இது Brave Heart என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. போரின்  ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்றாலும், இறுதிப்போரில் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு நம்மைப்போன்று  தியாக வரலாறு இருந்தாலும், அவர்கள் அதை வெற்றியாக எடுத்துக்கொண்டார்கள். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, வாலசுக்கு பின்வந்த தலைமை போரில் வென்று ஓரளவு உரிமைகளை வென்றெடுக்கிறது. அதனால் வாலாசு வெற்றிக்கு அடித்தளம் இட்டவர் என்று, அவரை வெற்றியின் அடையாளமாக மாற்றியது.

இரண்டாவதாக,  வாலசு பெற்ற முதல் வெற்றி இடமான சுடெர்லிங்கில் (Stirling), அவருக்கு பெரிய வெற்றி நினைவுச்சின்னம் அமைத்தது. அதை பிரிட்டனும்  வாலசு ஒரு உரிமைப்போராளி என்று ஏற்றுக்கொண்டு அனுமதித்தது.  கடைசிவரை வாலசு தோற்ற இடத்தை அவர்கள் பெரிதாக அடையாளப் படுத்தவில்லை. அடிப்படையில் அவர்கள் வெற்றி மனநிலையை அடைந்ததால் அவர்கள் பிரிட்டனுடன் இணக்க அரசியலுக்குள் சிக்கினார்கள்.

நாம் வரலாற்றை சரியாக அடையாளப் படுத்துவது முக்கியமானது. நாம் இறுதிப்போரில் நமது இறையாண்மையை சுயநிர்ணய உரிமையை இழந்தோம். ஆனால் அதே நேரம் நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான பலமான தியாக வரலாற்று அடித்தளத்தை அப்போர் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இது நமது அறநெறி வெற்றி (moral victory). எங்கு நாம் இழந்தமோ, அது நமது முக்கியமான அடையாளம்.  இவ்வாறு நமது இழப்பை முக்கியமாக அடையாளப் படுத்துவதன் ஊடாக சரியான எதிர்ப்பு அரசியல், உரிமைப்போர் பாதையில் பயணிக்க முடியும்..

the extent to which a nation elevates defeat rather than victory points to the extent to which the national identity incorporates significant revisionist demands.[1]

முடிவுரை:

ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அடிப்படையில் அது எவ்வளவு ஆழமான தியாகங்களை செய்திருக்கிறது என்பதையும், அதை மக்கள் எவ்வளவு ஆழமாக நினைவு கூறுகிறார்கள் என்பதையும் பொறுத்தே அமைகிறது.  பிரபாகரனும் புலிகளுக்கும் உலகத்தில் வேறு எந்த தேசிய இனமும் செய்ய முடியாத தியாகங்களை செய்திருக்கிறார்கள். அதை மற்ற தேசிய இனங்களும் ஒப்புக்கொள்ளும், ஏன் எதிரிகளே ஒப்புக்கொள்வார்கள். நாம் பிரபாகரனையும் மாவீரர்களையும் ஆழமாக நேசித்து தியாகத்தை உள்வாங்கி அவர்களை வழிகாட்டிகளாக எடுத்துக்கொண்டால், வெற்றி உறுதியானது. இதுதான் வரலாறு காட்டும் வழி.

இன்று தமிழகத்தில் தமிழ்த்தேசிய அரசியல் என்பது பிரபாகரனின் மாவீரர்களின் தியாகத்தை முன்னிறுத்தி தியாக உளவியலின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதிலும் குறிப்பாக நாம் தமிழர் அமைப்பின் வெற்றிக்கான வளர்ச்சிக்கான அடிப்படையே இதுதான். தமிழ்த்தேசியம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

புலிகளின் தியாக வரலாறுதான் நமது அடையாளம், கவசம், ஒற்றுமை, வழிகாட்டி, கனவு தேசம், எதிர்காலம், பண்பாடு, நமது பொக்கிசம், எதிரிகளை வெல்வதற்கான மாபெரும் ஆயுதம்.

தரவுகள்

Mock, Steven. Images of defeat in the construction of national identity. London School of Economics and Political Science (United Kingdom), 2009.

Mock, Steven. Symbols of defeat in the construction of national identity. Cambridge University Press, 2011.

Marvin, Carolyn, and David W. Ingle. Blood sacrifice and the nation: Totem rituals and the American flag. Cambridge University Press, 1999.

Collins, Randall. Sociological insight: An introduction to non-obvious sociology. Oxford University Press, USA, 1992.

Karl, Dennis. Glorious Defiance: Last Stands Throughout History. Paragon House Publishers, 1990.

பின்குறிப்பு:

உலகிலுள்ள அனைத்து தேசங்களுக்கும் இதுபோன்ற இறையாண்மை இழப்பு போன்ற வரலாறோ கட்டுக்கதைகளோ இல்லை. உதாரணமாக அமேரிக்கா, ரசியா, சீனா போன்ற பெரிய நாடுகள் தங்களது தோல்விகளை முதன்மை அடையாளமாக எடுத்துக் கொள்வதில்லை. வரலாற்றில்  மற்றவர்களை ஆக்கிரமித்து பேரரசுகொண்ட நாடுகள், தோல்வியை  முதன்மை அடையாளமமாக  எடுப்பதை உளவியல் அனுமதிக்காது. ஆனால் அவை தோல்விகளை அறநெறியின் வெற்றியாக வரலாற்றை எழுதுவதில் தவறுவதில்லை.

தங்களது தியாகிகளை போற்றுவதிலும் தவறுவதில்லை. மேலும் பல்வேறு தோல்விகளை தங்களது வீரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் முதன்மைப் பாடங்களாக எடுத்துக் கொள்கின்றன.  உலகில் பல முக்கியமான தோல்விகள் இன்றும் வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது.  உதாரணமாக கீழுள்ள போர்களில், போர்வீரர்கள் அனைவரும் வீரமரணம் அடைகிறார்கள்: இவை அனைத்தும் அந்நாடுகளில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்.

பிரிட்டன்:  The Charge of the light Brigade

அமேரிக்கா:  லிட்டில் பிக்காரன், அலமோப் போர் (Battle of Little Big Horn, Battle of Alamo)

பிரான்சு: கேமரான் போர் ( Battle of Cameron )

ஆசுதிரேலியா/ நியூசிலாந்து :  கல்லிப்போலி (Gallipoli) போர். அது இன்று அன்சாக்கு நாள் (Anzac day) என்று நினைவு கூரப்படுகிறது. இது அவர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இப்போர் தோல்வியில் முடிந்தது, அனைவரும் இறக்கவில்லை.

ரசியா:  தாலின்கிராடு போர் (Battle of Stalingrad).  இப்போரில் ரசியா வென்றாலும் 1,100,000 வீரர்கள் வீரமரணம் அடைந்து பேரிழப்பு ஏற்பட்டது.

சேது இராமலிங்கம்

நந்திக்கடல் கோட்பாடுகள் நூல் வெளியீட்டுக்குழு

Exit mobile version