Tamil News
Home செய்திகள் சட்டமுரணான பயணத்தில் ஈடுபட்டு பெங்களூரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைக்குமாறு கோரிக்கை

சட்டமுரணான பயணத்தில் ஈடுபட்டு பெங்களூரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைக்குமாறு கோரிக்கை

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த 2021  ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

போலியான வெளிநாட்டு முகவர் மூலம் ஏமாற்றப்பட்டு  கடலில் தத்தளித்து காப்பாற்றப்பட்டவர்கள் போல நாங்களும் போலியான முகவர் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி அழைத்துச் சென்று இந்தியாவிலே நடுத்தெருவில் கைவிட்டு சென்றுள்ளார்கள். அதன்பின்னர் நாங்கள் பெங்களூரில் வைத்து கடந்த 2021  ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இதுவரை சிறையிலேயே வாடுகின்றோம். இங்கு நாங்கள் பல சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றோம்.

நாங்கள் இந்தியாவிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன என்பதுடன் சிறைக்குள் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக வாடுகின்றோம். அதே சமயத்தில் நாங்கள் இலங்கை அமைச்சர்களுடனும் தொடர்புகொண்டு பேசி இதுவரை எமக்கு எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. இலங்கை துணைத்தூதரகத்துடனும் தொடர்பில் இருக்கின்றோம்.

எங்களை சிறையில் இருந்து விடுதலை செய்து direction centre என்ற இடத்திற்கு மாற்றம் செய்து வழக்குகளை முடித்து நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி நீதிமன்றம் கடந்த 2021.09.09 அன்று கட்டளையிட்டது. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அதை நாங்கள் எங்களது நாட்டில் உள்ள அமைச்சர்களுக்கும் நாங்கள் அனுப்பியுள்ளோம்.

2021.09.09 அன்று எங்களை சாட்சியாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் மாற்றம் செய்துதான் direction centreக்கு மாற்றுமாறு கூறப்பட்டது. ஆனால் direction centre இல் ஏற்கனவே ஆட்கள் இருக்கிறார்கள் எனக்கூறி எங்களை சிறையில் வைத்துள்ளார்கள். தற்போது ஒரு மாத காலமாக தான் எங்களை direction centreக்கு மாற்றியுள்ளார்கள். நாங்கள் சிறைச்சாலையில் இருந்து உண்ணாவிரதம், போராட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்ததன் பலனாகவே எங்களை direction centreக்கு மாற்றியுள்ளார்கள்.

இரண்டு தடவைகள் இலங்கை துணைத் தூதரகத்தினர் இங்கு வந்து எங்களை பார்வையிட்டனர். நாங்கள் இங்கிருந்து பல தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்த நன்மையும் கிட்டவில்லை.

நாங்கள் எங்களது நாட்டினை வெறுத்தோ அல்லது நாடு தேவையில்லை என்றோ கருதி இவ்வாறு புறப்படவில்லை. எங்களது வறுமையின் காரணத்தினால் நாங்கள் எங்களது குடும்பங்களையும் நாட்டினையும் பிரிந்து வந்து இவ்வாறு சிக்கித் தவிக்கின்றோம்.

அண்மையில் கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட 303 பேர்களையும் இலங்கைக்கு எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நாங்கள் இரண்டு வருடங்களாக இங்கே சிக்கித் தவிக்கின்றோம். எங்களை எமது நாட்டிற்கு எடுப்பதற்கான எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவிவ்லை.

நாங்கள் நாட்டினை விட்டு, இவ்வாறான போலி முகவர்களை நம்பி புறப்பட்டது தவறுதான். அதனை நாங்கள் தற்போது உணர்ந்துள்ளோம். எனவே தயவுசெய்து எமது நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் எங்களை மன்னித்து, எங்களை எங்களது நாடுகளுக்கு திருப்பி எடுக்கும்படி தயவாக கேட்டு நிற்கின்றோம் என்றனர்.

Exit mobile version