இலங்கை மீதான தீர்மானம் – நிதி ஒதுக்கீடு

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு அமைக்கப்படவுள்ள நிபுணர்கள் கொண்ட குழுவுக்கு 2.8 மில்லியன் டொலர்கள் தேவை என தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதில் 2021 ஆம் ஆண்டுக்கான 0.74 மில்லியன் டொலர்களையும், 2022 ஆம் ஆண்டுக்கான 2.1 மில்லியன் டொலர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ஐ.நாவின் பொதுச்சபை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இதன் மூலம் 13 அங்கத்தவர்களைக் கொண்ட தனியான செயலணி ஒன்று உருவாக்கப் படவுள்ளது. அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் அனுபவம் கொண்ட ஒருவர் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளதுடன், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப் படுகின்றது. அவருக்கு உதவியாக மேலும் இரு சட்டவலுநர்கள் பணியாற்றுவார்கள்.

ilakku-weekly-epaper-140-july-25-2021