Home காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

 

பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்

பாலநாதன் சதீஸ்

பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்: யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டம் வட கிழக்கில்  தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு விடை கொடுப்பவர்கள் யாரும் இல்லை. அதனை செவிசாய்த்துக் கேட்பதற்கும் யாருமில்லை.  இப்பிரச்சினை இன்று நாளை தீரப்போவதாயும் தெரியவில்லை. தம் உறவுகளைத் தேடியலையும் பயணம் இன்னமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

கடந்த உள் நாட்டு இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள்  ஒவ்வொருவரும் தம்மையும், தம் உறவுகளையும் பாதுகாக்க வேண்டும்; தாம் நிம்மதியாகத் தம் குடும்பத்தாருடன்  வாழவேண்டும் என  நினைத்தே  பாதுகாப்புத் தேடி வந்திருந்தார்கள். ஆனால் சிலர் கடத்தப்பட்டனர், சிலர் காணாமலாக்கப் பட்டனர், சிலர் கையளிக்கப்பட்டனர், அப்போது அவர்கள் தம் கதி என்னவாகுமென நினைக்கவில்லை. அன்று தம் உறவுகளைத்  தொலைத்துவிட்டு, இன்று நடு வீதியிலே அவர்களின் விடுதலை வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தன் மகனைத் தொலைத்து விட்டு அவனின் வருகைக்காகக் காத்திருப்பவர் தான் சறோஜா சண்முகம்பிள்ளை என்ற தாய்.

“எனது பெயர் சறோஜா சண்முகம்பிள்ளை. எனது கணவர்  கறுப்பையா சண்முகம்பிள்ளை. நாம் வவுனியா, தோணிக்கல் பகுதியில் தற்போது வசித்து வருகின்றோம். எனக்கு 6 பிள்ளைகள். அதில் என் மூத்த மகன் சண்முகம்பிள்ளை சிந்தனைச்செல்வன். இவர்தான் காணாமல் போனவர்.  இவரைத் தேடித்தான் நாங்கள் அன்று தொடக்கம் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறோம்.  ஆனாலும் என்ரை பிள்ளையைப் பற்றின தகவல் எதுவுமே கிடைக்கவில்லை. என்ரை பிள்ளை எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான் என்றே தெரியவில்லை.

நாங்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மடுவிற்குச் சென்று, 9 வருடங்கள் அங்கிருந்தோம். பின்னர் சொந்த இடமான வவுனியா தோணிக்கல்லுக்கு வந்து, அங்குதான் வசித்து வருகின்றோம். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதிகமானவர்கள் வெளிநாடு சென்றார்கள், வசதி இல்லாதவர்கள் வேறு வேறு இடங்களில் போய் இருந்தார்கள். அவ்வாறான சூழலில் தான் எனது மகன் கிளிநொச்சியில் எமது உறவினர்களோடு போய்  இருந்தவர்.

அங்கு தங்கி நின்று வாகனம் ஓடிவந்தவர். அந்நேரம் யுத்தம் ஆரம்பிச்ச இறுதிநேரம். கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் சென்று, அங்கிருந்து வட்டுவாகல் பகுதிக்கு உறவினர்களுடன் போனவர்.  அந்த நேரம் மகனுக்கு பொக்குளிப்பான் நோய் ஏற்பட்டிருந்ததாகவும் அப்போது இவரால் நடக்க, கதைக்க முடியாத நிலையில் உறவினர்கள் தான் மகனைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னர் யுத்தம் தீவிரமடைந்து, எல்லோரும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்தனர். 2009.05.16 அன்று  எம்  மகனை  உறவினர்கள்  வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

பின்னர் இச் செய்தி எங்களுக்குக் கிடைத்த பிறகு  மகனை முகாம் எல்லாம் தேடி களைச்சுப் போனோம். அதன் பின்னர்  மகனுடன் வன்னியில் படித்த நண்பர் ஒருவரைக் கண்டனாங்கள். அப்போதுதான் அவர் கூறினார்; தான் கண்டியில் பாதருக்கு படித்துக் கொண்டிருந்த போது, 2009.06.01 அன்று கண்டி வைத்திய சாலைக்கு போனதாகவும், அப்போது எனது மகன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தததைக் கண்டதாகவும், மகனைப் பாதுகாப்புடன் வைத்திருந்தார்கள் எனவும் அதனால் தான் கதைக்கவில்லை என்றும் என்ரை பிள்ளை  தாடியெல்லாம் வளர்த்திருந்தார் என்றும் அவர் கூறினார். தன் நண்பர் தானா என உறுதிப்படுத்த  வைத்தியசாலையில் விசாரித்த போது, பெயர் சங்கர், வவுனியா என்று கூறியதாகவும்  தெரிவித்திருந்தார்.

பின்னர் என் மகனைக் காணவில்லை என செஞ்சிலுவைச் சங்க நிறுவனம் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு, வவுனியாவிலுள்ள வன்னிப் பிரதிக் காவல்துறை மா அதிபர் காரியாலயம் போன்றவற்றிலும் முறைப்பாடுகள் செய்திருக்கின்றேன். ஆனாலும் என் மகன் பற்றிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய பிரதமராக இருக்கின்ற மகிந்த ராஜபக்ச அதனைவிட நவநீதம்பிள்ளை யிடமும் நேரடியாகச் சென்று கடிதம் கொடுத்திருந்தேன். இவ்வாறு பல்வேறு இடங்களில் முறைப்பாடுகளை கொடுத்திருக்கின்றோம். ஆனாலும் எம் மகன் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்று  எதுவுமே தெரியவில்லை.

ஆரம்பத்தில் நானும் என் கணவரும்  சேர்ந்தே  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவியாக அங்கம் வகித்துப் போராடி வருகின்றேன். தற்போது எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் தனியே சென்று தான் என் மகனுக்காகப்  போராடி வருகின்றேன்.

இவ்வருடம் 2021 ஆம் ஆண்டு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து எங்களுடைய வீட்டுக்கு வந்து  சந்தித்துக் கதைத்தவர்கள். அப்போது   நான் பல கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கு அவர்களால் பதில் கூறமுடியவில்லை. பின்னர்  பதில் எதுவும் கூறாமல் திரும்பிச் சென்றிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டுக்குள் நூற்றுக்குநூறு வீதம் என் மகன்  வந்திட்டார். அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியது அரசாங்கத்தின் கடமைதான். நாங்கள் அரசாங்கத்திடம் பாதுகாப்புக் கருதி ஒப்படைத்த பிள்ளையைத் தானே மீட்டுத் தருமாறு கேட்கின்றோம். பிள்ளைக்கு என்ன நடந்தது? எம் பிள்ளை எங்கே? எனக் கேட்க வேண்டிய தாய், தகப்பன் என்ற  உரிமை எங்களுக்கு இருக்கின்றது. பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதிலிருந்து அவர்கள் தப்ப முடியாது.

எம் பிள்ளையைத் தொலைத்துவிட்டு மனநிலை பாதிக்கப்பட்டே நாங்கள் இருக்கின்றோம். ஏனைய பிள்ளைகள் திருமணம் முடித்து விட்டார்கள். தற்போது வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் தனியே தான் இருக்கின்றோம். எங்களைப் பார்ப்பதற்கு எம் மூத்த மகனை  மீட்டு தாருங்கள். வயது முதிர்ந்து போனாலும் எம் கடைசி காலத்தில் மகனுடன் வாழவேண்டும்.

நாங்கள் நீதி, நியாயம் தர்மத்தின்படியே போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். எமது பிள்ளைக்கு என்ன நடந்தது? பிள்ளை எங்கே? என்றே கேட்கின்றோம். நூற்றுக்கு நூறு வீதம் பிள்ளை இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் பிள்ளையைத் தேடி வருகின்றோம். என்ரை பிள்ளையை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் போது வயது 32. ஆனால் இப்போ 12 வருடம் கடந்திட்டுது ஆனால் எம் பிள்ளையின் நிலை என்ன என்றே தெரியாது. எம் பிள்ளையை எப்பிடியாவது மீட்டு தாருங்கள் எம் பிள்ளை எங்களுக்கு வேணும்.”

என தன் பிள்ளையை நினைத்து அந்த அம்மா கூறியபோது, அவரின் மனதில் இருந்த வலிகளை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆசையாகப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையை இராணுவத்தினரிடம் பறிகொடுத்துவிட்டு, இன்று ஆறுதல் கூறி அரவணைக்க யாருமில்லாமல் தள்ளாடும் முதுமையில் தனிமரமாய் தம் மகனை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறார்கள். இவர்களின் காத்திருப்புக்கள் நிறைவேறுமா?  அல்லது  இவர்களின் காத்திருப்புக்கள் கனமானதா?

Exit mobile version