Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு கோவிட் ஆபத்து-தொற்றா நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு கோவிட் ஆபத்து-தொற்றா நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கை

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும். 

எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

சில நாடுகளில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் , இலங்கையின் நிலைவரம் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்வான், ஹொங்ஹொங் உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

சீனாவில் குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. ஜனவரி இறுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு கோவிட் பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் ஏனைய நாடுகளிலும் காணப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கோவிட் தொற்று சுகாதார தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வாறிருப்பினும் தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தற்போது கோவிட் தொற்று மாத்திரமின்றி டெங்கு, இன்புளுவன்சா மற்றும் வாயு மாசடைவினால் ஏற்படக் கூடிய சுவாச நோய் என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவே நோயாளர்கள் மாத்திரமின்றி , சுகதேகிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். தற்போது நாட்டில் சில பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன.

எனவே கோவிட் அச்சுறுத்தல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Exit mobile version