நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை:தமிழக முதல்வர் வரவேற்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக  அமைந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் திமுக-வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்குபோதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.