உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை; இலங்கை நடுநிலை வகித்தது எதற்காக? | கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி

இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்

இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம் உக்ரைன் ரஷ்ய போர்: இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பிரச்சினை என்பதைத் தாண்டி, ஒரு சர்வதேச விவகாரமாகி இருக்கின்றது. உலகின் பல நாடுகள் இதனால் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. உலக கட்டமைப்பிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது.

இலங்கையிலும், இதன் பாதிப்புகள் பலமாக இருக்கப் போகின்றது. இந்தப் பின்னணியில் பொருளாதாரத் துறை நிபுணரும், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

கேள்வி:
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஒரு பாரிய யுத்தம் வெடித்திருப்பது இதுதான் முதல் தடவை எனச் சொல்லலாம். இந்த யுத்தத்துக்கு அடிப்படைக் காரணம் என எதனைக் கூறுவீர்கள்?

பதில்:
1990 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் உடைவின் போது, பல சிறிய நாடுகளாக அது சிதறியது. அதில் சில நாடுகள் நேட்டோவுடன் இணைந்தன. நேட்டோ ஒரு பெரும் சக்தியாக தொடர்ந்து ரஷ்யாவை சுற்றிவளைப்பது ரஷ்ய ஆட்சியாளர்களிடையே ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், உக்ரைன் அந்த நேட்டோ அமைப்பில் இணைவது என்பதும் ரஷ்யாவின் இந்த படை நடவடிக்கைக்கு ஒரு காரணமாக இருந்தது.

இதனைவிட 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ரஷ்யா ஒரு பேரரசாக இருந்திருக்கின்றது. இந்த நிலையிலிருந்து ஒரு சாதாரண நாடாக ரஷ்யா மாறிவருவதை அங்கிருக்கக் கூடிய தேசியவாத சக்திகள் விரும்பாதிப்பதும் இந்தப் படையெடுப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இதனைவிட அதிபர் விளாடிமிர் புட்டீன் இவ்வாறான ஒரு போரைத் தொடுப்பதன் மூலமாக தன்னுடைய எதேச்சாதிகார ஆட்சியைத் தொடரலாம். தன்னைப் பலப்படுத்தலாம் எனவும் சிந்தித்திருக்கலாம்.

இதேபோன்ற பின்னணியில் தான் ரஷ்யா ஏற்கனவே அண்டை நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியிருந்தது. இதேபோன்ற நோக்கத்துடன்தான் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்திருக்கின்றது.

மற்றொரு பக்கம் பார்த்தால், பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு உலகம் முகம்கொடுக்கும் ஒரு காலமாகும். இவ்வாறு நெருக்கடிகள் வரும்போது இவ்வாறான மாற்றங்கள் நிகழ்கின்றது. ஆக, இது ஒரு அபாயமான காலகட்மாகத்தான் இருக்க வேண்டும்.

கேள்வி:
உக்ரைனை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் ரஷ்யாவின் இலக்காக இருக்குமா?

பதில்:
ரஷ்யாவின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது அவ்வாறுதான் தோன்றுகின்றது. உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமக்குச் சார்பான ஒரு ஆட்சியை அங்கு நிறுவுவதுதான் அவர்களுடைய இலக்காக இருக்கும்.

அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாரதூரமான பொருளாதாரத் தடைகளை விதிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன? இந்தப் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவில் ஏற்படக்கூடிய மக்களுடைய எதிர்ப்புக்கள் எவ்வாறிருக்கும் போன்ற அனைத்தும் ரஷ்யாவின் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாக இருக்கும். இருந்த போதிலும் புட்டீனின் தற்போதைய நடவடிக்கை களைப் பார்க்கும் போது, உக்ரைனை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அவரது நோக்கமமாக இருக்கும் என்பது தெரிகின்றது.

கேள்வி:
அண்மைக்கால வரலாற்றில் வியட்நாமை ஆக்கிரமித்த அமெரிக்கா தோல்வியுடன் திரும்ப வேண்டியிருந்தது. அதேபோல ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் யூனியனும் பின்னர் அமெரிக்காவும் தோல்வியுடன்தான் திரும்பியிருந்தது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு எவ்வாறு முடிவுக்கு வரும் என கருதுகிறீர்கள்?

பதில்:
சென்ற வருடம்தான் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து நீண்டகால போர் ஒன்றின் பின்னர் தோல்வியுடன் திரும்பியிருந்தது. அது இடம்பெற்று சில மாதங்களிலேயே உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடுத்திருக்கின்றது. இது ஒரு பொறியாகக்கூட இருக்கலாம். இந்தப் போர் ரஷ்யாவைப் பலவீனப்படுத்துவதாகவும் முடியலாம்.

ஆனால், இவ்வாறான யுத்தங்கள் எவ்வாறு முடிவுக்கு வரும். இதன் மூலம் வேறு யுத்தங்கள் உருவாகுமா போன்ற விடயங்களை நாம் முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால், அமெரிக்காவின் மேலாதிக்கம் தற்போது குலைந்துவரும் ஒரு நிலை காணப்படுகின்றது. இது எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கூறமுடியாது.

1930 களிலும் இவ்வாறான ஒரு நிலை காணப்பட்டது. உலக கட்டமைப்பில் அப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறான மாற்றங்கள் பாரிய அழிவுகளுடன்தான் இடம்பெறுவது வழமை.

கேள்வி:
ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள ரஸ்யா மீதான பொருளாதாரத் தடை  எந்தளவுக்குத் தாக்கத்தைக் கொடுக்கும்? ரஸ்யாவை இந்தத் தடைகள் நெருக்கடிக்கு உள்ளாக்குமா?

பதில்:
இது ரஷ்யாவுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதாகத்தான் இருக்கும். அதே வேளையில், இவ்வாறான தடைகள் வரும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் ரஷ்யாவும் இந்தப் போரை ஆரம்பித்திருந்தது. இங்கு சீனா, இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் எவ்வாறான உறவுகளை வைத்திருப்பார்கள் என்பதும் முக்கியமான ஒரு கேள்வியாகவுள்ளது.

போர் ஆரம்பமானவுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 11 நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளயிட்டிருந்தன. இந்தியாவும் சீனாவும் இதன்போது நடுநிலை வகித்தன. அதனால், இந்த நாடுகள் குறிப்பாக சீனாவானது ரஷ்யாவுடன் எவ்வாறான வர்த்தக உறவுகளை வைத்திருக்கப் போகின்றது. தடைகளை எதிர்கொள்ளக் கூடியளவுக்கு அதனால் உதவ முடியுமா என்ற கேள்வி உள்ளது. சீனாவுக்கும் உலக சந்தை தேவைப்படுகின்றது. அதனையும் கருதித்தான் சீனா தனது முடிவுகளை எடுக்கும். இந்தப் போர் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என்பதையும் பொறுத்துத்தான் தடைகள் ரஷ்யாவை எந்தளவுக்குப் பாதிக்கும்  என்பதைச் சொல்ல முடியும்.

கேள்வி:
தெற்காசியப் பிராந்தியத்தில் உக்ரைன் யுத்தம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்:
தெற்காசியாவில் கொரோனா காரணமாக பொருளாதாரப் பிரச்சினை கூர்மை யடைந்திருக்கும் நிலையில் – இந்தப் போர் மேலதிக நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்த நிலைமையில் தெற்காசியாவுக்குள் வரும் நாடுகளுக்கு இடையில் கூட குறிப்பாக, சீனா – இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் போன்ற முரண்பாடுகள் உருவாகலாம். மிகவும் ஸ்திரமற்றதான எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லமுடியாத ஒரு நிலைதான் இப்போதுள்ளது.

கேள்வி:
இந்தப் போரில் நடுநிலை வகிப்பதாக இலங்கை அறிவித்திருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன?

பதில்:
இலங்கை அரசாங்கமும் அவ்வாறுதான் கூறியிருக்கின்றது. இந்தியாவும் அவ்வாறு தான் கூறியது. இலங்கையும் இந்தியாவும் பெருமளவுக்கு ரஷ்யாவுடன் நட்புறவுடன் உள்ளன. இலங்கையைப் பார்த்தால் ரஷ்யாவுக்குப் பெருமளவு தேயிலையை ஏற்றுமதி செய்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ரஷ்யாவுடனான இந்த வர்த்தக உறவை இழந்துவிட அது தயாராக இல்லை. ஏற்கனவே பாரியளவிலான அந்நியச் செலாவணிப் பரச்சினையை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அதனையும் இழந்து விடுவது இலங்கையின் பொருளாதாரத்தை அதிகளவுக்குப் பாதிப்பதாக அமையும். ஆகவே நடுநிலையை கடைப்பிடிப்பதுதான் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் உபாயமாக இருக்கலாம்.

ஆனால், நீண்டகாலத்துக்கு இவ்வாறு நடுநிலையாக இருப்பது சாத்தியமானதா என்ற கேள்வியும் உள்ளது. காரணம் – அமெரிகா, ஐரோப்பா போன்ற நாடுகள் தொடர்ந்தும் பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதிக்கும் போது, இலங்கை மீதும் அவ்வாறு செய்வதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கலாம்.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் இலங்கையுடன் அதிகளவுக்கு வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கின்றன. அவற்றின் அழுத்தங்களையும் தவிர்க்க முடியாத நிலை இலங்கைக்கு ஏற்படும்.

கேள்வி:
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் இந்தப் போர் தொடரும் பட்சத்தில் எவ்வாறான பொருளாதாரப் பாதிப்புக்களை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

பதில்:
இந்தப் போர் வெடித்த பின்னர் பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. ரஷ்யா உலக சந்தையில் எரிபொருள், கோதுமை போன்றவற்றை பெருமளவுக்கு வழங்கி வருகின்றது. ரஷ்யா மீதான தடை, மற்றும் இந்தப் போர் காரணமாக பெருமளவு விலையேற்றத்தை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. முதலாவது எண்ணெய். பொருளாதாரம் இயங்குவதற்கு இது பிரதானமாக இருக்கின்றது. போக்குவரத்து, மின்சார உற்பத்தி இது அவசியமானதாக உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் – கொரோனா நெருக்கடி ஆரம்பமான போது எண்ணெய் விலை உலக சந்தையில் ஒரு பரல் 25 அமெரிக்க டொலராக இருந்தது. இந்தப் போர் ஆரம்பமான பின்னர் அது 113 டொலராக அதிகரித்துள்ளது. அதாவது, நான்கு மடங்குக்கும் அதிகமான விலை அதிகரிப்பு அது.

இலங்கை ஏற்கனவே பாரிய பொருளாதார – வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும் பின்னனணியில் இவ்வாறான பாரிய விலை அதிகரிப்பு இலங்கைக்கு பெரும் பிரச்சினையைக் கொடுப்பதாகவே அமைந்திருக்கும். இதேபோல கோதுமையும் ரஷ்யாவிலிருந்து பெருமளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக இருப்பதால், அதன் விலையும் உயரலாம். இவை இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பைக் கொடுப்பதாகவே அமையும்.

மறுபுறத்தில் பார்க்கும் போது கடந்த சில வாரங்களாக இலங்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உல்லாசப் பயணிகள் வருகை தருவதை காணமுடிந்தது. இதில் 30 வீதமானவர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்தே வந்திருந்தார்கள். அதுவும் தற்போது முடக்கப்படப் போகின்றது. இவை அனைத்தும் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்வதாகவே இருக்கும்.

கேள்வி:
ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புக்கள் தோல்வியடைந்து விட்டன என்பதைத் தான் இந்த யுத்தம் பிரதிபலிக்கின்றது எனக் கருதமுடியுமா?

பதில்:
ஐ.நா. பாதுகாப்புச் சபை என்பதன் உருவாக்கத்திலேயே அது ஐந்து நாடுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. அந்த ஐந்து நாடுகளும் தங்களுடைய நலன்களுக்கு ஏற்றவகையில்தான் இதனைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. இந்தவகையில் இவ்வாறான யுத்தங்கள் உருவாகும் போது, ஐ.நா. வின் தேவையோ அவசியமோ இல்லாமல் அது பலவீனமடையலாம் என்ற கருத்தும் உள்ளது.

Tamil News