அதிகார வர்க்கத்தின் தமிழர் உணர்வுகளை அழிக்கும் அராஜக அடக்குமுறை-ஜி.ஸ்ரீநேசன்

அராஜக அடக்குமுறை

“நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினர், தமிழர்களை அராஜக அடக்குமுறை, அடாவடிச் செயல்கள் மூலமாகவே அடக்கியாண்டு வருகின்றனர். அந்த வகையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருத்து உயிர்நீத்த தமிழ்த்தியாகி ஒருவரைக்கூட நினைவு கூரக்கூடாது என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயற்பட்டுள்ளார்கள்” என முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளையில் காவல்துறையினரால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த சம்வபம் தொடர்பில் பல தரப்பினரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில்,  இந்த கைது நடவடிக்கைக்கு தமது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்,

“பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் யாழ் நல்லூரில் திலீபன் நினைவகத்தில் கற்பூரமேற்றி அவரது தியாகத்தை உணர்வுபூர்வமாக நினவுகூர முற்பட்ட போது பொலிசாரினால் பலாத்காரமான முறையில் பிடித்து இழுக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

புனிதமான கற்பூரதீபம் பொலிசாரின் சப்பாத்துக்கால்களால் தட்டிவிடப்பட்டதாக அறியப்படுகிறது.அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்களோடு

இன்னும் இரு ஆதரவாளர்கள் பலாத்காரமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லப்பட்டு பொலிஸ்நிலையத்தில் வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் நீதிமன்றப் பிணைமூலமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. உடைமைகள அழிக்கப்பட்டன. உரிமைகள் மறுக்கப்பட்டன. தற்போது தமிழர்களின் உணர்வுகளை அழிக்கின்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதில் ஒன்றுதான் மறைந்த உறவுகளை நினைவுகூரக்கூடாது என்கின்ற கடுமையான அடக்கு முறையாகும்.

அதன் ஒரு வடிவமே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்களின் பலவந்தமான கைதாகும். பாராளுமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் அவர் பொலிசாரால் பிடித்து இழுக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதே போன்றுதான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்து நொருக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தூபி தகர்க்கப்பட்டது.

மொத்தத்தில் உயிர், உடைமை, உரிமை, உணர்வு அழிக்கப்படுகின்ற பறிக்கப்படுகின்ற செயற்பாடுகளைப் பேரின அடிப்படை வாதம் தொடர்ந்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.நீதியின் கதவுகள் எப்போது திறக்கப்படும் என்பதுதான் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்.

அகிம்சை வழிப்போராட்டமும் அடக்கப்பட்டது ஆயுத வழிப் போராட்டமும் பன்னாடுகளின் ஒத்துழைப்புகளுடன் மௌனிக்கச் செய்யப்பட்டது. இராஜதந்திரப் போராட்டமாவது தமிழ் மக்களுக்கு நியாயத்தினை வழங்க வேண்டும். அதற்குச் சர்வதேச நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். ஜனாதிபதி ஐக்கிய நாடுகள்சபைச் செயலாளருடன் கைகுலுக்கிச் சமாதானப் பேச்சுக்கு,புலம்பெயர் தமிழ் சமூகங்களைப் அழைக்கிறார். ஆனால் நாட்டில் அடக்கு முறைக்குக் குறைவே இல்லை.தலையாட்டித் தமிழ்ப் பிரகிருதிகளும் அரசோடு ஒட்டிக்கொண்டுதான் பிழைக்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021