ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன்

ரஷ்ய-உக்ரைன் போர்தமிழில்: ஜெயந்திரன்

ரஷ்ய-உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற ஆக்கிரமிப்புப் போர் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவச்சமர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இராணுவ ரீதியிலான சமருக்கு இணையாக தகவற் சமரும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இந்த தகவல் சமரில் எதிருக்கெதிராகப் போராடுபவர்களும் அதே ரஷ்ய அரச ஊடகங்களும் அதே வேளையில் மேற்குலகத்தின் ஊடகங்களும் ஆகும்.

இந்த இரு சாராருமே தமது அரசுகளின் நலனைப் பாதுகாப்பதற்காக தகவல் பரிமாற்றத்தை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே இந்தப் போரில் உண்மையில் துல்லியமாக என்ன நடக்கிறது என்பதை அறிய நாம் மிகவும் கவனமாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது. தற்போது உக்ரைனில் நடக்கின்ற சமர்கள் தொடர்பாக இரு சாராரும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் தகவல்களைக் கூட மிகவும் அவதானமாகவே நாம் அணுக வேண்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, மேற்குலக ஊடகங்கள், உக்ரைனில் ரஷ்யப் படைகள் மிகவும் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், கடும் இழப்புகளை அவர்கள் சந்தித்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றன. உக்ரைனில் இருந்து வெளிவரும் செய்திகள் இதுவரை 11,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. ரஷ்ய அரசு தமது படைகளின் இழப்புத் தொடர்பாக வெளியிடும் செய்திகளுடன் ஒப்பிடும் போது, இது 22 மடங்கு அதிகமாகும். தாம் 300க்கும் அதிகமாக ரஷ்ய தாங்கிகளை அழித்துவிட்டதாக உக்ரைன் கூறும் அதே நேரம், ரஷ்யாவோ உக்ரைனின் 900 தாங்கிகளை தாம் அழித்து விட்டதாகத் தகவல் தருகிறது. இரு தரப்புமே மற்றைய தரப்பு உண்மையான தரவுகளை மறைப்பதாகக் குற்றஞ் சாட்டுகின்றன. இந்தத் தகவல்களில் உள்ள வேறுபாடுகளை அவதானிக்கும் போது, ஒவ்வொரு தரப்பும் நடைபெறும் போர் தொடர்பாக எப்படிப்பட்டதொரு வியாக்கியானத்தை தமது மக்களுக்குக் கொடுக்க விரும்புகிறது என்பது தெளிவாகின்றது. ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தை தாம் மிகவும் கடுமையாக எதிர்த்து வருகிறோம் என்ற செய்தியை உக்ரைன் சொல்ல விரும்புகிறது. இதே வேளை ரஷ்யாவோ தான் அடைந்துவரும் இராணுவ வெற்றிகளை தனது மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறது.

இது இவ்வாறிருக்க இரு தரப்புமே தமது படைகள் சந்திக்கின்ற இழப்புகள் தொடர்பாக உண்மையான தரவுகளைத் தரவிரும்பவில்லை. ஆகவே இப்படிப்பட்ட ஒரு பின்புலத்தில் எவரது தகவல் உண்மை என்று நாம் நம்புவது?

இரு தரப்புமே வெளியிடும் இழப்புகள் உண்மையான தரவுகள் தானா என்று கண்டறிவது மிகவும் கடினமான காரியமாகும். இங்கே ஆயுதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். சண்டை நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் செல்வது என்பது மிகவும் கடினமானது. நடைபெறும் சண்டைகள் தொடர்பாகச் செய்திகளை வெளியிட அங்கே சுயாதீன ஊடகவியலாளர்கள் எவரும் இல்லை.

ஆகவே வெளியிடப்படும் செய்திகள் எவ்வளவுக்கு வடிகட்டப்படுகின்றதென்றோ, மாற்றம் செய்யப்படுகின்றதென்றோ, தடுக்கப்படுகின்றதென்றோ, அல்லது இட்டுக் கட்டப் படுகின்றதென்றோ யாருக்கும் தெரியாது. வெவ்வேறு வகையான பல வியாக்கியானங்கள் தற்போது இந்தப் போர் தொடர்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதேவேளை இந்த வியாக்கியானங்களுக்கு நேர் எதிரான வியாக்கியானங்களும் சமகாலத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் தமது நாட்டை தமது எதிரிகளிடமிருந்து மிகவும் வெற்றிகரமாகப் பாதுகாத்து வருவதாக ஒரு செய்தி வலம்வந்து கொண்டிருக்கின்றது. அது உண்மை என்றால், எவ்வாறு வெறும் இரண்டு நாட்களில் கீவ்வின் (Kyve) புறநகர்ப்பகுதிகளை ரஷ்யப் படைகள் சென்றுசேர முடிந்தது என்ற வினாவையும் நாம் தொடுக்கலாம். இன்னொரு பார்வை என்னவென்றால், ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றது என்பதாகும். இந்தப் போர் தொடர்பாக ரஷ்யா மேற்கொண்டிருக்கும் திட்டமிடல்களை அறிந்துகொள்ளாது எவ்வாறு அவர்களது முன்னேற்றத்தை நாம் கணக்கிட முடியும்.

இங்கே இன்னொரு மூன்றாவது விடயத்தையும் எம்மால் அவதானிக்க முடிகிறது. இது அறநெறி தொடர்பானது. மேற்குலகம் சொல்லும் அத்தனையும் உண்மையானது என்று ஏற்றுக்கொள்ளும் கறுப்பு வெள்ளை வாதமாகும். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களோ உக்ரைன் நாட்டின் இறைமையை ஏற்க மறுக்கிறார்கள் என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்கள். உண்மையாகப் பார்க்கும் போது இங்கே முன்வைக்கப்படும் ஒவ்வொரு விளக்கமும் எதிர்முகப்படுத்தப்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் கொடிகட்டிப் பறக்கும் தற்போதைய சூழலில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களே மக்களது கருத்தை வடிவமைக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கே மிக மோசமான விடயம் என்னவென்றால், இந்தச் சமூகவலைத்தளங்கள் சமச்சீரற்றவை. அதற்கான காரணம் என்னவென்றால், அவை அத்தனையுமே மேற்குலகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இங்கோ ருவிற்றர் (Twitter), முகநூல் (Facebook), யூரியூப் (Youtube), கூகிள் (Google), அப்பிள் (Apple) போன்ற பெருந் தொழில்நுட்ப நிறுவனங்களை நான் குறிப்பிடுகின்றேன். இப் பெருநிறுவனங்கள் அனைத்துமே வெளிப்படையாக மேற்குலகத்துடன் தம்மை இணைத்துக் கொண்டிருக்கின்றன. இப்பெருநிறுவனங்கள் அனைத்தும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்துவரும் இந்த ஆக்கிரமிப்புப் போர் தொடர்பாக மேற்குலகின் கருத்தையே எடுத்துச்சொல்வது மட்டுமன்றி, ரஷ்யாவின் பார்வை வெளிவருவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இது பிரச்சினைக்குரியதாகும்.

ஏன் இந்த அணுகுமுறை பிரச்சினைக்குரியது என்பதை நான் உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றேன். எண்ணிம (digital)  ரீதியிலான தடைகளை இப்பெரு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிராகப் போட்டிருக்கின்றன. உண்மையில் இதுவரையில் எந்த அரசுமே ரஷ்யாவுக்கு எதிராக எண்ணிம ரீதியிலான தடைகளை அறிவிக்கவில்லை. எந்த ஒரு அரசுமே இப்பெருநிறுவனங்கள் ரஷ்யாவுடன் கொண்டிருக்கும் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அதற்கான எந்தவிதமான சட்ட பூர்வமான நெறிப்படுத்தல்களோ அன்றேல் சட்டபூர்வமான கடப்பாடுகளோ இந்த நிறுவனங்களுக்கு இருக்கவில்லை.

ரஷ்ய-உக்ரைன் போர்இப்பெருநிறுவனங்கள் தமது பங்கு தாரர்களின் (stake holders) நிலைப்பாட்டை எடுப்பது என்று ஒருதலைப்பட்சமாக முடிவெடுத் திருக்கின்றன. தனது தளங்களில் உள்ள விடயங்கள் மூலம் ரஷ்ய அரசு ஊடகங்கள் பணம் சம்பாதிப்பதை கூகிள் நிறுவனம் தடைசெய்திருக்கிறது. அப்பிள் நிறுவனம் இன்னொரு படி மேலே சென்று ரஷ்யாவில் தனது உற்பத்திப்பொருட்கள் அனைத்தினதும் விற்பனையை நிறுத்தி வைத்திருப்பதுடன் அப்பிள்பிளே (Apple Play) உட்பட மற்றைய தனது சேவைகளை ரஷ்ய மக்கள் அணுகமுடியாதவாறு தடை செய்திருக்கிறது. அதேவேளையில் ரஷ்யாவுக்கு வெளியே ரஷ்ய ஊடகங்களான ஆர்ரி (RT), ஸ்புட்னிக் (Sputnik) என்பவை அப்பிள் ஸ்ரோரைப் (Apple Store) பயன்படுத்த முடியாதவாறு தடை செய்திருக்கின்றன. ருவிற்றரை எடுத்துக்கொண்டால், ரஷ்ய அரசு ஊடகங்கள் மேற்கொள்ளும் பதிவுகள் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.

இது இவ்வாறிருக்க, முகநூலின் தாய் நிறுவனமான மெற்றா (Meta) மிகவும் அதிர்ச்சியைத் தரக்கூடிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ரஷ்யர்களுக்கும் அவர்களது அதிபரான புட்டீனுக்கும் எதிராக வன்முறைகளைத் தூண்டக்கூடிய செய்திகளை தமது முகநூல் மற்றும் இன்ஸ்ரகிராம் (Instagram) போன்ற தளங்களில் பதிவிடுவதற்கு இனிமேல் அது அனுமதிக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. இது உண்மையில் குற்றமில்லையா? ரஷ்யர்களுக்கு எதிரான ஒரு வெறுப்புணர்வை இது வளர்க்காதா? உண்மையில் இப்பெருநிறுவனங்கள் தமது வரையறைகளைக் கடந்து எல்லைமீறிச் செயற்படுகின்றன. எப்போது வன்முறையைத் தூண்டலாம் எப்போது தூண்டக்கூடாது என்று இந்நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. உண்மையில் எதிர்காலத்தில் இது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.

ரஷ்ய-உக்ரைன் போர்அதே நேரத்தில் மூலோபாய ரீதியிலான பிரச்சினைகளையும் மற்றைய நாடுகளில் தோற்றுவிக்கலாம். இன்னொரு நாட்டுக்கு எதிராக அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்பு முயற்சியை மேற்கொண்டிருந்தால், இவர்கள் அதனை எப்படி அணுகியிருப்பார்கள். கடந்த காலங்களில் நிகழ்ந்தது போல் அமெரிக்கா இப்படிப்பட்ட ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியிருந்தால், இப்பெருநிறுவனங்கள் இதே மாதிரியான முடிவுகளை மேற்கொண்டிருப்பார்களா? இங்கேயுள்ள படத்தைப் பாருங்கள்! அமெரிக்கா ஆக்கிரமித்த நாடுகளையும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்த நாடுகளையும் இப்படம் காட்டுகின்றது. ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளில் ஆகக்குறைந்தது 84 நாடுகளில் அமெரிக்கா ஏதாவதொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையோ அல்லது இராணுவ நடவடிக்கையோ மேற்கொண்டிருக்கிறது.

உண்மையில் நான் குறிப்பிட்ட இவ்விடயங்கள் எதுவுமே ரஷ்யா தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தற்போது முன்னெடுத்துவரும் ஆக்கிரமிப்பு முற்றிலும் தவறானது. அனைத்துலக சட்டங்களுக்கு  முரணானது. இது தொடர்பாக எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லை.

ரஷ்ய-உக்ரைன் போர்அமெரிக்கப் பெருநிறுவனங்களின் வெளி வேடத் தன்மையை மட்டும் இங்கு நான் தோலுரித்துக்காட்ட விரும்புகிறேன். 2021ம் ஆண்டில் அமெரிக்காவில் இயங்குகின்ற 3 மனித உரிமைகள் அமைப்புகள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நடுநிலைமையை வகிப்பதற்குப் பதிலாக பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான  முகநூல் (Facebook), கூகிள் (Google), மைக்றோசொவ்ற் (Microsoft), அமசோன் (Amazon) போன்றவை அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மூலம் மிகப்பெரிய இலாபத்தை ஈட்டியிருக்கின்றன. 44.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்களை இவை பென்டகனிலிருந்தும் (Pentagon) அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்தும் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எந்த விடயங்கள் தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன என்பதைப் பார்த்தால், அவை அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளுகின்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற ஒப்பந்தங்களாகும். அதாவது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய எண்ணிம உபகரணங்களை (Digital tools) வழங்குவது தொடர்பான வையாகும். போர்களில் உதவக்கூடிய தரவுத்தளங்கள், தகவல்களைச் சேமித்து வைக்கக் கூடிய தளங்கள், வேவுபார்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை இவை உள்ளடக்குகின்றன. தமது பக்க நிலைப்பாட்டை அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியாகப் பதிவு செய்வதும் இவற்றில் முக்கியமானதாகும்.

அமெரிக்க அரசின் நிதிப்பங்களிப்புடன் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் விளம்பரங்களுக்கு முகநூல் மட்டுமே 350,000 டொலர்கள் பெறுமதிவாய்ந்த விளம்பரங்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அரச தளங்களில் இப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்டுசெல்ல முகநூல் உதவியிருக்கிறது. மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இது ஒரேயொரு ஒப்பந்தம் மட்டுமே என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே போன்ற நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் இப்பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக இந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.

உலகத்தில் வாழுகின்ற பில்லியன்கள் எண்ணிக்கையிலான மக்களின் உள்ளங்களை அன்றாடம் சென்றடையும் ஆற்றலைக் கொண்ட சமூகவலைத்தளங்கள் தொடர்பாகவே இங்கு நாங்கள் பேசுகின்றோம். 2.7 பில்லியன் மக்கள் முகநூலை நாளாந்தம் பயன்படுத்துகிறார்கள். 206 மில்லியன் மக்கள் அன்றாடம் ட்விற்றரைப் பயன்படுத்து கிறார்கள். 122 மில்லியன் மக்கள் யூரியூப்பை அன்றாடம் பார்க்கிறார்கள். இந்த செய்திகள் சென்றுசேரக்கூடிய வீச்சை சற்று எண்ணிப் பாருங்கள்! ஆகவே அமெரிக்கா உலகில் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக தனக்குச் சாதகமான வகையில் கருத்துருவாக்கத்தை உலகளாவிய வகையில் எப்படி மேற்கொள்கின்றது என்பதை இவற்றின் மூலம் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில் இவ்வாறான தளங்களை யார் இயக்குகின்றார்கள் என்ற விடயத்தை நாம் தேடிப்பார்க்கும் போது எமக்கு இன்னும் அதிர்ச்சியைத் தரக்கூடிய விடயங்கள் காத்திருக்கின்றன. அமெரிக்க அரசில் பணியாற்றிய பல நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இப்பெருநிறுவனங்களின் முக்கிய பதவிகளில் தற்போது பணியாற்றி வருவதாக பிறிதொரு மனித உரிமை அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீதிநிர்வாகங்களுக்கான அமைச்சு, தேசிய பாதுகாப்பு நிறுவனம், அமெரிக்க அரசின் புலனாய்வு அமைப்பு போன்ற அரச நிறுவனங்கள் இவற்றுள் உள்ளடங்குகின்றன.

ஜெயாட் கோஹனை (Jared Cohen)  எடுத்துக்கொண்டால் அமெரிக்க அரசின் இராஜாங்க அமைச்சில் கொள்கை வகுப்பாளராகச் செயற்பட்டவர். பயங்கர வாதத்துக்கு எதிரான பரப்புரையை முன்னெடுக்கும் நோக்குடன் சமூகவலைத் தளங்களில் பயன்படுத்தும் நோக்குடன் கூகிளினால் உருவாக்கப்பட்ட ஜிக்சோ தொழில்நுட்ப ஆய்வுதளத்தை (Jigsaw Technology Incubator) இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். ஸ் ரீ வ் பன்டலைட்ஸ்  (Steve Pandelides)- இவர் எவ்பிஐ  (FBI) அமைப்பில் 20 வருடங்கள் பணியாற்றியவர். அமெசோன் (Amazon) நிறுவனத்தின் இணையச் சேவைகள் தொடர்பான பாதுகாப்புப் பணிப்பாளராக இவர் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஜோசவ் டி றொஸெக் (Joseph De Rozek) பாதுகாப்பு அமைச்சில் முன்னர் பணியாற்றியவர். மைக்கிறோசொவ்ற்றின் தகவல் பரிமாற்றப் பிரிவில் பணியாற்றுகிறார். இவர்கள் ஒரு சிலர் மாத்திரமே. அமெரிக்க அரச நிறுவனங்களுக்கும் இப்பெரும் நிறுவனங்களுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசின் பல பாதுகாப்பு அதிகாரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தகவல்களை வடிவமைத்து வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தகவல் பரிமாற்றத்தை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்களோ அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் உலகம் இன்று இருக்கிறது. உக்ரைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை உண்மையில் முன்னெடுத்தது ரஷ்யா தான். ஆனால் இப்போர் தொடர்பான செய்திகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மேற்குலகம் நிலைமையை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் தொடர்பாக எமக்குக் கிடைக்கும் செய்திகளை ஆய்வு செய்யாமல் அப்படியே நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகத் தகவற் பரிமாற்றத்தில் காவலர்களாக விளங்குபவர்கள் எப்போது, தமது சொந்த நலன்களைக் கடந்து உலகளாவிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களோ அதுவரை எமக்குக் கிடைக்கும் தகவல்களை அக்குவேறு ஆணி வேறாக  நாம் பிரித்துப் பார்த்தாக வேண்டும்.

நன்றி:   Gravitas Plus: Why the West is winning the Information War.

Tamil News