குவைத்தின் ஈரான் எல்லைக்கு அருகில் பாலைவனத்தில் பணிபுரிந்த 6 இலங்கையர்கள் மீட்பு

குவைத்  நாட்டின்  ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 6 இலங்கை இளைஞர்கள் மீட்கப்பட்டு இன்று நாடு திரும்பினர்.

குறித்த  இளைஞர்கள்  6 பேரும்  கடுமையாக  வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு,  தாக்கப்பட்டு உணவும்  சம்பளமும்  வழங்கப்படாத நிலையிலேயே  பெரும் முயற்சியில்  மீட்கப்பட்டு இன்று (09)  காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.  இவர்கள் கிண்ணியாவில் உள்ள சட்டவிரோதமான தரகர் ஊடாக குவைத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த இலங்கையர்கள் குவைத்தில் ஷேக் ஒருவரால் நடத்தப்படும் பண்ணையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு  இந்த இலங்கையர்கள்  இரவு நேரத்தில்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது நிலைமை குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களை மீட்பதற்காக குவைத்தின் உயர் பாதுகாப்பு பிரிவின்  மேஜர் ஜெனரல் ஒருவரின்  உதவியுடன் சிறப்பு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இவர்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.