மனித உரிமைகளை மேம்படுத்துவதில் நம்பகமான முன்னேற்றம் வேண்டும்; ஜெனிவாவில் ஆணையாளர் உரை

மனித உரிமைகளை மேம்படுத்துவதில் நம்பகமான முன்னேற்றம்

“இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் நம்பகமான முன்னேற்றம் பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்கு உதவும் வகையில் இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தவும் கவுன்ஸில் உறுப்பினர்களை நான் வேண்டுகிறேன்” என ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலட் அம்மையார் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தொடர்பான விடயத்தில் அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்களின் சாராம்சம் வருமாறு:-

“கொரோனாத் தொற்றுத் தாக்கம், இராணுவமயப்படுத்தல், பொறுப்புக் கூறலை நிலைநாட்டத் தவறியமைஆகியவை நாட்டில் அடிப்படை மனிதஉரிமைகள், சிவில் நடவடிக்கைகளுக்கான சமூக கட்டமைப்புகளுக்குரிய இடைவெளி, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி ஆகியவற்றில் பெரும் பாதிப்புத் தாக்கத்தைச் செலுத்துவதாக தெரிகின்றது.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகியவற்றின் பெயரில் கடந்த 30 ஆம் திகதி அவசரகால நிலைமை கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. இது சிவில் செயற்பாட்டில் இராணுவமயப்படுத்தல் செயற்பாட்டையும் தலையீட்டையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று கருதுகிறோம். அதனால் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனிக்கிறோம்.

சில சிவில் சமூகத் தலைவர்களுடன் ஜனாதிபதி சமீபத்தில் நடத்திய சந்திப்பை நாங்கள் ஆர்வத்துடன் நோக்குகிறோம். துரதிஷ்டவசமாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் நீதித்துறைத் துன்புறுத்தல் ஆகியவை தொடர்கின்றன.

அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் துன்புறுத்தப்படுவது மோசமான அளவுக்கு விரிவடைந்துள்ளது. பல அமைதியான போராட்டங்கள் மற்றும் நினைவு கூரல்கள் அதிகப்படியான பலம் பிரயோகிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தல், அவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களில்முடக்குதல் போன்றவை தொடர்கின்றன.

சிவில் சமூக குழுக்கள் மீதான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை அவை மேலும் கடுமையாக்கும் எனப் பரவலாக அஞ்சப்படுகின்றது. அடிப்படை மனித உரிமை வழக்குகள் பலவற்றின் நீதித்துறை செயற்பாட்டின் மீது செய்யப்பட்ட தலையீடுகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று சட்டமா அதிபரின் முடிவும் இதில் அடங்கும்.

2011 ஆம் ஆண்டில் அரசியல்வாதி ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி சமீபத்தில் வழங்கியபொதுமன்னிப்பு, நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி செயல்முறையில் மீதான நம்பிக்கையை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொலிஸ் காவலில் இடம்பெறும் கொலைகள் மற்றும் போதைப்பொருள் குற்றக் குழுக்களுடன் பொலிஸார் நடத்தும் “என்கவுண்டர்கள்’ மற்றும் சட்டநடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள் குறித்து நாங்கள் பெரிதும் கவலைப்படுகிறோம் தனிநபர்களை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி தன்னிச்சையாக நிர்வாகக் காவலில் வைப்பதற்குவழி செய்யும் தீவிரப் போக்கு விதிமுறைகள் கடந்த மார்ச் மாதத்தில் கொண்டுவரப்பட்டமை கவலையைத் தருகின்றது.

எனினும், இந்த விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு விதித்திருப்பதை அவதானித்து இருக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த 16 கைதிகள் தண்டனை முடியும் தறுவாயில் மன்னிக்கப்பட்டனர். இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தங்கள் மீதான வழக்குகள் குறித்து மறுஆய்வு செய்வதற்கு விண்ணப்பிக்கக் கூடிய ஓர் ஆலோசனை வாரியம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த நீண்டகால வழக்குகளுக்கு விரைவான தீர்வைக் காண வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக அமைச்சரவைத் துணைக் குழு ஒன்றையும் அது அமைத்துள்ளது. ஆயினும் தொடர்ந்து மக்களைக் கைது செய்யவும் தடுத்து வைக்கவும் இச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் முன் நம்பகமான ஆதாரங்கள் வைக்கப்படாத நிலையில் 16 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதேபோல ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாவ் ஜஸீம் 2020 மே முதல் குற்றச்சாட்டு ஏதுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான உடனடித் தடையை நான் வலியுறுத்துகிறேன்.

இழப்பீடுகளுக்கான தேசியக் கொள்கை கடந்த ஓகஸ்டில் அங்கீகரிக்கப்பட்டது. அதேநேரம் இழப்பீட்டு கொடுப்பனவுகள் மற்றும் நல்லிணக்க திட்டங்கள் தொடர்ந்தன. காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் ஆறாவது பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதிக்கப்பட்டவர்களிடையே நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும். வெளிப்படையான – பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தப்பட்ட- பாலின உணர்திறன் அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அதேவேளை இழப்பீட்டுத் திட்டங்கள் விசாலமான உண்மை மற்றும் நீதி நடவடிக்கையுடன் அமைந்திருக்கவேண்டும் இந்தப் பின்னணியில் பேரவையின் 46/01 இலக்க தீர்மானத்தின் பொறுப்புக் கூறல் தொடர்பான அம்சங்களை ஏற்படுத்துவதற்கான எனது அலுவலகத்தின் பணி தொடங்கி உள்ளது. ஓர் ஆரம்ப குழுவின் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தரப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் தனித்தனி ஆவணங்களுடன் ஒரு தகவல் மற்றும் ஆதார களஞ்சியத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த ஆண்டு, முடிந்த வரை தகவல் சேகரிப்பைத் தொடங்குவோம். இதற்குத் தேவையான நிதி உதவிகளை உறுதி செய்யுமாறு உறுப்பு நாடுகளை நான் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் எனது அலுவலகம் இந்த வேலையை முழுமை யாகச் செயல்படுத்த முடியும்.

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் நம்பகமான முன்னேற்றத்தை பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். அதற்கு உதவும் வகையில் இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தவும் கவுன்ஸில் உறுப்பினர்களை நான் வேண்டுகிறேன்” என்றார்

ilakku-Weekly-Epaper-146-September-05-2021