Home செய்திகள் முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வீதித் தடைகளும், காவலரண்களும் யாருக்காக?

முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வீதித் தடைகளும், காவலரண்களும் யாருக்காக?

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளி மாவட்டத்தவர்களின் வருகை அதிகரித்துள்ள தாலேயே  கொரோனாத்   தொற்றும் அதிகரித்துள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதியில் எந்த அனுமதியும் இன்றி ஆயிரக் கணக்கில் குடும்பங்களுடன் தங்கியுள்ள வெளி மாவட்ட மீனவர்களில் ஐவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட போதும், அவர்கள் சிகிச்சை பெற மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவில் கொரோனாத் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாப் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதும், தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதிகளில் வாடி வீடுகள் அமைத்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ரவிகரன்,

 “முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வீதிகள் எங்கும் இராணுவம் மற்றும்  காவல் துறையினரால் கொரோனாக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக  வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆங்காங்கே காவலரண்களை அமைத்து, கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.   இவ்வாறு பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பு நடவடிக்கைள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிரமாக இடம் பெறும் போது, செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட (தென்னிலங்கை) மீனவர்கள் வருகை தந்து, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

எனவே முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் இந்த வீதித் தடைகளும், காவலரண்களும் யாருக்காக அமைக்கப்பட்டுள்ளது எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137
ilakku Weekly Epaper 137 July 04 2021 முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வீதித் தடைகளும், காவலரண்களும் யாருக்காக?

Exit mobile version