தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் ஜெய்சங்கர்

தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்று வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 29ம் திகதி  ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள விபரத்தையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tamil News