பிரேசில் பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு

Brazil, hundreds of Bolsonaro supporters invade the Parliament building:  clashes with the police

பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களில் நுழைந்து அங்கு சேதம் விளைவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதனையடுத்து  காவல்துறையினர் போராட்டக்காரர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள முன்னாள் அதிபர் போல்சனரோ தான் இந்தச் செயலை தூண்டிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பரப்புரை செய்கின்றன என்று கூறினார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்ற புகார் ஏற்பதற்கல்ல என்றும் கூறினார்.

இந்நிலையில், இந்த சம்பவங்களுக்கு ஐ.நாவும் அமெரிக்காவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.