அமெரிக்காவின் உளவு விமானத்தை வீழ்த்திய ரஸ்யா

உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக அமெரிக்காவின் எம்.கியூ-9 என்ற ஆளில்லாத தாக்குதல் விமானத்தை கடந்த செவ்வாய்கிழமை (14) ரஸ்யாவின் எஸ்யூ-27 ரக தாக்குதல் விமானங்கள் இரண்டு பலவந்தமாக வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏறத்தாள 32 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விமானம் ரஸ்யாவின் கிரைமியா பகுதிக்கு அண்மையாக பறந்துகொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

தமது எல்லைகளுக்கு அருகில் பறந்து உக்ரைனின் எதிர்கால தாக்குதல் நடவடிக்கைகளுக்காக உளவுத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த விமானத்தை தமது விமானங்கள் எச்சரிக்கை செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அமெரிக்காவின் எல்லையில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள தனது எல்லைப்பகுதியில் அமெரிக்க விமானங்கள் பறப்பதன் காரணம் என்ன எனவும் ரஸ்யா கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் தமது விமானத்தின் மீது ரஸ்யாவின் விமானங்கள் எரிபொருட்களை வீசியதுடன், அதற்கு அருகாமையில் பறந்து விமானத்தை தடுமாற வைத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவின் விமானங்கள் கிரைமியாவின் எல்லையில் இருந்து அதிக தூரத்தில் தற்போது பறப்பதாகவும் அவை தமது பயணப்பாதையை மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம்.கியூ-9 என்ற ஆளில்லாத தாக்குதல் விமானம் அமெரிக்காவின் மிக நவீன விமானம் என்பதுடன், அது வானில் இருந்து தரைக்கும் வானில் இருந்து வானுக்கும் ஏவும் ஏவுகணைகளை கொண்டுள்ளதுடன், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.