வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும். அதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான் பதவியேற்றபோது தாங்கள் அங்கு இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்கின்ற சூழலிலே நானும் அங்கு சென்றிருந்தேன். பொருளாதார அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அதில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே பதவி ஏற்றிருக்கின்றார். இதிலே குறிப்பாக கூற வேண்டிய விடயம் என்னவெனில் எங்களுடைய கிராம புறங்கள் இதனூடாக வலுப்பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது.நிச்சயமாக தட்டி கேட்போம். வன்னி பிரதேசத்தில் ஒரு அமைச்சு பதவி கிடைத்திருக்கின்றது என்ற காரணத்திற்காக நாங்கள் சென்றிருக்கின்றோம்.

ஜனாதிபதியை நாங்கள் சந்தித்த போதும் இவ்வாறு விமர்சனங்கள் வந்தது. மக்களுடைய நலன் கருதி அபிவிருத்தி சம்பந்தமாக இருக்கின்ற விடயங்களிலே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய மக்களும் பட்டினியை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான விடயங்களை பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் வன்னி பிரதேச பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவி கிடைத்த காரணத்தினால் வாழ்த்த சென்றிருந்தேன் அவ்வளவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.