தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்

கொழும்பு – மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 29 கைதிகளை சந்திப்பதற்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நேற்று கொழும்பிற்கு வருகை தந்து, சிறைச்சாலையிலுள்ள தங்கள் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

சுமார் 10 முதல் 27 வருடங்கள் வரையான காலம் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகளாக வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பேரப் பிள்ளைகளை இதுவரை கண்டிராத, தமது மருமகள்களை இதுவரை கண்டிராதவர்களும் சிறைச்சாலைகளில் உள்ளதாக முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

”தமிழ் அரசியல் கைதியாக இருக்கின்ற ஒருவரின் தலையில் முடிகூட இல்லை. அவரது தலையில் அவரது பேரப்பிள்ளை பொம்மை காரை உருட்டி விளையாடியது. உண்மையில் மனதுக்கு சரியான வேதனையாக இருந்தது. அந்த பிள்ளைகளின் பாசம், ஏக்கங்கள், இந்த தவிர்ப்புகளோடு வெளியில் இருக்கின்ற உறவுகள் இருக்கின்றார்கள். அதேபோன்று உள்ளே இருக்கின்றவர்களும் அதே பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வலிகளை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை”, என முருகையா கோமகன்  தெரிவித்துள்ளார்.