Home செய்திகள் இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதிக்க கோரிக்கை- வலுக்கும் எதிர்ப்பு

இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதிக்க கோரிக்கை- வலுக்கும் எதிர்ப்பு

இலங்கையில் கஞ்சா சாகுபடி

கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி வரும்  பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமியற்றுவதன் மூலமாக, சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி அதிகாரி நிதர்ஷனா செல்லதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் கஞ்சா தற்போது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுகின்றது.  கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்றுமதிக்காக என கூறி அதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், உள்நாட்டிலும் பயன்பாடு இருக்கும்

கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது. இதனால், கஞ்சாவை சட்டமாக்குவதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

இலங்கையில் கஞ்சாவை தாண்டி, ஏற்றுமதிக்கான பல்வேறு பயிர் செய்கைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை .

டயானா கமகே போன்ற சிலர், ஏனைய பயிர் செய்கைகளுக்கு முன்னுரிமை வழங்காது, ஏன் கஞ்சாவிற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குகின்றனர்” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

அதே நேரம் கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version