அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் –  ‘பொறுப்பற்ற செயல்’ எனக் கண்டித்த அமெரிக்கா

ரஷ்யா: ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் பாதிப்புக்குள்ளாகின” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கண்டனம்: மோதல் தொடர்பாக பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “இப்பகுதியில் ரஷ்யாவின் இடைமறிப்புகள் பொதுவானவை. ஆனால், இம்முறை நிகழ்ந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மட்டுமில்லாமல் அறமற்றதாகவும் இருந்தது. ரஷ்யாவின் இந்த பொறுப்பற்ற செயல் அமெரிக்க விமானத்தை அழிக்க வழிவகுத்தது” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.