Tamil News
Home உலகச் செய்திகள் நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகள்: உதவ முன்வராத இந்தியா உள்ளிட்ட பல...

நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகள்: உதவ முன்வராத இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்

வங்கதேசத்திலிருந்து வெளியேறி வேறு ஏதேனும் நாட்டில் தஞ்சமடையும் நோக்குடன் படகில் புறப்பட்ட சுமார் 190 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள், அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவுக்கு இடையிலான கடற்பரப்பில் இரண்டு வாரங்களுக்கு மேல் தத்தளித்து வருகின்றனர். அத்துடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உணவு மற்றும் குடிநீரின்றி இவர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 

கடலில் பயணிக்க தகுதியற்ற இப்படகில் பல பெண்கள், குழந்தைகள் உள்ளதாகவும் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான சூழலில், இவர்களை மீட்கக்கோரி தென்னாசியாவில் உள்ள பல நாடுகளுக்கு ஐ.நா.அகதிகள் ஆணையம் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகள் இவர்களை மீட்பது தொடர்பில் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றன.

“இந்த துன்பகரமான சோதனை மற்றும் சோகம் தொடரக்கூடாது. இவர்கள் எல்லாம் மனிதர்கள்,” என ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் ஆசிய பசிபிக் இயக்குநர் இந்திரிகா ரத்வத்த தெரிவித்திருக்கிறார்.

இந்த அகதிகளை மீட்கக்கோரி இப்பகுதியில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் மற்றும் இந்திய கடல்சார் மீட்பு மையத்துக்கும் ஐ.நா. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

“தயவு செய்து காப்பாற்றுங்கள், அவர்களை சாக விட்டுவிட வேண்டாம் என சர்வதேச சமூகத்தை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். ரோஹிங்கியா மக்களும் மனிதர்கள் தான்,” என முகமது ரெசூவான் கான் எனும் ரோஹிங்கியா அதி தெரிவித்திருக்கிறார். இவரது சகோதரி மற்றும் உறவினர் ஒருவர் இப்படகில் தத்தளித்து வருகின்றனர்.

செயல்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இப்படகு முதலில் நிக்கோபார் தீவுகள் அருகே இந்திய கடற்பரப்பில் கண்டறிப்பட்டிருக்கிறது. அகதிகளை மீட்கும்படி இந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு பல கோரிக்கைகளை விடுத்ததாக கூறுகிறார் புதுதில்லியை மையமாகக் கொண்டு அகதிகளின் நலனுக்காக இயங்கும் Azadi Project எனும் அமைப்பின் நிறுவனர் பிரியாலி சூர்.

“உண்மையில், எந்த நாடுகளும் இந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை,” என்ற கருத்தை பிரியாலி சூர் முன்வைத்திருக்கிறார். வங்கதேச முகாமில் உள்ள ரோஹிங்கியா அகதியான முகமது ரெசூவான் கான், “இது காத்திருப்பதற்கான நேரமல்ல, ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன” என படகில் உள்ள அகதிகள் நிலையை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“எங்களுக்கு குடியுரிமை இருந்தால், எங்களுக்கு கடவுச்சீட்டுகள் இருந்தால், நாங்கள் இப்படி கடலில் சாக மாட்டோம்,” என கண்ணீர் ததும்ப தங்களது நிலையை ரெசூவான் கான் பகிர்ந்திருக்கிறார்.

Exit mobile version